பருவநிலை மாற்றம்: 2100ஆம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் அழிந்து போகலாம் மற்றும் பிற செய்திகள்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடில், 2100ஆம் ஆண்டிற்குள் பனிக்கரடிகள் இல்லாமல் போகலாம் என்கிறது ஆய்வு ஒன்று.

ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனி உருகி வருவதால் ஏற்கனவே பல உயிரினங்கள் அழிந்துவிட்டன.

சீல்களை வேட்டையாடி உண்பதற்கு பனிக்கரடிகள் ஆர்க்டிக் பெருங்கடலை நம்பியிருக்கின்றன.

பனி உருகினால், இந்த விலங்குகள் உணவைத் தேடி நீண்ட தூரத்திற்கு செல்ல நேரிடும் அல்லது கரைக்கு வரக்கூடும்.

"பனிக்கரடிகள் உலகின் உச்சிப் பகுதியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன எனவே இந்த பனிப்பாறைகள் உருகிவிட்டால் அவை போவதற்கு எந்த இடமும் இல்லை," என்கிறார் கனவின் ஓண்டாரியாவில் உள்ள டுரோண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் பீட்டர்.

பருவநிலை மாற்றத்திற்கான விளைவை இந்த விலங்குகள் சந்திக்க நேரிடும் என்கிறார் பீட்டர்.

பனிக்கரடிகளை அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளின் பட்டியலை சேர்த்துள்ளது இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம்.

மேலும் பனிக்கரடிகளின் அழிவிற்கு முக்கிய காரணமாக பருவநிலை மாற்றம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்துள்ள ஆக்ஸ்போர்ட் பரிசோதனை

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும்.

இந்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், ஆண்டிபாடிக்களையும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

பரிசோதனை குறைவாக செய்வதே தெற்காசியாவில் தொற்று குறைவாக பதிவாக காரணமா?

அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட உலகின் மூன்றாவது நாடாக உள்ள இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளது.

மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவுக்கு வேண்டுமானால் இது வியப்பளிப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் குறைந்த மக்கள்தொகையை கொண்ட அதன் அண்டை நாடுகள் கோவிட்-19 நோய்த்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தோம்.

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை காட்சிக்கு வைக்க அகழ்வைப்பகம்

மதுரை மாவட்டத்திற்கு அருகில் கொந்தகையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்கான அகழ் வைப்பகத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை மேட்டில் சுமார் 110 ஏக்கர் பரப்பில் 2014ஆம் ஆண்டிலிருந்து அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. 2014லிருந்து 2017வரை மத்தியத் தொல்லியல் துறை இந்த அகழ்வாராய்ச்சியை நடத்தியது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2017லில் இருந்து தற்போதுவரை இந்த ஆய்வை நடத்திவருகிறது.

2017-18ல் நடந்த தொல்லியல் ஆய்வில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. செங்கல் கட்டுமானப் பகுதிகளும் வெளிப்படுத்தப்பட்டன. 2018-19ல் நடந்துவரும் தொல்லியல் ஆய்வில் இதுவரை 900 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 2019-20ல் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

சீனா செல்ல காத்திருக்கும் ராமநாதபுரம் பரோட்டா மாஸ்டர்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள அனைத்து தொழில்களும் அதனை சார்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நெருக்கடியால் சீனாவில் உள்ள உணவகங்களில் வேலை செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் புலியூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

கடந்த ஆறு மாதங்களாக வேலையின்றி சொந்த ஊர்களில் தவித்து வரும் இவர்கள் மீண்டும் சீனா திரும்பி செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: