You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: ‘எனக்கு முன்பே தெரியும்’ என்கிறார் 'பார்' நாகராஜ் - பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், மு.நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த ஆண்டே எனக்கு இது குறித்து தெரியும். என் நண்பரின் தங்கையும் பாதிக்கப்பட்டிருந்தார். நான் போலீஸிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினேன். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார் பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ்.
பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், போலீஸ் தரப்பு மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை பிபிசி தமிழ் சந்தித்தது.
அவர்கள் பிபிசி தமிழிடம் கூறியவற்றை பல்வேறு தரப்புகளிடம் உறுதி செய்த தரவுகளை மட்டும் இங்கே தொகுத்து இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம்.
'சபரி அண்ணன் வீடா?'
பிபிசி தமிழ் செய்தியாளர் பொள்ளாச்சி சென்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 15) பாலியல் தாக்குதல் வழக்கில் கைதான சபரிராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்கிறது என்பதை அறிந்து சபரிராஜன் வீடு இருக்கும் பகுதிக்கு சென்றோம். அவர் வீட்டிற்கு ஓர் ஆட்டோ ஓட்டுநரிடம் வழி கேட்டபோது, அவர், "யாரு சபரி அண்ணன் வீடா?" என்று கூறி சபரி வீட்டிற்கு வழி காட்டினார். அந்த நான்கு பேரையும் அவர்கள் இருந்த பகுதியில் மரியாதைக்குரியவர்களாகவே பார்த்தனர் என்பதை களத்தில் இருந்தபோது காண முடிந்தது.
பிபிசி தமிழ் செய்தியாளர் அந்த பகுதியில் விசாரித்தவரையில் அந்த நான்கு பேர் மீதும் அக்கம்பக்கத்தினர் பெரிதாக எந்த குற்றச்சாட்டுகளையும் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் வாழ்க்கைத்தரம் கடந்த சில ஆண்டுகளில் வியத்தகு வகையில் மாறியது என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
என்ன நடந்தது?
கீழ்கண்ட தகவல்கள் அந்தப் பெண் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின்படி, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று அந்த மாணவியின் நண்பரான சபரிராஜன் என்ற ரிஸ்வந்த் தன்னை பொள்ளாச்சியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் வந்து சந்திக்கும்படி அழைத்திருக்கிறார்.
அன்று மதியம் அந்தப் பெண் அங்கு சென்றபோது காருடன் நின்றிருந்த சபரிராஜன், அதில் ஏறும்படி கூறினார். காரை திருநாவுக்கரசு என்பவர் ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில் அந்தப் பெண்ணும் சபரிராஜனும் அமர்ந்துகொண்டனர். நடுவழியில் வசந்தகுமார், சதீஷ் ஆகிய இருவரும் ஏறிக்கொண்டனர்.
கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்த அவர்கள், அவரிடமிருந்த 20,000 ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டனர். தாங்கள் விரும்பும்போதெல்லாம் தங்களை வந்து சந்தித்து, தாங்கள் சொல்லுபடியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும்; கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும்; இல்லாவிட்டால் அந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டியவர்கள், நடுவழியில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டனர்.
அந்தச் சம்பவத்தை உடனடியாக அந்தப் பெண் வீட்டில் சொல்லவில்லை. ஆனால், அடுத்தடுத்து போன் செய்து அந்த இளைஞர்கள் பணம் கேட்கவும், தன் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார் அந்தப் பெண்.
இதையடுத்து திருநாவுக்கரசையும் சபரிராஜனையும் தேடிப் பிடித்த அந்தப் பெண்ணின் சகோதரர், இருவரையும் அடித்து உதைத்து நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தார். அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தார். அந்த செல்போன்களில் மேலும் மூன்று பெண்களிடமும் இவர்கள் இதேபோல மிரட்டி எடுத்த வீடியோக்கள் இருந்தன. இதையடுத்தே பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான சபரிராஜன் என்ற ரிஷ்வந்த், இளம்பெண்களிடம் பழகி அவர்களைத் தனிமையான இடத்திற்கு வரவழைத்து கட்டாயப்படுத்தியோ, மயக்கியோ உறவுகொள்வதை மற்றவர்கள் மறைந்திருந்து வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். பிறகு அந்த வீடியோவையும் படங்களையும் காட்டி அந்தப் பெண்களிடமிருந்து பணம் பறித்துவந்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் சம்பவம் எப்படி வெளிவந்தது என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரின் நண்பர் விவரிக்கிறார். அவர் கேட்டுக்கொண்டதன் பெயரில் அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
கண்ணன், "நண்பரின் சகோதரி, சிலர் தன்னை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக தனது வீட்டில் கூறுகிறார். அவர் எங்களிடம் சொன்னவுடன் பிப்ரவரி பதினாறாம் தேதி, நானும் சில நண்பர்களும் திருநாவுக்கரசு மற்றும் அவர்களின் நண்பர்களை அழைத்து மிரட்டி அடித்து அந்த வீடியோக்கள் குறித்து கேட்டோம். முதலில் மறுத்த அவர்கள் பின் ஒப்புக் கொண்டார்கள்," என்கிறார்.
இந்த வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் நண்பர்கள் தாக்கினர். அதே நாளில் திருநாவுக்கரசு தவிர்த்த மூன்று பேர் அன்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, தாக்குதல் வழக்கில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, செந்தில், பாபு, மணி, வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. பிறகு இந்த வழக்கில் ஆளும் அ.தி.மு.கவின் உறுப்பினரான 'பார்' நாகராஜ் என்ற முத்துசாமி ஐந்தாவது நபராக சேர்க்கப்பட்டார். இதையடுத்து நாகராஜை கட்சியிலிருந்து அ.தி.மு.க. நீக்கியது.
'பண்ணை வீடா?'
பெண்கள் திருநாவுக்கரசின் பண்ணைவீட்டில்வைத்துதான் சிதைக்கப்பட்டதாக தொடர்ந்து பேசப்பட்டுவந்தது.
அந்த வீட்டை பார்வையிட்டோம். பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியில் இருக்கும் அந்த வீடு உண்மையில் அது பண்ணைவீடு இல்லை. சுற்றி நெருக்கமாக வீடுகள் உள்ளன.
அந்த பகுதியில் உள்ள சிலரிடம் பேசினோம், "பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். எப்போதாவது கார் வருவதை பார்த்திருக்கிறோம். ஊடகங்களில் வெளிவந்தபின்புதான் இவ்வளவு பெரிய விஷயம் நடந்தது இப்போது எங்களுக்கே தெரியும்" என்கிறார்.
'அரசியலாக்காதீர்கள்'
பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக அவர்களின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நம்மிடம் பேசினார், "பாதிக்கப்பட்ட பெண், அவருக்கான நியாயம் என்று இந்த வழக்கு பார்க்கப்படாமல், முழுக்க முழுக்க அரசியலாக பார்க்கப்பட்டதால்தான் பாதிக்கப்பட்ட பல பெண்கள் முன் வந்து புகார் கொடுக்கவில்லை." என்கிறார்.
அவர், "புகார் தெரிவித்த பெண் மிக தைரியமாக இருந்தார். குடும்பமும் அவரை அரவணைத்தது. ஆனால், அவரின் அடையாளம் போலீஸார் வெளியிடப்பட்டபின்புதான் அவர் அச்சப்பட தொடங்கினார். கல்லூரி செல்வதையும் நிறுத்திவிட்டார்." என்கிறார்.
இந்த வழக்கில் ஆளும் கட்சி அழுத்தம் இருப்பதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்டோம், இதனை மறுத்த அவர், இந்த வழக்கை மிக சரியான திசையில் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருவதாக கோபாலகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கம் பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவரர் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
'எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை'
எனக்கும் இந்த பாலியல் வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக தவறாக சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்கும் எனக்கும் தொடர்பில்லை என்கிறார் நாகராஜ்.
அவர், "திருநாவுக்கரசுவின் அம்மாவும், சபரிராஜன் வீட்டிலிருந்தும் தங்கள் மகனை யாரோ கடத்தி வைத்து பணம் கேட்கிறார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். இது தொடர்பாக விசாரிக்கதான் நான் சென்றேன். சென்ற இடத்தில் என் நண்பர்களுக்கும் அந்த பெண்ணின் சகோதரரின் நண்பர்களுக்கும் கைகலப்பு ஆகிவிட்டது. என்ன என்று விசாரித்தபின்தான் எனக்கு முழு தகவல் தெரிய வந்தது. பின் நான் அதிலிருந்து விலகிக் கொண்டேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனும் எனக்கு வேண்டப்பட்டவர்தான்." என்கிறார்.
மேலும் அவர், "இது இப்போது நடப்பதல்ல, கடந்த ஆண்டே என் நண்பரின் சகோதரியை சபரிராஜன் இவ்வாறாக ஆபாச படம் எடுத்திருக்கிறார். அந்த நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டதால், இது குறித்து சபரிராஜனிடம் கேட்டேன். முதலில் மறுத்த அவர், பின் ஒப்புக் கொண்டார். அந்த போட்டோகளையும் அழித்தார். இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் என்றேன். ஆனால், தன் சகோதரியின் வாழ்க்கை சிதைந்துவிட்யும் ஏன்று அவர் மறுத்துவிட்டார். சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் போது நான் விரிவாக அவர்களிடம் சொல்வேன்." என்கிறார்.
தற்போது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுவிட்டாலும், அந்த அமைப்பு முறைப்படி விசாரணையைத் துவங்க சில நாட்கள் ஆகும் என்பதால் தற்போதும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரே வழக்கை விசாரித்துவருகின்றனர்.
இது அனைத்தையும் கடந்து இந்த ஊர் மக்களின் பொதுவான கவலை ஒட்டுமொத்தமாக தங்கள் ஊர் பெயர் கெட்டுவிட்டது என்பதுதான்.
பகுதி இரண்டில் இந்த சம்பவத்தின் பின்னணி, இதற்கு பின்னால் இருக்கும் சமூக அரசியல் காரணிகள் குறித்து காண்போம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்