You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா காலத்தில் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி?
வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, பொருட்களை வாங்குவது என கொரோனா தொற்று நெருக்கடிக்கு பிறகு வாழ்க்கை முறை மாறிவிட்டது.
இது பாலியல் உறவுக்கும் பொருந்தும் என்கிறது பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொண்டு நிறுவனம்.
முத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பாலியல் உறவு கொள்ளும்போது முகத்தில் மாஸ்க் அணிந்து, முகத்தோடு முகம் அருகில் இல்லாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வது அவசியம் என்று டெரென்ஸ் ஹிக்கின்ஸ் நிறுவனம் வலியுறுத்துகிறது.
இதனை செயல்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால், கோவிட் 19 நெருக்கடி காலத்தில், தொற்று பரவாமல் நம்மை தற்காத்து கொள்ள பாலியல் வாழ்க்கையை முறைப்படுத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
தற்போதைய நிலையில் நீங்களே உங்களுக்கு பாலியல் துணை, அல்லது நீங்கள் சேர்ந்து வாழும் நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என அத்தொண்டு நிறுவனம் கூறுகிறது.
சுயஇன்பம், செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்திக் கொள்வது, இணையம் அல்லது கைப்பேசியில் உங்கள் இணையருடன் பேசி பாலியல் உறவு வைத்துக் கொள்வதே பாதுகாப்பானது.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா காலத்தில் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
பாலியல் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்றில்லை, ஆனால் உங்கள் வீட்டில் சேர்ந்து வாழும் நபரோடு மட்டும் பாலியல் உறவு வைத்து கொள்ளலாம்.
அப்படி வெளிநபர்களுடன் வைத்துக்கொண்டால், அதனை ஒரு சில நபர்களுடன் மட்டுமே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
தற்போதைய சூழலில் உங்களுக்கோ அல்லது உங்கள் இணையருக்கோ கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
புதிதாக ஒருவரை சந்திக்கிறீர்கள் என்றால், அவருக்கோ அல்லது அவரது வீட்டில் உள்ள நபருக்கோ, கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என அத்தொண்டு நிறுவனம் வலியுறுத்துகிறது.
பாலியல் உறவு வைத்துக்கொள்வதன் மூலம் கொரோனா பரவுமா?
ஒருவருடைய எச்சில், சளி அல்லது கொரோனா தொற்று இருப்பவருடைய மூச்சு வழியாக கொரோனா பரவலாம்.
"நீங்கள் உங்கள் இணையரின் பிறப்புறுப்புகளை தொடுகிறீர்கள் என்றால், அவரை அணைத்து முத்தமிடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த வகையில் எச்சில் வழியே கொரோனா பரவும்" என்கிறார் பிபிசியின் ரேடியோ 1 நியூஸ்பீட்டுக்கு பேட்டியளித்த மருத்துவர் அலக்ஸ் ஜார்ஜ்.
அதனால்தான் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்போது ஒருவரையொருவர் முத்தமிட வேண்டாம் என்றும் முகக்கவசம் அணியுமாறும், முகத்தோடு முகம் அருகில் இருக்குமாறு பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தொண்டு நிறுவனம் வலியுறுத்துகிறது.
மேலும் விந்தணுக்களிலும் வைரஸ் இருக்கும் என்பது தெரியவந்துள்ளதால், உறவு வைத்துக் கொள்ளும்போது ஆணுறை பயன்படுத்துவது அவசியம்.
அதோடு பாலியல் உறுவு வைத்துக்கொள்ளும் முன்பும், அதற்கு பிறகும் கைகளை நன்கு கழுவுவது முக்கியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி பொதுவாகவே பாலியல் ஆரோக்கியம் முக்கியம். பாலியல் ரீதியான நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதித்துக்கொள்வதும் அவசியமான ஒன்று என்கிறது அந்நிறுவனம்
"கொரோனா ஊரடங்கால், ஒருவருக்கு பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறைவே. அதனால் இந்த நேரத்தை பயன்படுத்தி உங்களை நீங்கள் பரிசோதித்து கொள்வது சிறந்தது" என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: