ரஷ்ய அதிபர் புதின் மகள்கள் பற்றிய புதிய தகவல்கள்: ரகசிய பெயருடன் மாஸ்கோவில் வாழ்க்கை

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தமது நாடு கண்டுபிடித்து விட்டதால், அதை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். ஆனாலும், உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளை சரியாக பின்பற்றாமல் தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்துவது அபாயகர விளைவுகளை ஏற்படுத்தலாம் என பல நாடுகளின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பெற்ற தன்னார்வலர்களில் தனது மகளும் ஒருவர் என்று கூறிய ரஷ்ய அதிபர், அவர் யார் என்பதை வெளியிடவில்லை. இதனால் அதிபர் புதினின் மகள் மற்றும் அவரது குடும்ப வாழ்க்கை பற்றிய தகவல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதினின் தனி வாழ்க்கை ரகசியம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எப்போதும், தமது அரசியல் வாழ்வையும் தனி வாழ்வையும் கலக்காமல் அதை தனிமைப்படுத்தியே வைத்திருப்பார். பொது நிகழ்வுகளிலும் அவரது குடும்பத்தினர் அவ்வளவாக வெளியே வருவதில்லை.

ஊடகங்களில் வெகு குறைவாக வந்த செய்திகளில், ரஷ்ய அதிபருக்கு இரு மகள்கள் இருப்பதாகவும் ஒருவர் பெயர் மரியா புடீனா, மகனின் பெயர் யெகடெரினா புடீனா என கூறப்பட்டது.

2015-ஆம் ஆண்டில் யெகடெரினா புடீனா பற்றிய செய்திகள் அரிதாக வெளிவந்தன. அப்போது மாஸ்கோவில் கேத்ரினா டிகோனோவா என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

உடலை வளைத்து சாகசம் செய்யும் அக்ரோபேட்டிக் நடனக்கலைஞரான அவர் அந்த துறையில் சாம்பியனாகவும் விளங்குகிறார். 33 வயதாகும் அவர், மாஸ்கோவில் உள்ள புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தகவல் கூறுகிறது. இயற்பியல், கணிதவியல் பட்டங்களை அவர் படித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

போலி பெயருடன் வாழ்க்கை

இதன் பிறகே, தனது தந்தையின் பெயரை பெயருக்குப் பின் போடாமல், கேத்ரினா டிகோனோவா என்ற பெயரை தமது அடையாளமாக அவர் வைத்துக் கொள்ளவும் தொடங்கியுள்ளார்.

2013-ஆம் ஆண்டில் யெகடெரினா, கெரில் ஷாமலோஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர், ரோஸியா வங்கியின் இணை நிறுவனர் நிகோலே ஷாமலோஃபின் மகன்.

ஒரு காலத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், நிகோலே ஷாமலோஃபும் நெருங்கிய நண்பர்கள். கெரில் ஷாமலோஃபும் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வருகிறார். எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் அவர் மிகவும் பிரபலமானவர். ரஷ்ய அரசாங்கத்தின் ஆலோசகர் பதவியையும் அவர் வகித்துள்ளார்.

ஆனால், 2018-இல் யெகடெரினாவும் கிரில் ஷாமலோஃபும் பிரிந்தனர்.

புதினின் மூத்த மகள் யார்?

மரியா புடீனாதான் ரஷ்ய அதிபரின் மூத்த மகள். அவர், மரியா வொரொன்ட்ஸோவா என்ற பெயரால் அறியப்படுகிறார்.

ஒரு முறைய ரஷ்ய அதிபர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, வொரொன்ட்ஸோவா, யெகடெரினா பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் பதில் அளித்த புதின், "தொழில்துறை தொடர்பாக கேள்வி எழுப்பி விட்டு இரு பெண்கள் பற்றிய கேள்வியை கேட்கிறீர்கள். நீங்கள் முன்வைத்த சில தகவல்கள் உண்மைக்கு அப்பாற்பட்டவை" என்று கூறினார்.

மேலும், "சிறிது தகவல் தெரிந்தாலும், அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், அந்த தொழிலை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று புதின் பதில் அளித்தார்.

மரியா வெரொன்ட்ஸோவா, ரஷ்யாவின் லெனின்கிரெட் பகுதியில் பிறந்தவர். உட்சுரப்பியல் மருத்துவ நிபுணர். மாஸ்கோவில் ஒரு புனைப்பெயருடன் அவர் வாழ்ந்து வருவதாக சில காலத்துக்கு முன்பு பிபிசியில் வெளியான நியூ டைம்ஸ் இதழை மேற்கோள்காட்டும் செய்தி வந்திருந்தது.

உட்சுரப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவர் விஞ்ஞானியாக பணியாற்றி வருவதாகவும் ஒரு தகவல் உண்டு. மேலும், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளுக்கு தாயாக அவர் இருக்கிறார் என்றும் ஒரு தகவல் மரியா வொரொன்ட்ஸோவா பற்றி உள்ளது.

சமூக ஊடகங்களில் வந்த தகவல்கள் அடிப்படையில், நியூ டைம்ஸ் நாளிதழ், "மரியா ஒரு பரந்துபட்ட வாழ்வை வாழ்வதாகவும், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர் என்றும் அவருக்கு பல ஐரோப்பிய நண்பர்கள் உள்ளனர்" என்றும் கூறியது.

மகள்களின் அடையளம் மீதான அச்சம்

எனினும், எந்தவொரு சூழலிலும் தனது மகள்கள் பற்றி பொதுவெளியில் பேசுவதை அதிபர் புதின் குறைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அதிபர் தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் பற்றிய சில வரிகளை புதின் வெளியிட்டிருக்கிறார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தகவல்களின்படி, தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விவரங்களின் ரகசியத்தை பாதுகாக்க அதிபர் புதின் விரும்புவதாக தெரிய வந்துள்ளது. தமது மகள்கள் யார் என்பது தெரிய வந்தால், அவர்களால் இயல்பான வாழ்வை வாழ முடியாமல் போகலாம் என்ற அச்சம் காரணமாகவும் அவர்கள் இயல்பாக மற்றவர்களை போல வாழ வேண்டும் என்றும் அதிபர் புதின் விரும்பியிருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

1983-ஆம் ஆண்டில் லூட்மினா பூட்டினாவை ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் மரியா மற்றும் யெகடெரினா. இந்த தம்பதி 2013-2014 ஆண்டுகளில் பிரிந்தார்கள்.

ரஷ்ய அதிபருடன் இணைந்து வாழ்ந்த காலத்தில் கூட, லூட்மில்லா பொதுவெளியில் தென்படாமலேயே இருந்தார். எனினும், ரஷ்ய அதிபரின் மனைவி என்ற முறையில், சில வெளிநாட்டு பயணங்களை அந்த காலகட்டங்களில் அவர் மேற்கொண்டிருக்கிறார். 2004-இல் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்தபோது, இந்த தம்பதி ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை சுற்றிப்பார்த்தது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: