சிரியா: கார் வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய மதகுரு படுகொலை

சிரியாவில் பல்வேறு புறநகர் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவராக அறியப்பட்ட முக்கிய மத குரு ஷேக் அஃபியுனி, கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவரது இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த வியாழக்கிழமை தலைநகர் டமாஸ்கஸின் வடமேற்கே உள்ள குட்சயா பகுதியில் அவர் கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது இறுதி நிகழ்வில் சிரியா மத விவகாரங்கள் துறை அமைச்சர் அப்துல் சத்தார் அல் சயெத், அதிபரின் சார்பில் கலந்து கொண்டார்.

கடந்த செப்டம்டபர் மாதம் டமாஸ்கஸில் இருந்து முக்கிய கிளர்ச்சிக்குழுவினர் வெளியேறிய பிறகு, அங்கு ஈத் அல் அதா கொண்டாடப்பட்டபோது அங்கு நடந்த தொழுகையை ஷேக் அஃபியுனி வழிநடத்தினார்.

அதிபர் பஷர் அல் அஸ்ஸாதுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டு வந்த ஷேக் அஃபியுனி, டமாஸ்கஸ் பிராந்தியத்தில் பரவலாக பொதுமக்களால் மதிக்கப்பட்டு வந்தார். அந்த பிராந்தியத்தின் கிளர்ச்சிக்குழுக்களும் அவரது பேச்சை கேட்கும் அளவுக்கு அவருக்கு அங்கே செல்வாக்கி இருந்தது.

அந்நாட்டில் ஒன்பது ஆண்டு கால உள்நாட்டுப் போரின் முடிவில் தற்போது பெரும்பாலான பகுதிகளை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்த உள்நாட்டுப் போரில் மூன்று லட்சத்து எண்ணூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1.32 கோடிக்கும் அதிகமானோர் நாட்டை விட்டும் நாட்டுக்குள்ளேயும் இடம்பெயர்ந்துள்ளனர்

கபில் தேவுக்கு ஏஞ்சியோ சிகிச்சை - எப்போது வீடு திரும்புவார்?

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கபில் தேவுக்கு (62) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு ஏஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சேர்க்கப்பட்டுள்ள டெல்லி தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரத்த நாள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரி செய்ய அவருக்கு ஏஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கவனித்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை நள்ளிரவைக் கடந்த 1 மணிக்கு மருத்துவமனையின் வியாழக்கிழமை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட கபில் தேவுக்கு ஏஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அவரது உடல் மருதுதவ அளவீடுகள் தற்போது நிலையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. சில தினங்கள் மருத்துவமனையில் அவர் ஓய்வு எடுத்த பிறகு வீடு திரும்பலாம் என எதிர்பார்க்கிறோம் என்று அந்த மருத்துவமனை கூறியுள்ளது.

கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப்பறந்த வீரர் கபில் தேவ், பல இன்றைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் சாதனையாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியவர்.

1983ஆம் ஆண்டில் நடந்த உலக கோப்பை போட்டியின்போது, மேற்கு இந்திய அணியை வீழ்த்தி, இந்தியாவுக்கு முதலாவது முறையாக உலக கோப்பை கிடைக்கச் செய்தவர் கபில் தேவ்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரி்க்கெட் பயிற்சியாளராகவும், பின்னர் வருணனையாளராகவும் கபில் தேவ் பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது கபில் தேவின் விமர்சனங்களும் பார்வையும் இந்திய தொலைக்காட்சி நேயர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில், மாரடைப்பால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி, அவரது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கிரிக்கெட் உலகில் கபில் தேவின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக சில விளையாட்டுகளை கருதலாம்.

1978ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி, பாகிஸ்தானின் க்வெட்டாவில் நடந்த ஆட்டத்தில் தமது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கிய கபில் தேவ், அதன் பிறகு இந்தியாவுக்கா 131 டெஸ்ட்களில் ஆடி 5,248 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி 434 விக்கெட்டுகளையும் பறித்த சாதனையாளராக கிரிக்கெட் உலகில் வலம் வந்தார்.

ஹரியாணாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஹரியாணாவின் சூறாவளி என ரசிகர்கள் அழைத்தனர். ஆல் ரவுண்டர் ஆக 225 ஒரு நாள் தொடரில் ஆடிய அவர், 3,783 ரன்களையும் 253 விக்கெட்டுகளையும் பறித்தார்.

1983ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய அவர் முதலாவதாக உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்த தருணம் இன்றளவும் கிரிக்கெட் உலகின் மைல்கல் சாதனையாக பேசப்படுகிறது.

போட்டித்தொடர்களில் 21 வயதில் 100 விக்கெட்டுகளை பறித்தவர் மற்றும் 1000 ரன்களை குவித்தவராக அறியப்பட்ட அவர், 1994ஆம் ஆண்டில் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக 1999ஆம் ஆண்டில் அவர் பதவியேற்றார்.

1980ஆம் ஆண்டில் ரோமி பாட்டியாவை திருமணம் செய்து கொண்ட கபில் தேவுக்கு அமியா என்ற மகள் உள்ளார். இந்திய ராணுவத்தின் பிரதேச ராணுவப்படையில், கெளரவ லெப்டிணன்ட் கர்னல் பதவி கபில் தேவுக்கு 2008ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி வழங்கப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் "83" என்ற படம் பாலிவுட்டில் தயாராகி வருகிறது. அதில் கபில் தேவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

விருதுநகர் அருகே வெடி விபத்து - சம்பவ பகுதியில் 5 பேர் பலி

தமிழ்நாட்டின் விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் உள்ள எம். செங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையை அழகர்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்து வந்தார்.

இந்த நிலையில், ஃபேன்ஸி ரக வெடி தயாரிப்பின்போது மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வால் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேர் விருதுநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் விருதுநகர் தீயணைப்புப் படையினர் சம்பவ பகுதிக்கு வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு உரிய நிதியும், காயம் அடைந்தோருக்கு உயர் சிகிச்சையும் அவசியம் தரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க். ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 28ஆம் தேதிவாக்கில் துவங்கக்கூடுமென சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை நகரில் நேற்று மாலையில் நல்ல மழை பெய்தது. வட தமிழகத்தின் கடலோரப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சியால் இந்த மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

"இதன் காரணமாகவே, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்துவரும் இரு தினங்களில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றும் அவர் கூறினார்.

சென்னையைப் பொறுத்தவரை நேற்று நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் மீனம்பாக்கத்தில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.

வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு, ஆந்திரக் கடற்கரைப் பகுதிகள், அதனை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில் வடகிழக்கு, கிழக்கு திசையிலிருந்து காற்று வீசும் பட்சத்தில் வடகிழக்குப் பருவமழையானது, தமிழ்நாடு, புதுவை, தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு கர்நாடகப் பகுதிகளில் வரும் அக்டோபர் 28ஆம் தேதியை ஒட்டி துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

"தற்போது மேற்கிலிருந்துதான் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. தவிர, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒன்றும் கடந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் முடிந்த பிறகு, அக்டோபர் 26 - 27ஆம் தேதியிலிருந்து இந்நிலை மாறி, வடகிழக்குப் பருவமழை துவங்கும்" என பாலச்சந்திரன் கூறினார்.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை வட தமிழ்நாட்டில் இயல்பாகவும் தென் தமிழகத்தில் இயல்புக்குக் குறைவாகவும் இருக்குமென கணிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு பாணியில் பிகாரில் GobackModi ட்ரெண்ட் ஆவது ஏன்?

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோதி பிகார் சென்றுள்ளார். சாசரம் என்ற இடத்தில் நடக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவரும், முதல்வர் நிதிஷ்குமாரும் உரையாற்றினர்.

நரேந்திர மோதி பிகார் வருகையை ஒட்டி ட்விட்டரில் #GobackModi என்ற ஹேஷ்டேக் ட்ரென்டிங் ஆனது. மோதி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும் இதே ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவதை இது நினைவுபடுத்தியது.

ட்விட்டரில் நடக்கும் இந்த மோதி எதிர்ப்புப் பிரசாரத்தில் பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும், பெரும்பாலும் கொரோனா முடக்கநிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் தில்லியில் இருந்து பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்தே பிகார் திரும்ப நேரிட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர் நிலையும், அவர்களின் படங்களுமே இந்த ஹேஷ்டேகுடன் இணைத்துப் பகிரப்பட்டன.

மோதி என்ன பேசினார்?

பிகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களின் பெயர்களின் முதலெழுத்துகளை இணைத்து பீமாரு மாநிலங்கள் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. பீமார் என்ற இந்தி சொல்லுக்கு உடல் நலம் குன்றிய என்ற பொருளும் உண்டு. இந்த வழக்கத்தைத் தொட்டுப் பேசிய மோதி, பிகாரை பீமார் ஆக்கியவர்களை, அதாவது நலம் குன்றியதாக ஆக்கியவர்களை மீண்டும் அனுமதிப்பதில்லை என்று பிகார் வாக்காளர்கள் உறுதி ஏற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புரிமை தரும் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று கூறுகிறவர்கள் பிகார் மாநிலத்தில் வாக்கு கேட்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் என்று கேட்ட மோதி, பிகாரின் புதல்வர்கள் புல்வாமா தாக்குதலிலும், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படையினரால் தாக்கப்பட்டதிலும் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தங்களுக்கு தொடர்ந்து தோல்வியைத் தந்த பிகார் மீது அப்போதைய அரசு மிகவும் கோபம் காட்டியதாகவும் மோதி தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க அரசு முழு ஒப்புதல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்க அரசு முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்.டி.ஏ), கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளும் காலத்தை ரெம்டெசிவிர் சராசரியாக ஐந்து நாட்கள் குறைப்பது மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறுகிறது.

"கொரோனா சிகிச்சைக்கு எங்களது ஒப்புதல் பெறும் முதல் மருந்து வெக்லரி (ரெம்டெசிவரின் வர்த்தக பெயர்)" என்று எஃப்.டி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

"12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, குறைந்தது 40 கிலோ உடல் எடை கொண்ட, மருத்துவமனை கவனிப்பு தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இதை பயன்படுத்தலாம்."

கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதில் ரெம்டெசிவிரின் பங்கு சிறிதளவு முதல் பூஜ்யம் வரை மட்டுமே உள்ளதாக கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

தங்களது தனிப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக இதுகுறித்து தெரியவந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த கூற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலிட் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் அவசர தேவைகளுக்காக மட்டும் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ரெம்டெசிவிர் வழங்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது

"எல்டிடிஈ தடை: ஆதாரம் காட்டும் இலங்கை, தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தலைவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: