You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது
எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் பிரதமர் அபிய் அகமது.
பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள், முன்னதாக மிகாய்லி நகரத்தில் நுழைந்திருந்தன.
ராய்டர் செய்தி முகமையிடம் பேசிய டீ.ம.வி.மு. தலைவர், தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையைக் காக்க தொடர்ந்து போராடப்போவதாகவும், ஊடுருவல்காரர்களை கடைசி வரை எதிர்த்துப் போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சண்டையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது டீக்ரே பிராந்தியத்தின் மீது சுமார் ஒரு மாதம் முன்பு ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.
இப்பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீ.ம.வி.மு. தலைநகர் மிகாய்லியில் உள்ள எத்தியோப்பிய ராணுவத்தின் வடக்கு கட்டளைத் தளத்தை தாக்கியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலைத் தொடங்கினார் அவர்.
பிரதமர் என்ன சொல்கிறார்?
மிகாய்லியைப் பிடித்ததோடு ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாகவும் அபிய் அகமது அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர் "'டீக்ரே பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கை நிறைவடைந்ததையும், நிறுத்தப்படுவதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார்.
பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய கவனத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர், டீ.ம.வி.மு. கைது செய்த சிப்பாய்கள் விடுவிக்கப்பட்டதாகவும், விமான நிலையமும், பிராந்திய அலுவலகங்களும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்தார்.
அழிக்கப்பட்டவற்றை மறுகட்டுமானம் செய்வதும், போரினால் வெளியேறியவர்களை மீண்டும் திரும்பிக் கொண்டுவருவதும்தான் தற்போது முன்னால் இருக்கும் பணி என்றும் அவர் தெரிவித்தார்.
டீக்ரே பிராந்தியத்தில் செல்பேசி, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சண்டை நடப்பதைப் பற்றி சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
டீ.ம.வி.மு. என்ன சொல்கிறது?
ராய்டர்ஸ் செய்தி முகமைக்கு அனுப்பிய வரிவடிவத் தகவலில் (டெக்ஸ்ட் மெசேஜ்) களத்தில் உள்ள சண்டை நிலவரம் பற்றி நேரடியாக எதையும் குறிப்பிடாத டீ.ம.வி.மு. தலைவர் தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல், அரசுப் படைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அவர்களின் கொடூரம், கடைசிவரை இந்த ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என்ற எங்கள் உறுதியை அதிகப்படுத்தவே செய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"சுய நிர்ணயத்துக்கான எங்கள் உரிமையைப் பாதுகாத்துக்கொள்வது இது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக டீ.ம.வி.மு. அறிக்கை ஒன்றை ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்டது. அதில், "ஆர்ட்டிலரி மற்றும் போர் விமானத் தாக்குதலையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பக்கத்து நாடான எரித்ரியாவின் அரசும் மிகாய்லி மீதான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
டீ.ம.வி.மு. தற்போது மலைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து மத்திய அரசுப் படைகள் மீது கொரில்லா தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரச்சனையின் பின்னணி
2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.
அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.
அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.
டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி.
பிற செய்திகள் :
- நிவர் புயலால் தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- யோகி அரசின் கட்டாய மதமாற்ற தடை அவசரச் சட்டம்: ஆளுநர் ஒப்புதல்
- டெல்லியைச் சுற்றி குவியும் விவசாயிகள்: கடுங்குளிர், கொரோனாவை மீறி போராட்டம்
- வங்கக் கடல், இந்தியப் பெருங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - முக்கிய தகவல்கள்
- அணு விஞ்ஞானி படுகொலைக்கு பழிவாங்குவோம் என்கிறது இரான் - யார் அவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்