You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இராக் விமானத் தளத்தில் அமெரிக்க படைகளை தாக்கிய 10 ராக்கெட்டுகள்
இராக்கின் மேற்கு பகுதியில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள விமானத் தளம் ஒன்று பத்து ராக்கெட் குண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
அல் அசாத் விமானத் தளத்தின்மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறிப்பிடத் தகுந்த சேதங்கள் எதுவும் நிகழவில்லை என்று இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு பணிகளில் ஈடுபடாத ஓர் ஒப்பந்த ஊழியர், இந்த தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியினால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என இராக் பாதுகாப்புத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
இராக்கின் மேற்கு பகுதியில் உள்ள அன்பார் மாகாணத்தில், 'இஸ்லாமிய அரசு' என அழைக்கப்படும் ஜிகாதி குழுவை எதிர்த்து போராடும் இராக் படைகளுக்கு உதவும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படைகள் அல் அசாத் விமானத் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 7:20 மணிக்கு இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வெய்ன் மராட்டோ தெரிவித்துள்ளார்.
அந்த தளத்தின் வடகிழக்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல்-பாக்தாதி எனும் இடத்தில் இருந்து இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராக்கெட்டுகள் இரானில் தயாரிக்கப்பட்ட 122 எம்எம் அராஷ் ரக தாக்குதல் ராக்கெட்டுகள் என்று மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி முகமை கூறுகிறது.
'ஆபத்தான பின்விளைவுகள்'
கடந்த மாதம் இராக்கின் வடக்கு பகுதியில் இது போன்று நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் இதில் காயமடைந்தார்.
இந்த தாக்குதலுக்கு காரணம் இரானின் ஆதரவு பெற்ற ஷியா தீவிரவாதிகள்தான் என்று அப்போது குற்றம்சாட்டிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள அவர்களது நிலைகள் மீது பதில் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அமெரிக்க முதல் முதலாக ராணுவத் தாக்குதலில் ஈடுபட்டது இந்த நிகழ்வில்தான்.
இந்த தாக்குதல் இரான் மற்றும் இரான் சார்பாக செயல்படுபவர்களுக்கான எச்சரிக்கை என்று ஜோ பைடன் அப்போது தெரிவித்திருந்தார்.
ஆனால் இராக்கின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாப்புலர் மொபிலைசேஷன் அமெரிக்காவின் நடவடிக்கையால் "வருங்காலங்களில் ஆபத்தான பின்விளைவுகள்" ஏற்படக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
இந்த துணை ராணுவப் படையில் ஷியா பிரிவு படை வீரர்களை அதிகமாக உள்ளனர்.
இராக்கில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ள போதும், திட்டமிட்டபடி வெள்ளியன்று அங்கு பயணம் செய்ய உள்ளதாக கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: