You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி: முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்துள்ள ஆக்ஸ்போர்ட் பரிசோதனை
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும்.
இந்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், ஆண்டிபாடிக்களையும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
பரிசோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்திலிருந்தாலும், கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாதற்கு இது போதுமானதா என இப்போதே கூற முடியாது. பெரும் திரளான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரியவரும்.
பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே கொள்முதல் ஆணை தந்துள்ளது.
எப்படி இந்த தடுப்பூசியை உருவாக்கினார்கள்?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியின் பெயர்: ChAdOx1 nCoV-19.
இது எதிர்பாராத வேகத்தில் உருவாக்கப்பட்டது.
சிம்பன்சி குரங்குகளுக்குச் சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய வைரஸை எடுத்துக்கொண்டு அதனை மரபணு மாற்றம் செய்து இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
செலுத்தப்படும் நபர்களுக்குத் தொற்றுநோயை ஏற்படுத்தாதவாறும், கொரோனா போல தோற்றமளிக்கும் விதத்திலும் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் வெளிப்புறத்தில் உள்ள 'ஸ்பைக் புரதம்' என்ற முள்முடி போன்ற பாகம்தான் அந்த வைரஸ் மனித உடலின் உயிரணுக்களுக்குள் ஊடுருவ பயன்படுத்தும் ஒரு சாதனம். கொரோனா வைரசின் மரபணுத் தொடரில் இந்த ஸ்பைக் புரதத்துக்கான குறியீடுகளைப் பிரித்தெடுத்து அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர். இதனால், இந்த தடுப்பூசியில் உள்ள மரபணு மாற்றப்பட்ட வைரஸ் பார்ப்பதற்கு கொரோனா வைரஸ் போலவே தோற்றம் அளிக்கும்.
மாறுவேடம்
இப்படி கொரோனா போலவே மாறுவேடம் பூண்ட மரபணு மாற்ற வைரஸ் மனித உடலுக்குள் செலுத்தப்படும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இதனை அடையாளம் காணவும், அதனோடு போரிடவும் பயிற்சி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் பிறகு உண்மையான கொரோனா வைரஸ் எப்போதாவது உடலுக்குள் நுழையும்போது, அதனை உடனடியாக அடையாளம் காணவும், எதிர்த்துப் போராடவும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்குப் போதிய பயிற்சி இருக்கும் என்பதால், கொரோனா வைரஸால் உடலில் தொற்றாக மாற முடியாது. இதுதான் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் வடிவமைப்பு உத்தி. தற்போது உலகில் இந்தியத் தடுப்பு மருந்து உட்பட 140 கொரோனா தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஆராய்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. பொதுவாக எல்லா தடுப்பு மருந்துமே உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு பயிற்சி அளிப்பதையே வழிமுறையாகக் கொண்டவை என்றபோதும் அதற்கு தேர்ந்தெடுக்கும் தடுப்பு மருந்து எதில் இருந்து எப்படி உருவாக்கப்படும் என்பது மருந்துக்கு மருந்து வேறுபடும்.
பிற செய்திகள்:
- ஐரோப்பாவை நிலைகுலைய வைத்த கருப்பு மரணம் பணக்காரர்களை மேலும் வசதியாக்கியது எப்படி?
- சொந்த ஊரில் வேலையில்லை - சீனா செல்ல காத்திருக்கும் ராமநாதபுரம் பரோட்டா மாஸ்டர்கள்
- ஐக்கிய அரபு அமீரக விண்கலம்: செவ்வாய் கோளை நோக்கி பயணத்தை தொடங்கியது
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?
- ஆளுநர் கிரண்பேடி வராமலே பட்ஜெட் தாக்கல் செய்த புதுவை முதல்வர் நாராயணசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :