ஜோ பைடன் , கமலா ஹாரிஸ் ஆட்சியில் பதவி வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியினர் யார்?

    • எழுதியவர், ஸூபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் ஹூஸ்டனில் ஒரு பெரிய நிகழ்வை நடத்தினார். இதில் சுமார் 50,000 இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு 'ஹௌடி மோடி!' என்று அமைப்பாளர்கள் பெயரிட்டனர்.

2020 நவம்பரில் நடைபெறும் தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று பிரதமர் மோதி இந்த பேரணியில் கணித்திருந்தார். 2020 பிப்ரவரியில் ஹூஸ்டன் நிகழ்வைக் காட்டிலும் பிரம்மாண்டமான ஒரு நிகழ்வை அகமதாபாத்தில் நடந்தி, பிரதமர் மோதி டிரம்பை வரவேற்றார்.

நரேந்திர மோதி - டிரம்பின் ஆழ்ந்த நட்பை பார்த்தபோது, இந்திய - அமெரிக்க சமூகத்தின் வழக்கமான ஆதரவு நிலை ஜனநாயகக் கட்சியிலிருந்து குடியரசுக் கட்சியை நோக்கி நகர்கிறது என்று தோன்றியது.

தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, குடியரசுக் கட்சி மீதான இந்த விருப்பம் முழு ஆதரவாக மாறவில்லை என்று தெரியவந்தது. தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி 2016-ஐ ஒப்பிடும்போது குடியரசுக் கட்சிக்கு, சற்றே அதிகமான இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் கிடைத்தன.

ஆனால் இந்திய-அமெரிக்கர்களில் 72 சதவிகிதம் பேர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு வாக்களித்தனர்.

'ஹௌடி மோடி' நிகழ்ச்சி பலனளிக்கவில்லை

ஹௌடி மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.ஆர் .ரங்கசாமி, 'இந்தியாஸ்போரா' அமைப்பின் நிறுவனர் ஆவார். பேரணியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் முதல் தலைமுறை இந்திய - அமெரிக்கர்கள் என்றும் அவர்கள் 2016 ல் டிரம்பிற்கு ஆதரவளித்தனர் என்றும் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமக்கள் நாட்டின் 32 கோடி மக்கள் தொகையில் 1.5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளனர். ஆனால் அவர்கள் அமெரிக்காவின் வெற்றிகரமான சமூகங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டில், இவர்களின் சராசரி வருமானம் ஒரு நபருக்கு ஒரு லட்சம் டாலராக இருந்தது. இது தேசிய சராசரியின் இரண்டு மடங்கிற்கும் சற்றே குறைவு. இந்த சமூகம் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டிற்கும் பெருவாரியாக தேர்தல் நன்கொடைகளை அளிக்கிறது. எனவே அமெரிக்க அரசியல் தலைவர்கள் இந்த சமூகத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளார்கள்.

சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச தொழில்நுட்ப மையமாக உருவெடுத்த 'சிலிகான் வேலி'யின் வளர்ச்சியில் தனது பெரும் பங்களிப்புக்காக இந்த சமூகம் நற்பெயரைப் பெற்றது.

முன்னதாக, உள்ளூர் அமெரிக்கர்கள், கல்வி, கடின உழைப்பு மற்றும் வணிக வளர்ச்சி ஆகியவற்றில் இந்த சமூகத்தின் பங்களிப்பையும், திறனையும் ஒப்புக்கொண்டனர். இந்தத் தேர்தலிலும் இந்திய - அமெரிக்க வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சியை கைவிடவில்லை.

இதற்கு ஒரு பெரிய காரணம் கமலா ஹாரிஸ். அவரது மறைந்த தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் அவரது தந்தை கரீபியன் நாடான ஜமைக்காவை சேர்ந்தவர். இதன் விளைவாக, ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் குழு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களை தங்களின் நிர்வாக குழுவில் இணைப்பதாக பரிந்துரைத்துள்ளது அல்லது ஏற்கனவே நியமித்துள்ளது.

அமெரிக்க அமைப்பின்படி, பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை செனட் அங்கீகரிக்க வேண்டும். இந்த அணியில் 13 பெண்கள் உள்ளனர். மருத்துவர்களின் எண்ணிக்கையும் இதில் அதிகம் உள்ளது. இவர்களில் பலருக்கு ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது மற்றும் கிட்டத்தட்ட அனைவருமே முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்.

நீரா டாண்டன்: மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநர்

துணை அதிபர் கமலா ஹாரிஸுக்குப் பிறகு மிக முக்கியமான இந்திய வம்சாவளி அதிகாரியாக நீரா டாண்டன் இருப்பார். அமெரிக்க முன்னேற்ற மையத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நீரா டாண்டனை, மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குநராக ஜோ பைடன் தேர்ந்தெடுத்தார்.

செனட் அவரது நியமனத்தை உறுதிப்படுத்தினால், இந்த அலுவலகத்திற்கு தலைமை வகிக்கும் கறுப்பினத்தை சேர்ந்த முதல் பெண்மணியாக அவர் இருப்பார். மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குநராக, நிர்வாகத்தின் செலவு மற்றும் கொள்கை திட்டமிடல்களுக்கு அவர் பொறுப்பேற்பார்.

நீரா டாண்டனின் பெற்றோருக்கு இந்தியாவுடன் உறவு இருந்தது. ஆனால் அவர்கள் விவாகரத்து செய்த பிறகு, நீராவை அவரது தாயார் வளர்த்து, அவரை கவனித்து வந்தார். சமீபத்தில் ஒரு ட்வீட்டில் தனது வறுமையின் நாட்களை நினைவு கூர்ந்த நீரா டாண்டன், தனது பெற்றோருக்கு இடையே விவாகரத்து நடந்தபோது தான் வயதில் சிறியவளாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அவரது தாயார் அரசாங்க உணவு மற்றும் குடியிருப்பு ஆதரவு திட்டங்களை நம்பியிருந்தார் என்றும் அவர் கூறினார்.

"இதேபோன்ற அரசு திட்டங்களுக்கு உதவவும், எங்களைப் போன்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் நான் இப்போது நியமிக்கப்பட்டுள்ளேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையை அடைய செனட்டின் ஒப்புதலை அவர் பெற வேண்டும். குடியரசுக் கட்சியின் பல தலைவர்களுக்கு எதிராக அவர் ட்வீட்களை வெளியிட்டுள்ளதால், இந்த ஒப்புதல் நடவடிக்கை சிரமமாக இருக்கக்கூடும்.

அவர் பரிந்துரைக்கப்பட்டதிலிருந்து இதுபோன்ற 1,000 க்கும் அதிகமான ட்வீட்களை நீக்கியுள்ளார். ஆனால் குடியரசுக் கட்சி அவரது செயலை மறக்கவில்லை. கட்சியின் மூத்த தலைவரும், செனட்டருமான லிண்ட்சே கிரஹாம் அவரது பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் அவரை 'விசித்திரமான மற்றும் மன சமநிலையற்ற' நபர் என்று அழைத்தார்.

மற்றொரு கட்சி செனட்டர் அவரை 'கதிரியக்கத் தன்மையுள்ள நபர்' என்று அழைத்தார், அதாவது அவர் பிளவுபடுத்தும் ஆளுமை கொண்டவர் ஆகவே, அவரிடமிருந்து விலகி இருப்பதே நல்லது என்று தெரிவித்தார்.

டாக்டர் விவேக் மூர்த்தி: அமெரிக்கன் சர்ஜன் ஜெனரல்

கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பது பைடன் நிர்வாகத்தின் முதல் முன்னுரிமையாக இருக்கும். டாக்டர் விவேக் மூர்த்தி தலைமையிலான சில இந்திய வம்சாவளி மருத்துவர்கள் இந்த முயற்சியை முன்னெடுத்து செல்கின்றனர்.

முர்த்தியின் பங்கு இதில் மிக முக்கியமானதாக இருக்கும். அதிபரின் கோவிட் -19 பணிக்குழுவின் இணைத் தலைவராகவும், அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரலாகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

2014 முதல் 2017 வரை இந்த பதவியில் அவர் ஏற்கனவே பணியாற்றியுள்ளார். அவர் 1977 இல் , பிரிட்டனின் யார்க்க்ஷயரின் ஹடர்ஸ்ஃபீல்ட் நகரில் பிறந்தார். ஆனால் தனது மூன்றாவது வயதில் தனது பெற்றோருடன் மியாமிக்கு குடிபெயர்ந்தார்.

அவரது பெற்றோரும் மருத்துவர்கள்.அவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். கோவிட் -19 பணிக்குழுவில் டாக்டர் டேவிட் கெஸ்லர் மற்றும் டாக்டர் மார்செல்லா நுனேஸ்-ஸ்மித் ஆகியோர் டாக்டர் மூர்த்தியுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

அதுல் காவ்டே

இந்த மூவருக்கும் மருத்துவர்களின் ஒரு குழு ஆதரவளிக்கும். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் காவ்டேயின் பெயர் முக்கியமானது. அவர் ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர் மட்டுமல்ல, 1998 முதல் நியூயார்கர் செய்தித்தாளுக்கு கட்டுரையும் எழுதி வருகிறார்.

அதுல் காவ்டேயின் பெற்றோரும் மருத்துவர்கள்தான். அவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

காவ்டே, ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார். கூடுதலாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் அறிஞராக அரசியல் மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றார். அவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சுகாதார பணிக்குழுவின் பிரிக்கமுடியாத பகுதியாக இருந்தார்.

செலின் கவுண்டர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செலின் கவுண்டரின் பெயரும் இந்த பணிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

செலின் கவுண்டர் என்ற பெயர் தமிழகத் தலைவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் ட்வீட் செய்து அவரை வாழ்த்தியுள்ளனர். கமலா ஹாரிஸைப் போலவே, அவரது குடும்பத்தில் பாதி பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இவரது தந்தை டாக்டர் ராஜ் நடராஜன் கவுண்டர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வருகிறார். அவரது தாயார் பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்தவர்.

உஸ்ரா ஜியா - ஒரே முஸ்லிம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே முஸ்லிம் அமெரிக்கர் உஸ்ரா ஜியா, வெளியுறவு அமைச்சகத்தில் முக்கிய பங்கு வகிப்பதற்காக பைடனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் வெளியுறவு அமைச்சகத்தில் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் அதிபர் டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக அவர் அதிருப்தியுடன் ராஜினாமா செய்தபோது, அவரது பணி வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அவரது நண்பர்கள் கருதினர்.

ஆனால் ஜோ பைடன் , வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பொறுப்பை அவருக்கு மீண்டும் வழங்கியுள்ளார்.

செனட் அவரது பெயரை அங்கீகரித்தால், மனித உரிமைகள் தொடர்பான நிர்வாகத்தின் கொள்கைகளில் அவர் முக்கிய பங்கு வகிப்பார். "அமெரிக்கா பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளுக்கு பெயர் பெற்றது என்றும் இந்த கொள்கைகளை பாதுகாப்பதற்கான முயற்சியை தான் தொடரப்போவதாகவும்" இந்த அறிவிப்பிற்குப்பிறகு அவர் ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது மூதாதையரின் நாடான இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார். அவரது குடும்பம் இந்திய நிர்வாக காஷ்மீரில் இருந்து அமெரிக்கா சென்றது.

வனிதா குப்தா: இணை அட்டர்னி ஜெனரல்

45 வயதான வனிதா குப்தா பிரபல சிவில் உரிமை ஆர்வலராக நாடு முழுவதும் அறியப்படுகிறார். ஒபாமா நிர்வாகத்தின் கீழ் நீதித்துறையின் சிவில் உரிமைகள் பிரிவின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார்.

"அவர் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படும் சிவில் உரிமை வழக்கறிஞர்களில் ஒருவர்," என்று வனிதா குப்தாவைப் பற்றி ஜோ பைடன் கூறினார்.

வனிதா இரண்டாம் தலைமுறை இந்திய - அமெரிக்கர். இன பாகுபாட்டால் பாதிப்புக்கு உள்ளான அவர், பின்னர் அதற்கு எதிராக போராடுவதில் தற்போது முன்னணியில் உள்ளார்.

வழக்கமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை அமெரிக்கர்களுக்கு இந்தியாவுடன் அதிக தொடர்பு இருப்பதில்லை. ஆனால் வனிதா தனது பெற்றோரின் நாட்டுடன் இன்னும் இணைந்திருக்கிறார்.

சமூக நீதி குறித்து தனக்கு ஊக்கம் அளித்த ஒரு சிறப்புச் சம்பவம் குறித்து வனிதா குப்தா நியூயார்க் டைம்ஸுடன் பேசினார்.

லண்டனில் உள்ள ஒரு மெக்டொனால்டு விற்பனை நிலையத்திற்கு வெளியே என் குடும்பத்தினருடனும் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில், சிலர் அடுத்த மேசையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் " ஏ கறுப்பர்களே, உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்," என்று சொன்னார்கள்.

"இது என்னை மிகவும் அதிரவைத்த சம்பவம் இது என் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது," என்று வனிதா குறிப்பிட்டார்.

வேதாந்த் படேல்

பைடன் நிர்வாகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 20 இந்திய வம்சாவளியினரில் வேதாந்த் படேல் உட்பட இன்னும் பலரின் பெயர்கள் உள்ளன.

வேதாந்த் படேல் அதிபர் மாளிகை ஊடகப் பிரிவின் இணைச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ளார். செனட் அவரது பெயரை உறுதிப்படுத்த வேண்டியதில்லை. பைடனின் தேர்தல் பிரசார குழு உறுப்பினராக இருந்த அவர் தற்போது பைடனின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: