You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் இரண்டாவது அலை - தடுமாறும் நாடுகள்
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது வைரஸ் அலை போல மீண்டும் பெருந்தொற்று தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
ஸ்பெயினின் வடகிழக்கு பிராந்தியமான கேட்டலோனியாவில் வியாழக்கிழமை முதல் மதுபான விடுதிகள், உணவகங்கள் 15 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கூடும் பொது இடங்களில் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்பெயினில் புதன்கிழமை நிலவரப்படி 8 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
செக் குடியரசு நாட்டில் பள்ளிகள், மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் பொதுமக்கள் கூடும் உணவகங்கள், தேனீரகங்கள் மூடப்பட்டுள்ளன.
பிரான்ஸ் அதிபர் அவசர ஆலோசனை
பிரான்ஸில் புதிய கட்டுப்பாடு நடவடிக்கையை அறிவிப்பது குறித்து அதிபர் எமானுவேல் மக்ரோங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான வழிமுறையை அவர் தொலைக்காட்சியில் தோன்றி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸில் புதன்கிழமை நிலவரப்படி 8 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
நெதர்லாந்தில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பகுதியளவு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வைரஸ் தொற்று எண்ணிக்கை
ஐரோப்பாவின் பல நாடுகளில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட பல நாடுகளிலும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக ஒரே நாளில் 5,000 தொற்றுகள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு இதுவரை பதிவான மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 913 ஆகும்.
ஸ்பெயினில் என்ன நடக்கிறது?
ஐரோப்பாவிலேயே மிக அதிக வைரஸ் தொற்றுள்ள நாடாக விளங்கிய ஸ்பெயினில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகமாகியுள்ளது. அங்கு சுமார் 90 ஆயிரம் தொற்றுகளும் 33 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
கடந்த கோடை காலத்தில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட கேட்டலோனியா பிராந்தியத்தில் இரண்டாவது அலை வைரஸ் தோன்றுவதாக ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பார்சிலோனாவில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
வரும் வாரங்களில் முழு பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர்க்க, இத்தகைய நடவடிக்கை மிகவும் அவசியமாவதாக இடைக்கால தலைவர் பியெர் ஆரோகோன்ஸ் தெரிவித்தார்.
அங்கு உடற்பயிற்சி கூடங்கள், கலாசார நிகழ்ச்சிகள் 50 சதவீத பங்கேற்பாளர்களுடன் மட்டுமே நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடைகள், வணிக வளாகங்கள் 30 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்கலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் புதன்கிழமை இரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்கு வசிப்பவர்கள் நகரை விட்டு வெளியேற முடியாதவர்களாக உள்ளனர்.
பிற செய்திகள்:
- "முத்தையா முரளிதரன் என்றுமே தமிழர்" - கொண்டாடும் இலங்கை உறவினர்கள், டிரெண்டிங்கில் #ShameOnVijaySethupathi
- கேரளாவில் கொரோனா பரவலுக்கு பக்கத்து மாநிலத்தவர்கள் காரணமா? மாநில அமைச்சர் சிறப்புப் பேட்டி
- ரூபாய் தாள்களை அளவுக்கு அதிகமாக அச்சிடும் பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?
- சேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்
- வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே - சாத்தியமாக்கிய வியூகங்கள் மற்றும் ’டீம் கேம்’
- மலேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பு: திடீர் ஆட்சி மாற்றமா?
- இந்து வலதுசாரிகள் 'லவ் ஜிகாத்' எதிர்ப்பு: தனிஷ்க் நகை விளம்பரம் நீக்கம்
- கொரோனா பொது முடக்கத்துக்கு மத்தியில் வளர்ச்சியடைந்துள்ள சீன வர்த்தகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: