You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்: மின்வெட்டுக்கு காரணம் என்ன?
பாகிஸ்தான் முழுவதும் ஒரே நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் நாடு முழுவதும் இருளில் மூழ்கியது.
எனினும், கடந்த சில மணிநேரங்களாக படிப்படியாக சில நகரங்களில் மின்சார சேவை இயல்பு நிலைக்கு வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் உள்ளூர் நேரப்படி, நள்ளிரவு நேரத்தில் நாடு முழுவதும் இந்த மின்வெட்டு ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் நாடுமுழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகக் கூடும் என்பதால் மக்கள் அமைதி காக்க வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
பாகிஸ்தானை பொறுத்தவரை, மின்வெட்டு என்பது சாதாரணமான நிகழ்வு. இதனால் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அடிக்கடி ஜெனரேட்டர்களின் உதவியுடனே செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தானின் மின்சாரத்துறை அமைச்சர் உமர் அயூப் கான், "நாட்டின் முக்கியமான மின்சார பரிமாற்ற அமைப்பில் அதிர்வெண் திடீரென சரிந்ததால் நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நகரங்களில் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களும் அடக்கம். இந்த நிலையில், குஜராத் மாநிலம் மற்றும் பெஷாவர் நகரம் என நாட்டின் சில பிராந்தியங்களில் மின்சார சேவை சீரமைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் உமர் அயூப் கான் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நாடுதழுவிய மின்வெட்டுக்கான காரணத்தை துல்லியமாக அறிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தொடர்கதையாக இருந்துவரும் மின்சார பற்றாற்குறையின் காரணமாக அங்கு சில பகுதிகளில் ஒரு நாளின் பெரும்பகுதி நேரம் மின்வெட்டு நிலவி வருகிறது. நீண்டகாலமாக நிலவி வரும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி பாகிஸ்தான் மக்கள் சமீபத்தில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
முன்னதாக, 2013ஆம் ஆண்டு தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஒரு மின்னுற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் மின்சார கட்டமைப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: