"புதிய பேக்கேஜ், விலை 45 ஆயிரம்தான்" - கென்யா கள்ளச்சந்தையில் நடக்கும் குழந்தை வியாபாரம்

பிபிசி ஆப்பிரிக்கா ஐ புலனாய்வு, கடந்த மாதம் கென்யா தலைநகர் நைரோபியில் வளம் கொழித்து வரும் குழந்தைகள் கள்ளச்சந்தை விற்பனையை வெளிப்படுத்தியது. அந்த செய்தி வெளி வந்த பிறகு ஏழு கடத்தல்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், அந்த சட்ட விரோத பேரத்தில் ஈடுபட தள்ளப்பட்ட மறுபக்கத்தின் கதை என்ன? பெற்ற குழந்தையை ஒரு தாயாரால் எப்படி விற்க முடிகிறது, அதற்கு அவரை தள்ளும் நிலை என்ன?

அடாமா தன் கிராமத்தில் வாழ திரும்பி வந்துவிட்டார். ``வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருந்தது'' என்கிறார் அவர்.

கென்யா தலைநகர் நைரோபியில் கள்ளச் சந்தையில் குழந்தைகள் விற்கப்படுவது குறித்து கடந்த மாதம் பிபிசி ஆப்பிரிக்கா ஐ - அம்பலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து குழந்தைகளைக் கடத்தியதாக ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால் இந்த சட்டவிரோத வியாபாரத்தில் மறுபகுதியாக இருக்கும் அந்தப் பெண்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஒரு தாயார் இப்போதும் தன் குழந்தையை விற்க முன்வரும் காரணம் என்ன?

தன் பெற்றோர்கள் இருந்த வரையில் வாழ்க்கை எளிதாக இருந்தது என்று அடாமா கூறுகிறார். பணம் குறைவாக இருந்தது. வாய்ப்புகள் குறைவாக இருந்தன. ஆனால் அதற்கேற்ற வாழ்க்கை முறை இருந்தது. பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தார். அதில் மகிழ்ச்சியாக இருந்தார். அவருக்கு சில கவலைகள் இருந்தன. அவர் 12 வயதாக இருந்தபோது தந்தை இறந்தார். சில ஆண்டுகளில் தாயும் காலமாகிவிட்டார்.

``அதற்குப் பிறகு வாழ்க்கை சிரமமாகிவிட்டது'' என்று அவர் கூறினார். கென்யாவில் மேற்கில் ஊரகப் பகுதியில் தன் கிராமத்தில் இருந்து நம்மிடம் பேசிய அவர், ``பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேறி, வாழ்க்கைக்காக வழி தேட வேண்டியிருந்தது'' என்று தெரிவித்தார்.

22வது வயதில் ஓர் ஆணை அடாமா சந்தித்தார். அவர் மூலம் கருவுற்றார். ஆனால் பெண் குழந்தை பிறந்த 3 நாட்களில் அவர் இறந்து போனார். அவருடைய தனிமை அதிகரித்தது. குழந்தையை 18 மாதங்கள் வரை வளர்த்தார். இருவரையும் பார்த்துக் கொள்ள, கணிசமான வருவாய் அவருக்குத் தேவைப்பட்டது. எனவே, வயதான தன் பாட்டியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு, வேலை தேடி நைரோபி சென்றார்.

``உன் குழந்தைக்காக வாழ்க்கையைத் தேடி செல்கிறாய் என்பதை நினைவில் வைத்துக் கொள்'' என்று பாட்டி கூறியிருக்கிறார்.

நைரோபி சென்ற அடாமா தெருவோரம் தர்பூசணி விற்கத் தொடங்கினார். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. வீட்டில் வைத்துவிட்டு வரும் பணத்தை, அவருடன் தங்கியிருந்த இன்னொரு பெண் திருடிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அந்த நகரில் வாழ்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. சில காலம் கழித்து, கூடுதல் வாடகையில் வேறொரு இடத்தை அடாமா பார்த்தார். அதற்காக புதிய வேலையில் சேர்ந்தார். கட்டட வேலையில் கூடுதல் சம்பளம் கிடைத்தது. அங்கே ஆண் ஒருவரை அவர் சந்தித்தார். சில காலம் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தனக்குக் குழந்தை வேண்டும் என்று அவர் கூறியதாக அடாமா தெரிவித்தார்.

தன்னுடைய மகளை அழைத்து வர சம்மதித்தால், நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அவரிடம் அடாமா நிபந்தனை விதித்திருக்கிறார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். அடாமா கருவுற்று 5 மாதங்கள் வரையில் அவர் வாடகை மற்றும் செலவுகளை கவனித்துக் கொண்டார். வீட்டுக்கு சாப்பாடு வாங்கி வந்தார். தன் மகளை நகருக்கு அழைத்துச் செல்வதற்கு சரியான தருணத்திற்காக அடாமா காத்திருந்தார். திடீரென ஒரு நாள் சென்ற அந்த ஆண் மறுபடியும் திரும்பி வரவே இல்லை.

கென்யாவில் ஏழ்மையில் இருக்கும் பெண்கள் சட்டவிரோத செயல்களை நோக்கி செல்லும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

ஒருவருடைய செலவுக்கே கஷ்டமாக இருக்கும் போது, குழந்தையையும் அந்த சூழலுக்குள் கொண்டு வருவதில் ஒரு தாய்க்கு என்ன மனநிலை இருக்கும் என்பதை பெண்களால் புரிந்து கொள்ள முடியும். குழந்தையை அறிமுகம் இல்லாதவர்களுக்கு விற்க பெரும்பாலானவர்கள் யோசிக்க மாட்டார்கள். ஆனால், கென்யாவில் ஏழ்மையில் உள்ள கர்ப்பிணிகள் சிலர், சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் குழந்தையை விற்பது என்பது, உயிர் வாழ்வதற்கான கடைசிகட்ட வாய்ப்பாக இருக்கிறது.

குழந்தைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மிகக் குறைவான தொகைகள் தருகின்றனர். சாரா இரண்டாவது முறையாகக் கருத்தரித்தபோது அவருக்கு வயது 17. குழந்தைக்கு செலவழிக்க போதிய பணம் அப்போது இல்லை என்கிறார் அவர். 3,000 கென்ய ஷில்லிங்குகள் (சுமார் 20 பவுன்ட்கள்) கொடுத்த ஒரு பெண்ணிடம் ஆண் குழந்தையை விற்றிருக்கிறார்.

``அப்போது நான் சிறுவயதாக இருந்தேன். நான் செய்வது தவறு என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து அது உரைத்தது. அந்தப் பெண்ணின் பணத்தைத் திருப்பித் தந்துவிட விரும்பினேன்'' என்று அவர் தெரிவித்தார்.

அதேபோன்ற தொகைக்குக் குழந்தைகளை மற்ற பெண்கள் விற்றிருப்பது தனக்குத் தெரியும் என்கிறார் அவர்.

``பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் பல சிறுவயதுப் பெண்கள் குழந்தைகளை விற்றுவிடுகிறார்கள். அவர் வீட்டில் இருந்து தாயாரால் விரட்டப்பட்டு ஆதரவற்றவராக இருக்கலாம் அல்லது பள்ளிக்கூடத்தில் இருக்கும் போதே கருத்தரித்திருக்கலாம். 15 அல்லது 16 வயதான சிறுமிக்கு நிறைய பிரச்னைகள் இருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.

``தங்களுக்குத் துணையாக யாரும் இல்லாத காரணத்தால், தங்கள் குழந்தையை மற்றும் எல்லாவற்றையும் சிறு வயதுப் பெண்கள் இழக்கிறார்கள்'' என்றார் அவர்.

சட்டபூர்வமாக தத்து எடுக்கும் நடைமுறை பற்றி அடாமாவுக்கு யாரும் சொல்லவில்லை. ``நான் ஒருபோதும் அதுபற்றி கேள்விப்பட்டது இல்லை'' என்று அவர் கூறினார்.

ஆப்பிரிக்காவில் பருவ வயதுப் பெண்கள் கருத்தரிப்பது அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக கென்யா இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வாழ்க்கைக்காக சில பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டது, பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஆகிய காரணங்களால் கருத்தரிப்புகள் அதிகரித்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

``இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கியிருப்பதாக பல பெண்களும், சிறுமிகளும் கூறினர். வேலை தேடி இளம் பெண்கள் நகரங்களுக்கு வந்து, தொடர்புகளில் சிக்கி கருத்தரிக்கிறார்கள். பிறகு அதற்குக் காரணமானவர் கைவிட்டுவிடுகிறார்'' என்று கென்யா மனித உரிமைகள் அமைப்பு வழக்கறிஞர் புருடென்ஸ் மியூட்டிசோ தெரிவித்தார். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கருத்தரிப்பு உரிமைகள் விஷயத்தில் இவர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

``கருத்தரிக்க காரணமாக இருந்தவர் செலவழிக்காத போது இந்தப் பெண்களும், சிறுமிகளும் வருமானத்துக்கு வேறு வழி தேட வேண்டியுள்ளது. அதனால் தான் குழந்தைகளை விற்க முன்வருகிறார்கள். எனவே தங்களுடைய தேவைக்கு இதன் மூலம் பணம் கிடைக்கிறது. அநேகமாக ஊரில் விட்டுவிட்டு வந்த குழந்தையின் தேவைக்கும் இதில் பணம் கிடைக்கலாம். இதை வெளிப்படையாக அவர்கள் சொல்வதில்லை. ஆனால் இந்தப் பிரச்சினை இருக்கிறது'' என்கிறார் அவர்.

கட்டட வேலை நடக்கும் இடத்தில், முடிந்த வரையில் தன் கர்ப்பத்தை அடாமா மறைத்து வந்தார். பாரமான சிமெண்ட் மூட்டைகளை சுமக்க முடியாமல் போகும் வரை மறைத்து வந்தார். பிறகு வீட்டு வாடகை தரும் அளவுக்கு அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை. வீட்டின் உரிமையாளர் 3 மாத காலம் பொறுத்துப் பார்த்துவிட்டு, பிறகு வெளியேற்றிவிட்டார்.

எட்டு மாத கர்ப்பிணியான அடாமா இரவில் கதவைத் திறந்து உள்ளே போய் தூங்குவார். காலையில் மற்றவர்களுக்கு முன்னதாக எழுந்து வெளியே சென்றுவிடுவார்.

``அந்த நாள் நல்லதாக இருந்தால் எனக்கு சாப்பாடு கிடைக்கும். சில நேரம் நான் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு, பிரார்த்தனை செய்துவிட்டு தூங்கிவிடுவேன்'' என்று அடாமா கூறினார்.

சமீப ஆண்டுகளாக பருவ வயதுப் பெண்கள் கருத்தரிப்பது கென்யாவில் அதிகரித்து வருகிறது.

கென்யாவில் அடாமாவை போன்ற நிலையில் இருக்கும் ஒரு பெண் சிக்கினால், சட்டவிரோத தொழில் செய்வோரின் பிடியில் சிக்குவதற்கு பல காரணங்கள் உருவாகும். தாய் அல்லது குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருந்தால் தவிர, கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதம். அதனால் அபாயகரமான, அனுமதியில்லாத வாய்ப்புகளைத் தான் தேட வேண்டியுள்ளது. வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு பாலியல் மற்றும் கருத்தரிப்பு ஆரோக்கியம் குறித்து குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு கிடையாது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதற்கான வாய்ப்பு இல்லை. சட்டபூர்வ தத்து கொடுத்தல் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது.

``விரும்பத்தகாத கருத்தரித்தல்களில் சிக்கும் பெண்கள் மற்றும் சிறுவயது பெண்களுக்கு அரசுத் தரப்பில் எந்த ஆதரவும் கிடைப்பதில்லை'' என்று ஏழ்மை ஆரோக்கிய செயல்பாடு அறக்கட்டளையின் கென்யா திட்ட மேலாளர் இப்ரஹிம் அலி தெரிவித்தார். ``இந்தப் பெண்கள் இழித்து பேசப்படுகிறார்கள். குறிப்பாக கிராமங்களில் அவமானங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே அவர்கள் வெளியில் சென்றுவிடுகிறார்கள். அதனால் நகரங்களில் எளிதில் வசப்படும் சூழலுக்கு ஆளாகிறார்கள்'' என்றார் அவர்.

தன் குழந்தையை பாதுகாப்பாக கொடுப்பதற்கான சட்டபூர்வ நடைமுறைகள் பற்றி அடாமாவுக்கு எதுவும் தெரியாது. தத்து கொடுத்தல் நடைமுறை பற்றிய புரிதலும் இல்லை. ``எனக்கு எதுவுமே தெரியாது. அதுபற்றி எப்போதும் கேள்விப்பட்டதில்லை'' என்று அவர் கூறினார்.

சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய அவர் யோசித்தார். ஆனால் தன் மனசாட்சிக்குப் பயந்து அந்த எண்ணத்தை கைவிட்டார். பிறகு தானே உயிரை மாய்த்துக் கொள்ள யோசித்திருக்கிறார்.

``தண்ணீரில் குதித்து எப்படி தற்கொலை செய்து கொள்வது என்றும், மக்கள் என்னைப் பற்றி மறந்துவிடுவார்கள் என்றும் யோசிக்கத் தொடங்கினேன். எனக்கு மன அழுத்தம் அதிகமானது'' என்றார் அவர்.

ஆனால் சில வாரங்கள் கழித்து, பிரசவ தேதி நெருங்கிய சமயத்தில், அடாமாவை மேரி அவ்மா என்ற ஒரு பெண்ணிடம் ஒருவர் அறிமுகப்படுத்தினார். நல்ல உடைகள் உடுத்தி இருந்த அவர், கருக்கலைப்பு செய்யவோ அல்லது தற்கொலை செய்து கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். நைரோபியில் கயோலே என்ற குடிசைப் பகுதியில் தெருவோர கிளினிக் நடத்தி வருகிறார் மேரி அவ்மா. மறுநாள் கிளினிக்கிற்கு வருமாறு சொல்லி 100 ஷில்லிங்குகளை அடாமாவிடம் அவர் கொடுத்துச் சென்றார்.

கயோலே குடிசைப் பகுதியில் தன் கிளினிக்கில் மேரி அவ்மா. குழந்தைகளை வாங்கி லாபகரமாக விற்கும் தொழிலை இங்கு அவர் நடத்தி வருகிறார்.

தற்காலிக ஏற்பாடு போல இருக்கும் மேரி அவ்மாவின் கிளினிக் உண்மையான கிளினிக் கிடையாது. அது கயோலேவின் தெருவில் கடைகளுக்குப் பின்னால் உள்ள இரண்டு அறைகள் கொண்டதாக இருக்கிறது. அங்கே பெரும்பாலும் காலியான அலமாரிகள் உள்ளன. பழைய மருந்துகள் அதில் சிதறிக் கிடக்கின்றன. அதன் பின்னால் உள்ள அறையில் பிரசவம் பார்க்கிறார். அவ்மா தன் உதவியாளருடன் அங்கே அமர்ந்து குழந்தைகளை வாங்குவது, விற்பது ஆகியவற்றைச் செய்கிறார். குழந்தையை வாங்குவது யார், எதற்காக வாங்குகிறார் என்பது பற்றி அவர் கவலைப்படுவது இல்லை.

தன்னுடைய குழந்தையை வாங்க விரும்பும் தம்பதியினர் அன்பானவர்கள், கருத்தரிக்க முடியாமல் இருப்பவர்கள், குழந்தைக்கான ஏக்கத்தில் இருப்பவர்கள் என்று அடாமாவிடம் மேரி கூறியுள்ளார். ஆனால் உண்மையில் கையில் காசுடன் வரக் கூடிய யாராவது ஒருவருக்கு அடாமாவின் குழந்தையை மேரி அவ்மா விற்கவிருந்தார்.

தாம் ஏற்கெனவே நர்ஸ் ஆக வேலை பார்த்ததாக மற்றவர்களிடம் அவ்மா கூறுகிறார். ஆனால் மருத்துவ சாதனங்களைக் கையாளும் திறனோ அல்லது பிரசவத்தின் போது திடீரென தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்கான கருவிகள் வசதியோ அவரிடம் இல்லை. ``அவருடைய இடம் அழுக்காக இருக்கும். ரத்தத்தை அகற்ற சிறிய பாத்திரம் வைத்திருப்பார். பேசின் கிடையாது. படுக்கை சுத்தமாக இருக்காது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை'' என்று அடாமா கூறினார்.

ஒரு வாரம் கழித்து ஆரோக்கியமான ஆண் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து அடாமா அனுப்பி வைக்கப்பட்டார். கர்ப்பமாக இருந்தபோது வீட்டைவிட்டு வெளியேற்றிய உரிமையாளர் இப்போது இடம் கொடுத்தார். குழந்தையை அவர் கவனித்துக் கொண்டார். சில நாட்களில் மார்க்கெட்டில் மீண்டும் மேரி அவ்மாவை அடாமா சந்தித்தார். இன்னும் 100 ஷில்லிங்குகள் கொடுத்து, மறுநாள் கிளினிக்கிற்கு வருமாறு அவர் கூறியதாக அடாமா தெரிவித்தார். ``புதிய பேக்கேஜ் பிறந்துள்ளது, விலை 45 ஆயிரம்'' என்று குழந்தையை வாங்கக் கூடியவருக்கு அவ்மா செல்போனில் தகவல் அனுப்பினார்.

குழந்தையை வாங்குபவரிடம் கூறியவாறு, அடாமாவுக்கு மேரி அவ்மா 45 ஆயிரம் ஷில்லிங்குகள் - அதாவது 300 பவுன்ட்கள் தரவில்லை. அடாமாவுக்கு 10 ஆயிரம் ஷில்லிங்குகள் - அதாவது சுமார் 70 பவுன்ட்கள் தர அவ்மா முன்வந்தார். ஆனால் குழந்தையை வாங்கப் போவது யார் என்று மேரி அவ்மாவுக்கு தெரிந்திருக்கவில்லை. குழந்தைகள் சட்டவிரோத விற்பனை குறித்து ஓராண்டாக புலனாய்வு செய்வதன் ஒரு பகுதியாக பிபிசி செய்தியாளர் ஒருவர் அப்படி காத்திருந்தார்.

தற்காலிக கிளினிக்கிற்கு அடாமா மறுநாள் சென்றபோது, பின் அறையில் அமர்ந்து, மகனை கைகளில் வைத்து தாலாட்டிக் கொண்டிருந்தார். தனக்கு வேறு வாய்ப்பு வந்திருப்பதாக, குழந்தையை வாங்க வந்தவர் மெதுவான குரலில் அவரிடம் கூறினார். அடாமா மனம் மாறிவிட்டார். அன்றைக்கு கிளினிக்கில் இருந்து வெளியேறி அரசு நடத்தும் குழந்தைகள் இல்லத்திற்கு மகனை எடுத்துச் சென்றார். சட்டபூர்வமாக யாரும் தத்தெடுக்க வரும் வரையில் அந்த இல்லத்தில் குழந்தையை பராமரிப்பார்கள். இந்தச் செய்தியில் உள்ள விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு மேரி அவ்மாவை பிபிசி தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அடாமாவுக்கு இப்போது 29 வயதாகிறது. தான் வளர்ந்த அதே கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். சில நாட்களில் இப்போதும் பட்டினியாகத் தான் தூங்கச் செல்கிறார். வாழ்க்கை இன்னும் கடினமாகவே உள்ளது. அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் எப்போதாவது அவருக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தண்ணீரை மட்டுமே குடித்து வாழும் நிலையைத் தாண்ட அவர் போராடுகிறார். தன் கிராமத்திலேயே செருப்பு கடை திறந்து, நைரோபியில் இருந்து செருப்புகளை வாங்கி வந்து விற்க வேண்டும் என்று அடாமா விரும்புகிறார். ஆனால் அது தொலைதூர கனவாக இருக்கிறது. தன் மகன் எங்கிருக்கிறான் என்று அவருக்குத் தெரியாது. அதற்காக அவர் வருத்தப்படவும் இல்லை.

``என் குழந்தையை விற்பதில் எனக்கு மகிழ்ச்சி கிடையாது. அந்தப் பணத்தைத் தொடுவதற்குகூட நான் விரும்பவில்லை. அவனை ஒப்படைப்பதில் பணம் குறுக்கே வராதபோது, அது ஓ.கே. தான்'' என்று அடாமா கூறினார்.

தன் குழந்தையை எங்கே விட்டேன் என்று அவருக்குத் தெரியும். கர்ப்பமாக இருந்தபோது வெளியேற்றப்பட்ட வீட்டின் அருகில் உள்ள இல்லத்தில் தான் குழந்தையை விட்டு வந்தார். ``அந்தப் பகுதி பாதுகாப்பானது என்று எனக்குத் தெரியும். அவனை கவனித்துக் கொள்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்'' என்று அடாமா கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :