கொரோனா வைரஸ்: மாறிவரும் மரபணுக்கள் தொற்று தீவிரமாக காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரேச்சல் ஷ்ரேயர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், சீனாவில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பை போன்றது அல்ல.
உலகமெங்கும் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வரும் சார்ஸ்-கோவ்-2 என்று பெயரிடப்பட்டுள்ள கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸ் மாற்றமடைந்து வருகிறது.
ஆனால், விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான மாற்றங்களையோ அல்லது வைரஸின் மரபணுப் பொருளில் மாற்றங்களையோ கண்டறிந்திருந்தாலும், இதுவரை அதில் ஒன்று மட்டுமே வைரஸின் நடத்தையை மாற்றியமைத்திருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
இப்போது வைரஸின் மாற்றங்கள் குறித்து எழுந்துள்ள முக்கிய கேள்விகள் என்னவென்றால், இதனால்தான் நோய்த்தொற்று தீவிரமடைகிறதா அல்லது உயிரிழப்புகள் அதிகரித்ததா? இது எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் வெற்றிகரமான தடுப்பு மருந்துக்கு அச்சுறுத்தலை விளைவிக்குமா? என்பவைதான்.
வைரஸ் போன்ற காய்ச்சலுடன் ஒப்பிடும்போது இந்த கொரோனா வைரஸ் உண்மையில் மிக மெதுவாக இயல்பு மாறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மக்கள் தொகையில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பு மருந்து மற்றும் பயனுள்ள சிகிச்சைகள் இல்லாததால், வைரஸ் தன்னை மாற்றியமைத்துக்கொள்ள தேவை ஏற்படவில்லை. எனவே, தற்போது வரை தன்னிலை மாறாமல் மக்கள் மத்தியில் அது சுதந்திரமாக சுற்றி வருகிறது.
கொரோனா வைரஸில் குறிப்பிடத்தக்க விகாரத்துக்கு டி614ஜி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் நமது உயிரணுக்களுக்குள் நுழைய பயன்படும் வைரஸின் மேற்புறத்திலுள்ள "ஸ்பைக்" புரதத்திற்குள் நடந்துள்ளது.
அநேகமாக வூஹானில் முதன் முதலில் நோய்த்தொற்று பரவத் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு இது இத்தாலியில் தோன்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் சுமார் 97 சதவீத கொரோனா வைரஸ் நோயாளிகளின் மாதிரிகளில் இந்த மாற்றம் காணப்படுகிறது.
மாற்றமடைவது எப்படி?
இந்த மாற்றம் அதிகளவிலான மக்கள் மத்தியில் காணப்படுவதற்கு வைரஸ் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் காரணமா அல்லது இது தற்செயலானதா என்ற கேள்வி எழுகிறது.
வைரஸுக்குள் தொடர்ந்து பல இந்த மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும். அவற்றில் சில மாற்றங்கள் வைரஸ் இனப்பெருக்கம் செய்ய உதவும், சில மாற்றங்கள் இந்த செயல்பாட்டைத் தடுக்கக்கூடும்.
சில மரபணு மாற்றங்களுக்கு எந்த பண்புகளும் இல்லை. ‘‘அவை வைரஸ் பல்கிப்பெருகும் நடைமுறையின்போது உருவாகும் துணை பொருள் ’’ என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் லூசி வான் டார்ப் கூறுகிறார். இவை வைரஸின் செயல்பாட்டை மாற்றாமல் அவற்றுடன் பயணிக்கின்றன.
பெருந்துதொற்றின் தொடக்க காலத்திலேயே வைரஸுடன் சேர்த்து இந்த மாற்றங்களும் பரவியதால் அது அதிகளவில் பரவியிருக்கலாம் என்ற கோட்பாடு குறித்தும் தற்போது பேசப்படுகிறது. இதை ‘ஃபவுண்டர் எஃபெக்ட்’ என்கிறார்கள். இதுவே மாற்றங்கள் மிகவும் பரவலாக காணப்படுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் வான் டார்ப் மற்றும் அவரது குழுவினர் நம்புகிறார்கள். ஆனால் இது குறித்த சர்ச்சைகள் வலுத்துவருகின்றன.
ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் துஷான் டி சில்வா விளக்குவது போன்ற பெரும்பாலான வைராலஜிஸ்டுகள், வைரஸின் இந்த பாதிப்பு, முந்தைய பாதிப்பைவிட நன்மை வாய்ந்ததாக இருப்பதை புரிந்துகொள்ள போதுமான தரவுகள் உள்ளதாக நம்புகிறார்கள்.
மக்களிடையே இது அதிகம் பரவக்கூடியது என்பதை நிரூபிக்க இன்னும் போதுமான சான்றுகள் இல்லை என்றாலும், அது நடுநிலை வகிக்கவில்லை என்று தான் உறுதியாக நம்புவதாக அவர் கூறுகிறார்.
ஆய்வகத்தில் ஆய்வு செய்தபோது, மாற்றம் அடையாத வைரஸைவிட விகாரம் அடைந்த வைரஸ் மனித உயிரணுக்களில் எளிதாக நுழைந்துவிட்டதாக புளோரிடாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான ஹைரியூன் சோ மற்றும் மைக்கேல் ஃபர்சான் கூறுகின்றனர். வைரஸை மனித உயிரணுக்களுடன் இணைக்கப் பயன்படும் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவை செல்களுடன் சிறப்பாக ஒட்டிக்கொள்ளவும் மேலும் திறம்பட செயல்படவும் வகைசெய்கின்றன.

பட மூலாதாரம், SAUL LOEB / GETTY IMAGES
ஆனால் அங்குதான் அவர்கள் ஒரு விடயத்தை வரையரை செய்தனர்.
இந்த வைரஸ்களின் ஸ்பைக் புரதங்கள் அவை வழக்கமாக செய்துவந்த ஒரு விடயத்தில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றன. அவை அதிகமாக பரவுவதாக நிரூபிக்கபடவில்லை என்று பேராசிரியர் ஃபர்சான் கூறுகிறார்.
ஆய்வக முடிவில் கிடைத்த ஆதாரம்
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஜீனோம் தொழில்நுட்ப மையத்தில் மரபணு திருத்த தொழில்நுட்பமான கிறிஸ்ப்ரில் பணிபுரிந்துவரும் டாக்டர் நெவில் சஞ்சனா, இந்த ஆய்வில் ஒரு படி மேலே சென்றுள்ளார்.
இவரது தலைமையிலான அணி, மரபணு மாற்றங்கள் நடைபெறாமல் வைரஸ் ஒன்றின் ஸ்பைக் புரதத்தில் மாற்றம் செய்து அதை வூஹானில் பரவத் தொடங்கிய உண்மையான சார்ஸ்-கோவ்-2 வைரஸோடு இணைத்து மனித திசுக்களில் செலுத்தினர். ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் முடிவில், உண்மையான வைரஸைவிட மரபணு மாற்றங்கள் அடைந்த வைரஸின் வேகமாக பரவுவது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

உண்மையான நோயாளிகள் மத்தியில் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தெளிவாக தெரியவில்லை என்று டாக்டர் வான் டாஃர்ப் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பேராசிரியர் ஃபர்சான் கூறுகையில், இந்த ஆய்வுகளின் மூலம் பெறப்பட்டுள்ள உயிரியல் மாற்றங்கள் அடைந்த வைரஸ்தான் அவற்றை வேகமாக பரவச்செய்கின்றன என்பதற்கு போதுமான சான்றாகிறது என்று கூறுகிறார்.
ஆய்வக சோதனை முடிவுகள் ஒருபுறமிருக்க இதற்கு சில மறைமுகமான ஆதாரங்களும் உள்ளன. மாற்றம் அடைந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பரிசோதனை மாதிரியில் அதிகளவிலான வைரஸ் இருப்பதும், இதுவே மற்றவர்களைவிட இந்த நோயாளிகளுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட காரணம் என்றும் இருவேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த நோயாளிகள் இயல்பை விட அதிக காலம் மருத்துவமனையில் இருந்ததாகவோ அல்லது தீவிரமான உடல்நல பாதிப்புக்கு ஆளானதாகவோ இதுவரை எவ்வித ஆதாரங்களும் இல்லை.
பொதுவாக, அதிக அளவில் பரவினால் அந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று அர்த்தமாகிவிடாது. ஆனால் குறைவாக பரவுகிறது என்றால் குறைந்த ஆபத்து என்ற சூழல் பெரும்பாலும் உண்மை என கொள்ளலாம்.
பெருந்தொற்றாக உருவெடுத்த புதிய மாற்றம்
உலகளவில் பார்க்கும்போது, கொரோனா வைரஸ் வேகமாகவோ அல்லது குறைவாகவோ பரவுகிறதா என்பதை கண்காணிப்பது கடினமானது. ஏனெனில், நோய்த்தொற்று பரவும் விதமும், அளவும் முடக்க நிலை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட செயல்பாடுகளால் பெரிதும் மாறுதலடைந்து வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், கொரோனா வைரஸின் இந்த புதிய பாதிப்பு தற்போது சீனா உட்பட பல நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது என்பதால் இது மக்களிடையே பரவுவதில் அசல் பாதிப்பை விட வேகமானதாக இருக்கலாம் என்று பேராசிரியர் கோர்பர் கூறுகிறார்.
இந்த இரண்டு பாதிப்புகளும் ஒரே நேரத்தில் பரவிக்கொண்டிருக்கும்போது புதிய பாதிப்பு வேகமாக செயல்படுகிறது என்று கூறலாம்.
அந்த வகையில், தற்போது ஆதிக்கம் செலுத்திவரும் டி614ஜி மாற்றமே பெருந்தொற்றாகும். இது பிரிட்டனிலும், அமெரிக்காவின் சில பகுதிகளும் நோய்த்தொற்று பாதிப்பு உச்சநிலையை அடைந்த சமயத்திலிருந்தே இருந்திருக்கலாம்.
கொரோனா வைரஸின் மேற்பகுதியில் உள்ள ஸ்பைக் புரதத்தின் பல்வேறு பகுதிகளை அடிப்படையாக கொண்டே பெரும்பாலான தடுப்பு மருந்து ஆய்வுகள் நடைபெற்று வருவதால், தடுப்பு மருந்து தயாரிப்பில் இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் ஒட்டுமொத்த அறிவியல் உலகமுமே ஈடுபட்டுள்ளதால் வைரஸின் மாற்றங்கள் மீது விஞ்ஞானிகளுக்கு எப்போதும் ஒரு சிறப்பு கவனம் இருக்கும் என்பதே உண்மை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












