You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தொற்று: இரானில் உண்மையில் எத்தனை பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தது? மற்றும் பிற செய்திகள்
இரானில் கொரோனா
இரானில் தற்போது வரை 2,69,440 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை இரானில் 2,71,606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழமானது அரசு தரும் தகவல்களை வைத்தே பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் மீண்டவர்கள் கணக்கை வெளியிடுகிறது. இந்த நிலையில், ஏறத்தாழ 2.5 கோடி இரானியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3.5 கோடி பேர் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்தில் இருப்பதாகவும் இரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். இது அரசு தகவல்களை விட பல மடங்கு அதிகம்.
ரூஹானி, "கடந்த 150 நாட்களில், தரவுகளின்படி, 2.5 கோடி பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் மேலும் 3.5 கோடி பேர் கொரோனாவால் வரும் நாட்களில் பாதிக்கப்படுவார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இருமடங்காக உயரும்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கடந்த 150 நாட்களில் 14 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்துள்ளதாகவும், இரண்டு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்," தெரிவிக்கிறார்.
இந்தியாவில் மழைக்காலம்: கொரோனா அதிகரிக்குமா? அல்லது குறையுமா?
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்தில் இந்தியாவில் நிலவும் வெப்பநிலை காரணமாக அந்த வைரஸின் தீவிரம் குறைந்துவிடும் எனப் பலரும் கூறி வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கடுமையான வெப்பம் இருந்தும் , கொரோனா வைரஸ் பரவல் எந்த விதத்திலும் குறையவில்லை.
தற்போது இந்தியாவில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை காரணமாக கொரோனா பரவல் வேகமெடுக்கும் என்ற தகவலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த தகவல் உண்மையா?
விரிவாகப் படிக்க:இந்தியாவில் மழைக்காலம்: கொரோனா அதிகரிக்குமா? அல்லது குறையுமா?
தருமபுரி: தலித் சிறுவனை கையால் மலம் அள்ள வைத்ததாகப் புகார்
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதரில் மலம் கழித்த தலித் சிறுவனை, நில உரிமையாளர் சாதி பெயர் சொல்லி இழிவாகப் பேசியதோடு, கையால் மலம் அள்ள வைத்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. பென்னாகரம் அருகே கோடானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், கடந்த 15-ம் தேதி (புதன்கிழமை) மலம் கழிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள புதருக்குள் சென்றுள்ளார்.
அங்கு வந்த நில உரிமையாளர் ராஜசேகர் என்பவர், சிறுவனின் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதோடு, அவரை கையால் மலத்தை அள்ள வைத்து வேறு இடத்தில் போடவேண்டும் என வற்புறுத்தினார் என சிறுவனின் தந்தை கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
விரிவாகப் படிக்க:தருமபுரி: தலித் சிறுவனை கையால் மலம் அள்ள வைத்ததாகப் புகார்
ரோஷினி நாடார்: ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவர் பற்றிய முக்கிய தகவல்கள்
இந்தியாவின் பணக்கார பெண்ணான ரோஷினி நாடார், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஐ.டி நிறுவனங்களில், தலைவராகப் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் அந்தப் பொறுப்பிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை விலகினார். 1976-ம் ஆண்டு ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
விரிவாகப் படிக்க:ஹெச்.சி.எல் புதிய தலைவர் ரோஷினி நாடார் பற்றிய முக்கிய தகவல்கள்
கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக போராட்டம்
சென்னை எழும்பூரில் கடந்த வியாழனன்று (ஜூலை 16) கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் மீது தொற்றுநோய்கள் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைதான விவகாரம் குறித்து பேசும் பாஜகவினர், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில், கந்தசஷ்டி கவசம் குறித்து ஆபாசமான கருத்துக்கள் வெளியான போது, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்காத நேரத்தில், போராட்டத்தில் பாஜக இறங்கியது தவறில்லை என தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :