You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய வரலாற்றுப்பூர்வ உடன்பாடு: மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
இஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அபு தாபி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், "இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம், மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்தும்" என்று கூறியுள்ளனர்.
"இந்த உடன்பாட்டின் விளைவாக, ஆக்கிரமிப்பு மேற்குக்கரையின் பெரும்பாலான பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை இஸ்ரேல் இடைநிறுத்தும்" என்றும் அந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுநாள்வரை வளைகுடா அரபு நாடுகளுடன் ராஜீய ரீதியிலான உறவை இஸ்ரேல் வளர்த்துக் கொண்டதில்லை.
எனினும், வளைகுடா பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கு தொடர்பான கவலைகள் அதிகரித்து வருவதால், அலுவல்பூர்வமற்ற வகையில் உடன்பாட்டை எட்டியிருக்கும் நாடுகளுக்கு இடையே தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் யூசுஃப் அல் ஓடைபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இது ராஜீயத்துக்கும் பிராந்தியத்துக்குமான வெற்றி" என்று கூறியுள்ளார்.
மேலும், அரபு-இஸ்ரேலிய உறவுகள் மேம்பாட்டில் இது குறிப்பிடத்தக்கது என்றும், பிராந்திய பதற்றங்களை குறைத்து, சாதகமான மாற்றத்துக்கான புதிய சக்தியை இந்த உடன்பாடு உருவாக்கும் என்றும் யூசுஃப் அல் ஒடைபா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான இந்த வரலாற்றுப்பூர்வ உடன்பாடு தொடர்பான மேலதிக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
கடைசி ஒப்பந்தம் எப்போது?1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையே மேற்கொள்ளப்படும் மூன்றாவது உடன்பாடு இதுவாகும். இஸ்ரேல் சுதந்திரத்துக்குப் பிறகு எகிப்துடன் 1979 ஆண்டிலும், அதன் பிறகு 1994-ஆம் ஆண்டில் ஜோர்டானுடனும் இஸ்ரேல் இதுபோன்ற அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
புதிய உடன்பாட்டைத் தொடர்ந்து, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் உயர்நிலை பிரதிநிதிகள் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படும். அப்போது முதலீட்டுத்துறை, சுற்றுலா, சுகாதாரம், கலாசாரம், சுற்றுச்சூழல், பரஸ்பரம் தூதரகங்கள் அமைத்தல் போன்றவை தொடர்பாக இரு தரப்பும் முறைப்படி ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்.
இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின்படி, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஒரு பிரத்யேக கேந்திர கொள்கையை வகுக்கும் அமெரிக்க திட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் ஆகியவை இணையவுள்ளது.
தாங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், வாய்ப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால், பிராந்திய ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்க ராஜீய அளவிலான பங்கேற்பு, நீடித்த பொருளாதார ஒத்துழைப்பு, நெருக்கமான பாதுகாப்பு ஆகியவை தொடர்பான திட்டங்களை இனி இந்த நாடுகள் இணைந்து ஊக்குவிக்கும் என்று உடன்பாட்டை எட்டியுள்ள தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: