You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோஷினி நாடார்: ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவர் பற்றிய முக்கிய தகவல்கள்
இந்தியாவின் பணக்கார பெண்ணான ரோஷினி நாடார், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஐ.டி நிறுவனங்களில், தலைவராகப் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் அந்தப் பொறுப்பிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை விலகினார். 1976-ம் ஆண்டு ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
``ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான ஷிவ் நாடார் அந்தப் பொறுப்பிலிருந்து தற்போது விலகியுள்ளார். அடுத்த தலைவராக, அவரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ராவை நிர்வாக குழு நியமித்துள்ளது.`` என கடந்த வெள்ளிக்கிழமை ஹெச்.சி.எல் நிறுவனம் அறிவித்தது.
அதே சமயம் ஷிவ் நாடார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தொடர்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.சி.எல் நிறுவனம் 9.9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ளது என அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.சி.எல் குழுமத்தில் ஹெச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்.சி.எல் இன்போ சிஸ்டம்ஸ், ஹெச்.சி.எல் ஹெல்த் கேர் போன்ற நிறுவனங்கள் உள்ளன. உலகில் 49 நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஷினி நாடார், கடந்த 2013-ம் ஆண்டு ஹெச்.சி.எல் நிர்வாக குழுவின் உறுப்பினரானார். பின்னர் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநாகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி ஏற்றார்.
அத்துடன் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் இயக்குநராகவும் இவர் உள்ளார்.
36,800 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார பெண்ணாக உள்ள இவர், 2019 ஃபோர்ப்ஸ் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் 54வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், 2017, 2018-ம் ஆண்டும் ஃபோர்ப்ஸின் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் இடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
ஷிவ் நாடார், கிரண் நாடார் தம்பதியின் ஒரே மகளான ரோஷினி நாடாருக்கு 38 வயதாகிறது. டெல்லியில் உள்ள வசந்த் வெலி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் எம்.பி.ஏ படித்தார்.
2009-ம் ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, ஸ்கை நியூஸ், சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி தயாரிப்பாளராக பணியாற்றினார்.
ஷிகர் மல்ஹோத்ராவை 2010-ல் ரோஷினி நாடார் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :