You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ரஷ்ய ஸ்பூட்னிக்-V தடுப்பூசி யாருக்கு முதலில் போடப்படுகிறது?
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழுமையான முதலாவது தடுப்பூசியின் யாருக்கு முதலில் போடப்படுகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி அந்நாட்டின் அரசு ஊடகத்தில் பணியாற்றும் இருவருக்கு வைரஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஸ்பூட்னிக்-V தடுப்பூசி மருந்து தயாரிப்பு தலைமை விஞ்ஞாஞனி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி அந்த தடுப்பூசி மருந்து தயாரிப்பு, மூன்றாவது கட்டத்தை எட்டியிருக்கிறது. இதற்கிடையே, கொரோனா வைரஸால் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களுக்கு அந்நாடு தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தவிர, சுமார் 400 பேருக்கு தனியாக பரிசோதனை நிலையிலான முழுமையான கட்டத்தை எட்டிய தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரசு ஊடக செய்தியாளர்கள் யார்?
ரஷ்ய அரசு நடத்தும் செய்தி முகமைகளான RIA ,VGTRK ஆகியவற்றில் உள்ள தலா இரு செய்தியாளர்களுக்கு வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைதான் ரஷ்யா-1, ரஷ்யா-2 ஆகிய அரசு தொலைக்காட்சிகளை நிர்வகித்து வருகின்றன.
தன்னார்வ அடிப்படையில் அவற்றின் செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து போடப்பட்டுள்ளது.
எனினும் ஆர்ஐஏ நிறுவனம், தனது ஊழியர்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை வெளியிடவில்லை.
ஆர்ஐஏ, விஜிடிஆர்கே நிறுவனம் இரண்டும் மாஸ்கோவில் உள்ளன.
அவற்றின் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பாக, அனைவரும் ஆரம்பகால மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
ரஷ்ரயாவில் மிகவும் வைரஸ் ஆபத்தை எதிர்கொள்ளும் பணியில் ஈடுபடுவோராக சுகாதார ஊழியர்கள், செய்தியாளர்கள், ஆசிரியர்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு ஒரு பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது. இதனால், அவர்கள் வைரஸ் திட்டத்துக்காக தன்னார்வலர்களாக பதிவு செய்து கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் தமது மகள்களில் ஒருவர் வைரஸ் பரிசோதனை மருந்தை போட்டுக் கொண்டதாக கூறியிருக்கிறார். ஆனால், அது தொடர்பான கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை.
தொடக்கத்தில் ரஷ்யாவின் கொரோனா பரிசோதனை தடுப்பூசி மருந்தை பெற்றுக் கொள்ள பதிவுகள் வரவேற்கப்பட்டபோது 100க்கும் குறைவானவர்களே ஆர்வம் காட்டினர். ஆனால், பிறகு முதல் கட்ட பரிசோதனைகள் தொடங்கிய சில நாட்களிலேயே 40 ஆயிரம் பேர் வரை வைரஸ் பரிசோதனை தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ளும் தன்னார்வலர்களாக விண்ணப்பித்தனர்.
ஸ்பூட்னிக்-V வைரஸ் தடுப்பூசி மருந்து அந்நாட்டு மருந்துக கட்டுப்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை கமாலயா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த வைரஸ் தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையை நிறைவு செய்தால், இதுவே உலகின் முதலாவது முழுமையான கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தாக திகழும்.
உலக அளவில் கோவிட்-19 வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க பலகட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் முழுமையான கட்டத்தை எட்டியதாகக் கூறி ரஷ்யா அதன் குடிமக்களில் பலருக்கு ஏற்கெனவே வைரஸ் தடுப்பூசியை போட்டுள்ளது. சீனாவும் முழுமையாக பரிசோதனை கட்டத்தை நிறைவுசெய்யும் முன்பாக, தமது குடிமக்களுக்கு பரிசோதனை நிலையிலான வைரஸ் தடுப்பு மருந்தை போடத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நிலவரம்
இதற்கிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,94,069 ஆக பதிவாகியுள்ளது. இதில் ஆக்டிம் நோயாளிகள் எண்ணிக்கை 9,42,217 ஆக உள்ளது. இதுவரை 99,773 பேர் உயிரழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 484 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது என்றும் 1,005 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய சுகாதார அமைச்சக தரவுகள் கூறுகின்றன.
தொடர்புடைய காணொளி
பிற செய்திகள்:
- மலேசியாவில் உச்சம் தொட்ட கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் என்ன நிலவரம்?
- ஹாத்ரஸ் வழக்கு: எம்.பியை தள்ளிய அதிகாரி, தப்பிய பெண்ணின் சகோதரர், துரத்திய போலீஸ்
- பாபர் மசூதி இடிப்பு: உச்ச நீதிமன்றத்துடன் முரண்படுகிறதா சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு? வல்லுநர்கள் பார்வை
- பாபர் மசூதி தீர்ப்பு: நரேந்திர மோதியும் அமித் ஷாவும் மெளனம் காப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: