You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகிழ்ச்சியாக இருக்க ஐந்து வழிகள்
- எழுதியவர், ஈவா அன்டிவரோஸ்
- பதவி, பிபிசி உலக சேவை
மார்ச் 20ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், மகிழ்ச்சியாக நீங்கள் உணரவில்லையா? கவலை வேண்டாம். நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க உண்மையிலேயே கற்றுக்கொள்ள முடியும்.
இசைக்கலைஞர்கள், தடகள விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து, தங்களை மேம்படுத்தி, வெற்றியடைவதுபோல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
"மகிழ்ச்சியாக இருப்பது திடீரென நடந்து விடுவதல்ல. அதனை மேம்படுத்த பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரபலமான உளவியல் மற்றும் நல்வாழ்க்கை பாடம் நடத்தும் பேராசிரியர் லாரி சாண்டோஸ்.
கவலையை புறந்தள்ளி வாழ வழிகாட்டுவதற்கு சாண்டோஸ் சரியான நபராவார்.
317 ஆண்டுகள் வரலாறு உடைய யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் லாரி சாண்டோஸ் நடத்தகின்ற உளவியல் மற்றும் நல்வாழ்க்கை பாடம் மிகவும் பிரபலமானதாகும்.
1,200 மாணவர்கள் இந்த பாடம் படிக்க பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்தது வரலாற்று பதிவானது.
"மகிழ்ச்சியாக இருப்பதற்கு தொடர் முயற்சி தேவைப்படுகிறது. இது எளிதல்ல. ஆனால், இதனை அடைய முடியும்" என்கிறார் லாரி சாண்டோஸ்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள் இதோ:
1.நன்றி தெரிவிக்க வேண்டியவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்யவும்
யாருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு வாரமும் எழுத சாண்டோஸ் அவரது மாணவர்களை கேட்டுக்கொள்கிறார்.
இதுதான் நன்றி தெரிவிக்க வேண்டியவரின் பெயர் பட்டியல்.
"இது எளிதாக தோன்றலாம். இதனை ஒழுங்காக செய்து வரும் மாணவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்று சாண்டோஸ் தெரிவிக்கிறார்.
2.நன்றாக தூங்கவும்
ஒவ்வோர் இரவும், முழு வாரமும் எட்டு மணிநேரம் தூங்குவதுதான் சவால் நிறைந்தது என்கிறார் சாண்டோஸ்.
இந்த எளிமையாக தோன்றலாம். ஆனால், அதிகமாக தூங்குவது அழுத்தங்களில் இருந்து நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களை நன்றாகவே குறைத்து நேர்மறை நடத்தையை மேம்படுத்துகிறது என்று சாண்டோஸ் தெரிவிக்கிறார்.
3.தியானம் செய்யவும்
ஒவ்வொரு நாளும் 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும்.
மாணவராக இருந்த வேளையில் ஒழுங்காக தியானம் செய்து வந்ததால் நன்றாக உணர்ந்ததாக தெரிவிக்கிறார் சாண்டோஸ் .
இப்போது பேராசிரியராக இருக்கும் அவர், முழு கவனத்தோடு செய்கின்ற எல்லா செயல்களிலும் தியானமும், பிற செயல்பாடுகளும் மகிழ்ச்சியாக இருக்க உதவுவதை பல்வேறு கற்றல் வழிமுறைகள் மூலம் மேற்கோள்காட்டி சொல்லி கொடுக்கிறார்.
4.குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் அதிக நேரம் செலவிடுங்கள்
உங்களது குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நல்ல முறையில் நேரம் செலவிடுவது தரும் பலன்கள் தொடர்பாக புதிய ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சாண்டோஸ் தெரிவிக்கிறார்.
நாம் விரும்புகிறவர்களோடு நேரம் செலவிடுவது அல்லது ஆரோக்கியமான உறவுகள் மற்றும் சமூக தொடர்புகளை கொண்டிருப்பது உளவியல் ரீதியாக நல்வாழ்வை கணிசமாக மேம்படுத்தும்.
"இதற்கு அதிக கஷ்டப்பட வேண்டாம். அனைவரோடும் நிகழ்காலத்தை முழுமையாக வாழுங்கள். உங்கள் நேரத்தை எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பதை கருத்தில் கொண்டிருங்கள்," என்கிறார் சாண்டோஸ்
உங்களுக்கு மகிழ்ச்சியான நேரம் மிகவும் முக்கியமானது. "பல நேரங்களில் நம்மிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று அடிக்கடி நாம் எண்ணி பார்ப்போம். நம்மிடம் எவ்வளவு நேரம் உள்ளது என்பதற்கும் நம்மிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதற்கும் நெருக்கமான தொடர்புள்ளது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
5.குறைவான சமூக வலைதளங்கள் மற்றும் அதிக உண்மையான தொடர்புகள்
சமூக வலைதங்கள் உங்களுக்கு போலி மகிழ்ச்சியை வழங்கலாம். அதனால் அடித்து செல்லப்படாமல் இருப்பது முக்கியமானது என்று சாண்டோஸ் தெரிவிக்கிறார்.
"இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர், அவற்றை பயன்படுத்தாதோரைவிட மகிழ்ச்சி குறைவாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன" என்கிறார் அவர்.
உங்களுக்கு உதவுமா பாருங்கள்:
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அதிக நன்றியுணர்வோடு வாழ தொடங்குங்கள், இரவில் நன்றாக தூங்குங்கள், உங்கள் மனதில் குழப்பங்களை ஒழியுங்கள், விரும்புவரோடு நல்லுறவு கொள்ளுங்கள்.சமூக வலைதளங்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
யேல் மாணவர்களிடம் இது செயல்படுகிறது என்றால், உங்களுக்கும் இது உதவலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்