பழம்பெரும் வங்காள நடிகர் செளமித்ரா சாட்டர்ஜி 85 வயதில் காலமானார்

(உலக அளவிலும் இந்தியாவிலும் நடக்கும் முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)

சாட்டர்ஜி

பட மூலாதாரம், NEMAI GHOSH

பழம்பெரும் வங்காள நடிகர் செளமித்ரா சாட்டர்ஜி கோவிட் தொற்றால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார்.

செளமித்ரா சாட்டர்ஜிக்கு 85 வயது. இவர் உலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித்ரேவுடன் இணைந்து ஆற்றிய பணிகள் பெரிதும் பேசப்பட்டவை.

கொரோனா தொற்று கண்டறியப்பட்டபின் செளமித்ரா சாட்டர்ஜி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், நாடக கலைஞராகவும், கவிஞராகவும், கதாசிரியராகவும் அறியப்பட்டவர்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நாட்களில் கொரோனா நெகடிவ் என வந்திருந்தாலும், அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. எனவே அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் சத்யஜித் ரேவின் முக்கிய படைப்பான அபுர் சன்ஸ்கார் (அப்புவின் உலகம்) திரைப்படத்தில்தான் முதன்முதலில் அறிமுகமானார் செளமித்ரா சாட்டர்ஜி.

சத்யஜித் ரேயின் பதேய் பாஞ்சாலி, அபராஜித்தோ, அபுர் சன்ஸ்கார் ஆகிய படங்கள் உலகளவில் பல விருதுகளை பெற்றதும் இல்லாமல், இந்திய சினிமாவை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவை.

சத்யஜித் ரே மற்றும் சாட்டர்ஜி

பட மூலாதாரம், NEMAI GHOSH

படக்குறிப்பு, சத்யஜித் ரே மற்றும் சாட்டர்ஜி

அதன்பிறகு சத்யஜித் ரேவின் 14 படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாட்டர்ஜி.

சினிமா துறையில் வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை 2012ஆம் ஆண்டு பெற்றுள்ளார் சாட்டர்ஜி. பிரான்ஸின் உயரிய விருதான லிஜியன் ஆஃப் ஆனர் என்ற விருதை 2018ஆம் ஆண்டு பெற்றார்.

இவர் பள்ளியில் இருக்கும்போது நடிக்கத் தொடங்கினார். பல நாடகங்களில் நடித்துள்ளார். அதன்பின் இவரின் கல்லூரி காலத்தில் தனது நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம் சத்யஜித் ரேவின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அந்த சந்திப்புக்குப் பின் திரையுலகில் கால் பதித்தார் சாட்டர்ஜி.

"என்னை ரே, திரைப்படத்தில் நடிக்கக் கேட்டபோது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு நாடகத்திற்கு திரைப்படத்திற்கு வித்தியாசம் தெரியவில்லை. திரையில் நான் அதிகப்படியாக நடித்து விடுவேனோ என பயந்தேன்.," என திரை விமர்சகர் மேரி சீட்டன் எடுத்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் சாட்டர்ஜி.

ஆசிய பசிபிக் நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக கூட்டமைப்பு

சீனா

பட மூலாதாரம், Getty Images

பதினைந்து நாடுகள் சேர்ந்து உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளது. இது உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு (RCEP)என்று கூறப்படும் இதில் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.

அந்த பிராந்தியத்தில் சீன தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்க வெளியேறியதால் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க சேர்க்கப்படவில்லை.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற சிறிது காலத்தில் ஆஸ்திரேலியா, சில்லி, கனடா, ஜப்பான் உட்பட 12 நாடுகள் கொண்ட ட்ரான்ஸ் பசிபிக் பாட்னர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

இந்த ஒப்பந்தம் டிரம்புக்கு முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவால் ஆதரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: