You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெலானியா டிரம்ப்: 'அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதில் அவர் குடும்பத்தில் விரிசல்'
ஜனநாயக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடனிடம் தனது தேர்தல் தோல்வியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொள்வது தொடர்பாக அவரது நெருங்கிய வட்டத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்பின் மருமகனும் அவரது மூத்த ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் மற்றும் டொனால்டு டிரம்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியுமான மெலானியா டிரம்ப் ஆகியோர் தமது தேர்தல் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஆனால் டிரம்பின் மகன்கள் டொனால்டு ஜூனியர் டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோர் அதிபரின் ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சியினர் ஆகியோரிடம் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு பொதுவெளியில் வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்துள்ள தேர்தல் வாக்குப்பதிவில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் அவர் தரப்பில் இதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
இவரது பிரசாரக் குழுவினர் சில மாகாணங்களில் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றங்களில் இது தொடர்பாக முறையீடு செய்யும் முயற்சிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அவரது குடியரசு கட்சியிலிருந்து குறைவான ஆதரவே கிடைத்துள்ளது.
தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைவதற்கு முன்பு சட்ட ரீதியான பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமென்று குடியரசுக் கட்சியில் ஒரு தரப்பு டிரம்ப் அணியை வலியுறுத்துகிறது.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் டிரம்ப் அணியினர் அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்று மூத்த குடியரசு கட்சி தலைவர்கள் அவரது அணியினரிடம் வலியுறுத்தியுள்ளதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது.
ஆனால் தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் தங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
சட்ட ரீதியான சிக்கல்கள் வருமா?
ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்றாலும் பைடன் வெற்றி பெற்றுள்ள மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்ததாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
தாமதமாகக் கிடைத்த பல தபால் வாக்குகளை செல்லாத வாக்குகள் என்று அறிவிக்க வேண்டும் என்று டிரம்ப் தரப்பு கோரிக்கை வைக்கும் முயற்சி ஒருவேளை உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம்.
ஆனால், அந்த வழக்கில் முடிவு தேர்தல் முடிவை மாற்றுவதற்கான வாய்ப்பில்லை என்றே சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
சில மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூட உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம். எனினும், தேர்தல் முடிவுகளில் இதனால் பெருமளவில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: