பாலியல் வல்லுறவு முதல் சொத்து தகராறு வரை - டிரம்புக்கு எதிரான 6 முக்கிய வழக்குகள்

Donald Trump

பட மூலாதாரம், Getty Images

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் பதவியை வகித்து வருவதால், இதுநாள் வரை சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கை வரம்புக்கு உட்படாத சலுகையை அவர் அனுபவித்து வருகிறார்.

ஆனால், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதால், டிரம்புக்கான அந்த பாதுகாப்பு சலுகைகள், விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதன் பிறகு அவர் மீண்டும் ஓர் சாதாரண குடிமகன் ஆகிவிடுவார்.

எனவே, மீண்டும் வழக்கறிஞர்களின் இலக்கு வட்டத்தில் டிரம்ப் நிற்க வைக்கப்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு, அவரைச் சுற்றிய காட்சிகள் மாறும் என்கிறார் அமெரிக்காவின் நியூயார்க் மாகாண வழக்கறிஞர் டேனியல் ஆர் அலோன்சோ.

சட்ட நடவடிக்கை பாயும்போது, விசாரணைகளில் இருந்து விலக்கு பெற அவரால் முடியாது.

நியூயார்க்கில் பல தரப்பட்ட குற்றவியல் விசாரணைகள் டிரம்புக்கு எதிராக நிலுவையில் இருக்கின்றன. அவை தான் டிரம்ப் மற்றும் அவரின் ரியல் எஸ்டேட் நிறுவனமான டிரம்ப் ஆர்கனைசேஷனின் முக்கிய பிரச்னைகளாக இருக்கும்.

இதை எல்லாம் விட, குடும்ப உறுப்பினரின் மோசடி குற்றச்சாட்டு முதல் பாலியல் துன்புறுத்தல் வரை பல வழக்குகள் அவர் மீது பாயலாம். எனவே, அமெரிக்க அரசியலில் ஒரு சட்டப் புயல் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் டிரம்பின் ஆறு பெரிய சட்ட போராட்டங்கள் என்ன ஆகும் என்பதைப் பார்ப்போம்.

1. அமைதியாக இருக்கச் சொல்லி, பெண்களுக்கு கொடுத்த பணம்:

நமக்கு என்ன தெரியும்: ப்ளேபாய் மாடல் கரென் மெடொகல் மற்றும் நீலப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், எதையும் வெளியே சொல்லக் கூடாது எனக் கூறப்பட்டது.

Stormy Daniels

பட மூலாதாரம், Getty Images

இந்த இரண்டு பெண்களும், டிரம்புடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகச் சொன்னார்கள். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன், இந்த உடலுறவு விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க பணமும் கொடுக்கப்பட்டது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

2018-ம் ஆண்டில் அவர்கள் வாய் திறந்த போது, அவர்கள் டிரம்பின் அதிபர் பதவியின் மீது அரசியல் குண்டு வீசினார்கள். அதோடு, இரண்டு குற்றவியல் வழக்குகளைத் தொடங்கி வைத்தார்கள்.

முதல் வழக்கு, அமெரிக்க ஐக்கிய சட்டங்கள் அல்லது தேசிய சட்டங்களின் விதி மீறல் மற்றும் டிரம்பின் முன்னாள் தனி வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் மீது கவனம் செலுத்தியது.

விசாரணையின்போது, இரண்டு பெண்களுக்கு பணம் ஏற்பாடு செய்ததை கொஹென் ஒப்புக் கொண்டார். இந்த பெண்களுக்கு பணம் கொடுத்தது, பிரசார நிதி விதி மீறல் என வழக்கு தொடுக்கப்பட்டது. 2018-ம் ஆண்டில், மைக்கெல் கொஹென்னுக்கு 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

டிரம்ப் தான் அந்த பெண்களுக்கு பணத்தை கொடுக்கச் சொன்னார் என குற்றம்சாட்டினார், ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கொண்டு வரப்படவில்லை. ஏன்? என்றார் கோஹென்.

முதல் விஷயம், டிரம்பின் மீது குற்றம்சாட்ட, டிரம்ப் தான் கோஹென்னை பணம் கொடுக்கச் சொன்னார் என ஆதாரம் வேண்டும். இரண்டாவது, ஆதாரம் இருந்தாலும், அதிபராக பதவியில் இருக்கும் ஒருவர் மீது, குற்றம்சாட்டுவது அமெரிக்க அரசு கொள்கைகளுக்கு எதிரானது.

ஆக வழக்கு முடிந்துவிட்டது, சரிதானே? என்றால் அதுதான் இல்லை. இங்கு தான் ஒரு சட்ட நுணுக்கம் இருக்கிறது.

இரண்டு பெண்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக, இரண்டாவது குற்றவியல் வழக்கு நியூயார்க்கில் நடந்து கொண்டு இருக்கிறது.

மன்ஹட்டன் மாவட்ட அட்டர்னி சைரஸ் வான்ஸ், இந்த பெண்களுக்கு பணம் கொடுக்க, டிரம்ப் நிறுவனம், தங்களின் வியாபாரப் பதிவுகளை மாற்றி இருக்கிறார்களா? என விசாரித்துக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும்.

வான்ஸ், குற்றவியல் வழக்கை தாக்கல் செய்யும் அளவுக்கு, ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாரா என்பது தான் நமக்குத் தெரியாது.

அடுத்து என்ன நடக்கலாம்? வியாபாரப் பதிவுகளை மாற்றுவது, நியூ யார்க் சட்டப்படி சிறிய குற்றம் தான். இதற்கு அதிகபட்சமாக ஒரு வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.

இதில், வான்ஸின் தந்திரமான பகுதி இருக்கிறது. சிறிய குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் வழக்குகளை நியூ யார்க்கில் பதிய, இரண்டு ஆண்டு கால அவகாசம் இருக்கிறது.

இந்த பெண்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே பணத்தைக் கொடுத்துவிட்டதால், வழக்கறிஞர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்கிறார் அலான்சோ. ஆனால் இன்னும் சில வழிகள் இருக்கிறது என்கிறார் அவர்.

நியூ யார்க்கில், வியாபார பதிவுகளில் தவறு செய்வதை, மற்ற குற்றங்களை மறைக்க (உதாரணம் வரி ஏய்ப்புகள்) பயன்படுத்தினால், வியாபாரப் பதிவுகளில் தவறு செய்வதை, மிகப்பெரிய குற்றமாக பதிவு செய்யப்படும்.

Karen McDougal

பட மூலாதாரம், Getty Images

பெரிய குற்றங்களுக்கு, நீண்ட காலத்துக்கு வழக்கு தொடுக்கலாம். கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும்.

இருப்பினும், டிரம்பின் மீது வழக்கு தொடுப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. டிரம்ப், நியூயார்க்கின் சட்டங்களின்படி, பிரசார நிதி விதி மீறலுக்கு (இது ஒரு ஃபெடரல் குற்றம்) வழக்கு தொடுக்க முடியுமா என தெளிவாக இல்லை. இந்த வழக்கின் கீழ் தான் மைக்கெல் கொஹென் கைது செய்யப்பட்டார். வான்ஸின் விசாரணையில் சில பகுதிகள், இங்குதான் வருகின்றன.

2. வரி மற்றும் வங்கி மோசடி விசாரணை

நமக்கு என்ன தெரியும்: கடந்த ஆகஸ்ட் 2019-ல், இது ஒரு அரசியல் அழிவு வேலை என டிரம்ப் நிறுவனத்தின் வழக்கறிஞர், வான்ஸின் விசாரணையை கூறினார்.

இதில், வழக்கறிஞரின் வார்த்தைகளில் கோபம் இருந்தது.

வான்ஸ், டிரம்ப் நிறுவனத்தின் விவரங்களைப் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளின் நிதி அறிக்கைகள் மற்றும் கடந்த எட்டு ஆண்டுகளின், டிரம்பின் வரிப் படிவங்களைப் பார்க்க கோரிக்கை வைத்து இருக்கிறார்.

அப்போதில் இருந்து, டிரம்ப், வான்ஸின் கோரிக்கையை தடுக்கவே முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். நீதிமன்றத்தில், இது அரசியல் ரீதியாக துன்புறுத்துவது என வாதிடுகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம், மத்திய மேல் முறையீட்டு நீதிமன்றம், டிரம்பின் வரிப் படிவங்களை, வழக்கறிஞர்கள் காண அனுமதி மறுத்தது.

டிரம்பின் வரிப் படிவங்கள் எத்தனை முக்கியமானது என, வான்ஸ் நீதிமன்றத்திடம் சொல்லிய பிறகும், மறுக்கப்பட்டது.

Cyrus Vance

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆகஸ்ட் மாதம், டிரம்பின் வரிப் படிவங்களைக் கேட்ட போது, டிரம்ப் நிறுவனத்தில், நீண்ட காலத்துக்கு, பெரிய குற்ற நடவடிக்கைகள் நடந்திருக்கலாம், இதில் காப்பீடு மற்றும் வங்கி மோசடிகளும் நடந்திருக்கலாம் எனச் சொன்னார் வான்ஸ்.

செப்டம்பர் மாதத்தில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த படிவத்தில், வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம், அதற்கான ஆதாரங்களை கண்டு பிடிக்க வேண்டும். குற்றத்தை நிறுவ வேண்டும் எனச் சொல்லப்பட்டு இருந்தது.

என்ன நடக்கலாம்?டொனால்ட் டிரம்ப் தனது வரிப் படிவங்களை ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வரலாம்.

டிரம்பின் வரி மற்றும் வங்கி விவரங்களில் அவர் ஏதாவது தவறு செய்து இருக்கிறாரா என தேடுவது தான், மிகவும் முக்கியமான குற்ற விசாரணை என்கிறார் ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக இருக்கும் ஜானதன் டுர்லே. டிரம்பின் மீது ஏதாவது குற்ற வழக்கு இருக்கிறதா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

ஒருவேளை வான்ஸுக்கு, டிரம்பின் வரிப் படிவங்கள் கிடைத்தால், அதை வைத்து ஒரு குற்ற வழக்கைத் தொடுக்கலாம் அல்லது தொடுக்க முடியாமலும் போகலாம். எப்படிப் பார்த்தாலும், வான்ஸுக்கு, டிரம்பின் வரிப் படிவங்கள் கிடைத்தால் தான் அவரது விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

3. ரியல் எஸ்டேட் மோசடி விசாரணை

நமக்கு என்ன தெரியும்: நியூ யார்க்கின் அட்டர்னி லெடிடியா ஜேம்ஸ், டிரம்புக்கு குடைச்சல் கொடுக்கும் மற்றொருவராக இருக்கிறார்.

கடந்த மார்ச் 2019 முதல், டிரம்பின் நிறுவனம் ஏதாவது ரியல் எஸ்டேட் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறதா என சிவில் விசாரணையை முன்னெடுத்து வருகிறார் ஜேம்ஸ்.

இந்த விசாரணையின் வேர்கள், மீண்டும் மைக்கெல் கோஹென்னையே சென்று சேர்ந்தது. டிரம்ப், கடன் பெற, தன் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பை செயற்கையாக ஏற்றினார், வரிகளைக் குறைக்க., அதே ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புகளைக் குறைத்தார் என, கடந்த பிப்ரவரி 2019-ல், காங்கிரஸ் முன்னிலையில் கூறினார் மைக்கெல் கோஹென்.

Michael Cohen

பட மூலாதாரம், Getty Images

கோஹென்னின் ஒப்புதலுக்குப் பிறகு, டிரம்பின் சொத்து விவரங்களைக் கோரினார் ஜேம்ஸ். வான்ஸ் வரிப் படிவங்களுக்கு போராடியது போலவே, சொத்து விவரங்களுக்கு, நீதிமன்றத்தில் ஜேம்ஸ் போராட வேண்டி இருந்தது.

டிரம்பின் மகன் மற்றும் டிரம்ப் நிறுவனத்தின் துணைத் தலைவர் எரிக் டிரம்ப், ஜேம்ஸ் அரசியல் பலிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு இல்லாமல், கடந்த அக்டோபர் மாதத்தில், விளக்கமளிக்க ஜேம்ஸ் அழைப்புவிடுத்ததை ஏற்று விளக்கம் கொடுத்தார் எரிக் டிரம்ப்.

அடுத்து என்ன நடக்கலாம்: ஜேம்ஸுக்கு நிறைய சாட்சிகளும், விவரங்களும் வேண்டும். அப்போது தான் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

டிரம்ப், அதிபர் அலுவலகத்தில் இருந்த போது, எனக்கு நிறைய வேலை இருக்கிறது, என்னால் வழக்குகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனச் சொன்னார். இனி டிரம்ப் அப்படிச் சொல்ல முடியாது.

இனி லெடிடா ஜேம்ஸ், டிரம்பின் மகனை நெருக்கி உட்கார வைத்து கேள்வி எழுப்பியது போல, டொனால்ட் டிரம்பையும் கேள்வி கேட்கலாம்.

பெரும்பாலான நீதிமன்றங்கள், அமெரிக்க அதிபர் தொடர்பான வழக்கில், வழக்கை பட்டியலிடுவது போன்றவைகளில், கொஞ்சம் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு தனிப்பட்ட பிரஜையின் வழக்குகளில் அப்படி இருக்காது என்கிறார் அலோன்சோ.

இது போன்ற சிவில் விசாரணைகளில், தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படலாம். அதே போல, மற்றொரு குற்ற விசாரணையை ஒதுக்கிக் களைய முடியாது.

4. ஊதிய வழக்கு

நமக்கு என்ன தெரியும்: ஊதியம் என்பது ஒரு தொன்மையான சொல், இது சட்ட சூழல்களைத் தவிர, மற்ற நேரங்களில் அதிகம் பயன்படுத்தப்படவதில்லை. இப்போது, இதன் வரையறையே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பொதுவாக வேலைவாய்ப்பு அல்லது பதவியில் இருப்பதால் கிடைக்கும் ஆதாயம், லாபம் அல்லது நன்மை என்று கூறலாம்.

இதற்கும், டிரம்புக்கும் என்ன சம்பந்தம்?

Protesters outside the Trump International Hotel in Washington DC

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப், அமெரிக்க அதிபராக இருந்த போது "emoluments" விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறார். இந்த "emoluments" விதிகள், அமெரிக்க சட்டத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க மத்திய அரசின் அனைத்து ஊழியர்களும், அதிபர் உட்பட, வெளிநாட்டில் இருந்து ஏதாவது சலுகை அல்லது லாபம் பெறுவதற்கு முன், அமெரிக்க காங்கிரஸிடம் அனுமதி பெற வேண்டும்.

டிரம்ப், காங்கிரஸிடம் இருந்து அனுமதி பெறவில்லை என குற்றம்சாட்டி, மூன்று தனி சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிரம்ப், emoluments விதிகளை "போலியான விதிகள்" என விமர்சித்தார். அதோடு, மற்ற அதிபர்கள் பணம் சம்பாதித்துள்ளார்கள் என்றும் கூறினார்.

என்ன நடக்கலாம்: இந்த emoluments விதிகள் தொடர்பான வழக்குகள், கூடுமான வரை தள்ளுபடி செய்யப்படலாம் அல்லது கைவிடப் படலாம் என சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே, ஜனநாயகக் கட்சியினரின் வழக்கை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

குற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த emoluments ஒர் அடிப்படையாக இருக்க வாய்ப்பில்லை என டுர்லே சொல்கிறார். இவர் அரசியலமைப்புச் சட்டத்தில் வல்லுநர்.

5. பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது

நமக்கு என்ன தெரியும்: டிரம்ப், பல்வேறு பெண்களிடம், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என குற்றம்சாட்டப்பட்டார். டிரம்ப், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார். அவைகள் போலி செய்திகள், அரசியல் ரீதியாக, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயலும் நடவடிக்கைகள் மற்றும் சதித் திட்டங்கள் என்கிறார்.

E Jean Carroll

பட மூலாதாரம், Getty Images

2016 அதிபர் தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற்ற பின், பல்வேறு பெண்கள் முன் வந்தார்கள். அவர்கள் அனைவரின் மீதும், வழக்கு தொடுப்பேன் என சத்தியம் செய்தார். ஆனால் இதுவரை வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் சில பெண்கள், டிரம்பின் மீது வழக்கு தொடுத்தார்கள்.

அதில் இரண்டு பெண்கள், தங்களை டிரம்ப் பொய்யர்கள் என கூறியதற்காக, டிரம்புக்கு எதிராக, மான நஷ்ட வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.

எல் பத்திரிகையில், கட்டுரையாளராக இருக்கும் இ ஜென் கரோல், அதில் ஒருவர். 1990-களில், மன்ஹட்டனில் ஒரு சொகுசு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில், உடைமாற்றும் அறையில் வைத்து, தன்னை டிரம்ப் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி இருக்கிறார். டிரம்ப் இதை மறுக்கிறார், அதோடு கரோலின் மான நஷ்ட வழக்கையும் எதிர் கொண்டு வருகிறார்.

நான் அவளை பலாத்காரம் செய்திருக்க முடியாது, ஏன் என்றால் அவள் என் வகை அல்ல என டிரம்ப், கரோலை இழிவுபடுத்தியதாக, கரோல் தன் வழக்கில் வாதிடுகிறார். கரோல் தன் வழக்கில், ஒரு குறிப்பிடாத தொகையை நஷ்ட ஈடாக கேட்கிறார். அதோடு, டிரம்ப் கூறியதைத் திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார்.

கடந்த செப்டம்பர் வரை கரோலின் வழக்கு சரியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. அதன் பிறகு அமெரிக்க நீதித் துறை உள்ளே வந்தது.

அமெரிக்க நீதித் துறை, கரோல் வழக்கில், பிரதிவாதியாக இருக்கும் டிரம்பை, யுனைடெட் ஸ்டேட்ஸ் என மாற்ற முயற்சித்தது.

கடைசியில் ஒரு ஃபெடரல் நீதிபதி, அமெரிக்க நீதித் துறைக்கு எதிராக தீர்ப்பளித்தார். இந்த குற்றச்சாட்டுக்கும், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் வேலைகளுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொன்னார்.

என்ன நடக்கலாம்? இந்த வழக்கு மேற்கொண்டு நடக்கும். கரோலின் வழக்கறிஞர்கள், ஆதாரங்களை சேகரிக்கலாம்.

உதாரணத்துக்கு, கரோல் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் அன்று அணிந்திருந்த உடையில், டிரம்பின் டிஎன்ஏ இருக்கிறது என்றால், அதை சரி பார்க்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கலாம். அதற்கும் டிரம்பின் டிஎன்ஏ மாதிரி தேவை.

இதே போன்ற, ஆனால் மற்றொரு மான நஷ்ட வழக்கை, சம்மர் செர்வோஸ் என்கிற பெண் தொடுத்து இருக்கிறார். இவர் டிரம்பின் தி அப்ரண்டிஸ் என்கிற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் போட்டியாளர்.

கடந்த 2007-ம் ஆண்டு, பிவர்லி ஹில்ஸில், ஒரு விடுதியில் வைத்து, வேலை வாய்ப்பு தொடர்பான கூட்டத்தில், டிரம்ப் தன்னை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி இருக்கிறார் செவோஸ்.

டிரம்ப், இந்த குற்றச்சாட்டு போலியானது என நிராகரித்து இருக்கிறார். செர்வோஸ், தன் புகழுக்காக இப்படி ஜோடிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார் டிரம்ப். 2017-ம் ஆண்டு, செர்வோஸ் மான நஷ்ட வழக்கைத் தொடுத்தார். குறைந்தபட்ச நஷ்ட ஈடாக 3,000 டாலர்களைக் கேட்டு இருக்கிறார்.

டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியில் இருக்கு போதே, இந்த வழக்கை ரத்து செய்ய முயற்சித்தார். அமெரிக்க அதிபர், மாகாண நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு உட்படாதவராக இருக்க வேண்டும் என, டிரம்பின் வழக்கறிஞர்கள் சொன்னார்கள்.

வரும் 20 ஜனவரி 2020 அன்று, இந்த வாதம் மொத்தமாக காணாமல் போகும் என்கிறார் மிசிகன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் பார்பரா எல் மெக்காடே. டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டால், இந்த வழக்கில் கண்டு பிடிக்கும் படலத்துக்கு வரலாம், வழக்கு நகரத் தொடங்கும் என்கிறார்.

6. மேரி டிரம்ப் சொத்துப் பிரச்சனை

என்ன தெரியும்: "மோசடி என்பது வெறுமனே குடும்ப வியாபாரம் மட்டுமல்ல - அது ஒரு வாழ்க்கை முறை" என்று தான் மேரி டிரம்ப், தன் மாமா டொனால்ட் டிரம்புக்கு எதிராக தொடுத்து இருக்கும் வழக்கு விவரங்கள் தொடங்குகிறது.

டிரம்ப் குறித்து சமீபத்தில் வெளியான புத்தகத்தில், மேரிக்கு, தன் மாமா டொனால்டின் மீது இருக்கும் வெறுப்பு தெளிவாகத் தெரிகிறது. அந்த புத்தகத்தில், டிரம்பை ஒரு நார்சிஸ்ட் (தங்களைப் பற்றி மட்டுமே கூடுதலக சிந்திப்பது, கூடுதலாக கவனத்தை எதிர்பார்ப்பது, மற்றவர்கள் மீது அன்பு செலுத்தாமல் இருப்பது) என்கிறார். அதோடு, டிரம்ப், ஒவ்வொரு அமெரிக்கர்களின் உயிரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறார் எனவும் சொல்லி இருக்கிறார்.

Mary Trump's book

பட மூலாதாரம், Getty Images

மேரி டிரம்ப் தொடுத்திருக்கும் வழக்கு, அவரின் வெறுப்புணர்வைக் காட்டுகிறது. இந்த வழக்கில், டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள், பரம்பரை சொத்து வந்து சேர்வதில், தன்னை ஏமாற்றுவதாகவும், குடும்ப வியாபாரத்தில் தன் பங்கை விட்டுக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

மேரி டிரம்ப், 1981-ம் ஆண்டு, டொனால்ட் டிரம்பின் அண்ணன், ஃப்ரெட் டிரம்ப் ஜூனியர் (மேரியின் தந்தை) இறந்த போது, தன் பங்கை மரபுரிமையாகப் பெறுகிறார். அப்போது மேரி டிரம்பின் வயது 16.

எனவே மேரி டிரம்பின் சொத்துக்களைப் பார்த்துக் கொள்ள, டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது சகோதரர்கள் ஒப்புக் கொள்வதாக, வழக்கு விவரங்கள் சொல்கின்றன.

அவர்கள் பொய் சொன்னார்கள் என்கிறது வழக்கு விவரங்கள். மேரியின் பங்கை பாதுகாப்பதற்கு பதிலாக, சில சிக்கலான திட்டங்களை வடிவமைத்து, மேரியின் சொத்தில் இருந்து பணத்தை சூரையாடி இருக்கிறார்கள். அதோடு திருட்டை மறைத்து, மேரி எவ்வளவு சொத்தை உண்மையாக மரபுரிமையாகப் பெற்றார் என்பதை ஏமாற்றி இருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் 5,00,000 டாலராவது நஷ்ட ஈடாக வேண்டும் என்கிறது மேரியின் வழக்கு விவரங்கள்.

என்ன நடக்கும்? மேரி டிரம்பின் புத்தகம் முழுக்க பொய்யால் நிறைந்து இருக்கிறது என வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை டொனால்ட் டிரம்ப் இந்த வழக்குக்கு பதில் சொல்லவில்லை.

ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களுக்கான கோரிக்கைகள் வந்தால், டிரம்ப் தனது அதிபர் கடமைகளைக் காரணம் காட்டி மறுக்க முடியாது.

எந்த அமெரிக்க குடிமகனும், அமெரிக்க அதிபர் உட்பட, சட்டத்துக்குள் மேலானவர்கள் கிடையாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: