WHO இயக்குநர் சொன்ன Silver Bullet என்பது என்ன? கொரோனா மருந்து பற்றி அவர் என்ன சொன்னார்?

கொரோனாவுக்கு மருந்தே வராமல் போகலாம் என்பது போன்ற ஒரு கருத்தை உலக சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இது போன்ற ஒரு கருத்தை வெளியிட்டார்.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பல முயற்சிகள் மூன்றாம் கட்ட பண்டுவப் பரிசோதனை (கிளினிகல் ட்ரையல் எனப்படும் மனிதர்களுக்குத் தந்து மேற்கொள்ளும் சோதனை) கட்டத்தில் உள்ளன.

நல்ல பலனைத் தரும் பல தடுப்பு மருந்துகள் வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதைத் தொடர்ந்து However, there's no silver bullet at the moment and there might never be என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டார்.

silver bullet என்ற சொல்லுக்கான அகராதி விளக்கம், மாயாஜாலம் போல தீர்வை அளிக்க வல்லது என்பதாகும்.

ஆங்கில நாட்டார் கதைகளில், வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டு மாய ஓநாய், சூனியக் காரிகள், ரத்தக்காட்டேரி, பூதங்கள் ஆகிய எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்த வல்லது என்ற குறிப்புகள் இருக்கும்.

ஆக, கொரோனாவை போட்டவுடன் சரி செய்யும் மருந்து ஒன்று இதுவரை இல்லை, இனியும் வராமல் போகலாம் என்பதுதான் டெட்ரோஸ் கூறியதன் பொருள் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

இந்த மாயாஜாலத் தீர்வு என்று அவர் தடுப்பு மருந்தைக் குறிப்பிடுகிறாரா? அல்லது குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படாமலே போய்விடலாம் என்று குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், பரிசோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகிய நடைமுறைகளை அரசுகள் மேற்கொள்வதன் மூலம் இந்த வைரஸை எதிர்க்க அரசுகள் முயல வேண்டும் என்றும், தனிமனிதர்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது, பாதுகாப்பாக இருமுவது ஆகிய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடுகள் தங்கள் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: