You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CSK vs SRH: சென்னை அணியின் வெற்றிக்கு உதவிய தோனியின் வியூகங்கள்
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தோல்விக்கான காரணங்கள் என்னவென்று கூறுவதை விட, வெற்றிக்கு இவை தான் காரணங்கள் என துல்லியமாக கூறுவது மிகவும் சிரமம். `சக்ஸ்ஸ் ஆஸ் மெனி ஃபாதர்ஸ்` (Success has many fathers)…என்று துவங்கும் பிரபல வாக்கியமே இதற்கு மிக சிறந்த சான்று.
2020 ஐபிஎல் தொடர் லீக் போட்டியில், ஹைதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது. ஒற்றை வரியில் கூறுவதென்றால், அவ்வளவே. ஆனால் இந்த வெற்றிக்கான பின்னணியும், வியூகங்களும் சற்று விரிவாக அலசப்பட வேண்டியவையே.
தொடர்ந்து இரு மோசமான தோல்விகள், பேட்ஸ்மேன்களின் மோசமான பங்களிப்பு, பிளே ஆஃப் சுற்றுக்கு அணி தகுதி பெறுமா என்ற சந்தேகம் என ஏராளமான பாதக அம்சங்களை தாண்டியே செவ்வாய்க்கிழமை சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக துபையில் நடந்த போட்டியில் சென்னை அணி களமிறங்கியது.
இந்த தொடரில் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் சென்னை வீரர்களில் கேப்டன் தோனி முக்கியமானவர். அவரது பேட்டிங் மிக கடுமையான கேள்விகளை சந்தித்து வருகிறது. அவருக்கு வயதாகி விட்டது என்றும், இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும் என்றும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
விமர்சனங்களுக்கு வியூகத்தால் பதிலளித்த தோனி
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தன் மீதான சில கேள்விகளுக்கு சிறப்பாகவே தோனி பதிலளித்தார் என்று கூறலாம்.
இந்த போட்டியிலும் தோனியின் பேட்டிங்கில் பழைய அதிரடி பாணியை காண முடியவில்லை. ஒரு சிக்ஸர் அடித்தார்; ஓரிரு பவுண்டரிகள் அடித்தார். 21 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் நடராஜன் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆனால் கேப்டன் தோனியின் வியூகங்கள் இன்றைய போட்டியில் சாதகமான முடிவுகளை அளித்தன.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில், தனக்கு முன்பாக பேட்டிங்கில் சாம் கரனை அனுப்பிய தோனி இம்முறை வியப்பளிக்கும் வகையில் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார்.
இந்த வியூகத்துக்கு ஓரளவு வெற்றியும் கிடைத்தது. அதிரடி பாணியில் விளையாடிய கரன் 31 ரன்கள் எடுத்தார். மேலும் வாட்சன், ராயுடு ஆகியோர் முறையே 3-வது, 4-வது நிலையில் பேட்டிங் செய்தது சற்றே வலுவிழந்த நிலையில் காணப்பட்ட பேட்டிங் வரிசைக்கு நம்பிக்கை அளித்தது.
1 ரன் அவுட் மற்றும் 2 விக்கெட்டுகள் - இது பிராவோ
அதேபோல், பந்துவீச்சின்போதும் தோனி மேற்கொண்ட சில வியூகங்கள் சாதகமான முடிவுகளை தந்தன.
ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தொடக்கத்திலேயே கணித்த அவர், தீபக் சாஹரை தொடர்ந்து பந்துவீச செய்து, சுழல் பந்துவீச்சாளர்களை பின் ஓவர்களுக்கு பயன்படுத்தினார். இது விக்கெட்களை தொடர்ந்து வீழ்த்த உதவியது.
பிராவோ இந்த தொடரில் பேட்டிங்கில் பெரிதாக பங்களிக்காத நிலையில், மிக சிறப்பாக அவர் ஒரு ரன் அவுட் செய்தார். இந்த தருணத்தில் அவர் உற்சாகமாகவும், நம்பிக்கை கூடுதலாகவும் இருப்பதை கண்ட தோனி , பிராவோவை ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் பந்துவீச செய்தார். பிராவோவும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பலனளித்த மாற்றம்
பொதுவாக தொடர் தோல்விகள், ஏமாற்றங்களுக்கு எல்லா வகையான வியூகங்களையும் தாண்டி சில மாற்றங்கள் எதிர்பாராத விதமாக நல்ல பலனளிக்கும்.
அவ்வாறு இயல்பாக நடந்த சில மாற்றங்களும் இந்த போட்டியில் சென்னை அணிக்கு சாதகமான முடிவை அளித்தது.
போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே, 2020 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக முதலில் பேட்டிங் செய்தது. இதனால் இலக்கு எதுவும் இல்லாத சூழலில், சென்னை பேட்ஸ்மேன்கள் அழுத்தமில்லாமல் விளையாடவும், 167 ரன்கள் குவிக்கவும் உதவியது.
அணியாக இணைந்த பங்களிப்பு
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டது ஜடேஜா. ஆனால், சாம் கரன், வாட்சன், அம்பத்தி ராயுடு, பிராவோ, தோனி என பலரும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். குழுவாக இணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றுள்ளது, சென்னை அணிக்கு வரும் போட்டிகளில் கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.
வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு இணை நடு ஓவர்களில் சிறப்பாக விளையாடியது. வாட்சன் 43 ரன்களும், ராயுடு 42 ரன்களும் எடுத்தது சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவியது.
பத்தே பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா, பந்துவீச்சிலும் சிறப்பாக பங்களித்தார்.
ஷ்ரத்துல் தாக்கூர் மற்றும் கரண் சர்மா ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்தனர்.
அதேவேளையில், தோனியின் வியூகங்களில் விடை தெரியா கேள்விகளும் உள்ளன.
கடந்த போட்டியில் விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசன், இந்த போட்டியில் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட பியூஸ் சாவ்லா ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசினார்.
இம்ரான் தாஹீர் இன்னமும் ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில், அவர் எப்போது விளையாடுவார் என்ற கேள்வியும் எழுகிறது.
ஒரு பேட்ஸ்மேனாக தனது பழைய அதிரடி பாணியை இந்த தொடரில் இன்னமும் எட்டாத தோனி, கேப்டனாக தனது வலுவான வியூகங்கள் மற்றும் சரியான கணிப்புகளால் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.
ஆனால், அதை விட சென்னை அணியின் வெற்றியை சாத்தியமாக்கியது ஒரு குழுவாக இணைந்து அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டது தான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: