You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுனிதா யாதவ்: “யாருக்கும் அச்சமில்லை, எங்கும் செல்லவுமில்லை” - உறுதியாக எதிர்த்து நிற்கும் குஜராத் பெண் காவலர்
சுனிதா. கடந்த சில தினங்களாக உச்சரிக்கப்படும் பெயர். சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் சொல்.
யார் இந்த சுனிதா?
கடந்த வாரம் ஊரடங்கை மீறி வெளியே வந்த குஜராத் அமைச்சரின் மகனைப் பெண் காவலர் ஒருவர் எச்சரிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாகத் தெரிகிறது.
அவர்களை சூரத் போலீஸ் நிலைய பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தினார்.
இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
சுனிதா, "கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இந்த சமயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்," என கூறி உள்ளார்.
இந்த காணொளிதான் சமூக ஊடகங்களில் ஹிட்டடித்தது.
இந்த சூழலில் பிபிசிக்கு சுனிதா சிறப்பு பேட்டியளித்தார். அதில் அவர் பேசியவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
அன்று என்ன நடந்தது?
சுனிதா, "ஐந்து பேர் முகக்கவச உறை அணியாமல் வந்தனர். நான் அவர்களை நிறுத்தினேன். அது என் வேலை. அவர்களிடம் விசாரணை செய்தேன். அடுத்து என்ன நடந்தது, அதை நீங்கள் காணொளியில் பார்க்கலாம்." என்றார்.
அந்த காணொளியை காண:
மேலும் அவர், "ஏன் முகக் கவச உறைகள் அணியவில்லை என்று அவர்களை நான் கேட்டேன். பிறகு, ஏன் வெளியே வந்தீர்கள் என்று கேட்டேன். அவசர தேவைகளுக்காக வருபவர்களை மட்டுமே நாங்கள் அனுமதிக்கிறோம் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் நியாயமான காரணங்கள் இல்லாவிட்டால், தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டேன். அவர்கள் ஊரடங்கை மீறியுள்ளனர். விதிகளை மதிக்கவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அன்றைய இரவில் என்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஏனென்றால் அதற்கான அதிகாரம் எனக்கு இல்லை." என்றார்.
தொடர்ந்து அவர், "சாதாரணமாக இதுபோன்ற சமயங்களில் விதிகளை மீறியவர்களின் குடும்பத்தினரை நான் அழைத்து, அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று விளக்குவேன். இந்தச் சம்பவத்திலும், அவர்களுடைய குடும்பத்தினர் கவலைப் படுவார்கள் என்றும், அவர்கள் வெளியே வரக் கூடாது என்றும் புரிந்து கொள்ள வைப்பதற்கு நான் முயற்சி செய்தேன். ``இதுபோல நீங்கள் வெளியே வரக் கூடாது'' என்று நான் கூறினேன். அவர்களை அனுப்புவதற்கு நினைத்த போது, குமார் கனானியின் மகன் வந்து சேர்ந்தார். அதன் பிறகு, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது." என்று தெரிவித்தார்.
கண்ணியத்தை குலைக்க
அங்கு நடந்தவற்றை அவர் பின் வருமாறு விவரித்தார்.
"காவல் துறை அதிகாரியின் சீருடைக்கு உள்ள கண்ணியத்தை அவர்கள் குலைக்க முயன்றனர், குறிப்பாக இரவு நேரத்தில் ஒழுங்காகப் பணி செய்து கொண்டிருந்த பெண் காவல் அதிகாரிகளின் கண்ணியத்தைக் குலைக்க முயன்றனர். சாதாரண பெண்ணிடம் கூட அவர்கள் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அங்கே நான் சீருடையிலிருந்தேன். அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். நடுவிரலைக் காட்டி, திட்டினார்கள். அவர்கள் செய்தவை சரியானவை என்று எனக்குத் தோன்றவில்லை.
காவலர்களின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜவான் ஒருவர் அங்கே இருந்து சம்பவங்களை காணொளிப் பதிவு செய்திருக்காவிட்டால், நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்பதை என்னால் நிரூபிக்க முடியாமல் போயிருக்கும். ஏனென்றால் யாரும் என்னை நம்பியிருக்க மாட்டார்கள். அந்தச் சம்பவத்தின் காணொளிப் பதிவுகள் கட்டுப்பாட்டு அறையிலும், காவல் நிலையத்திலும் இருக்கும் என்றாலும், அவற்றுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. காவல் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த காணொளி எடுக்கப்படாமல் போயிருந்தாலும் கூட, காணொளிப் பதிவுகளின் உதவியுடன் எனக்கு நீதி கிடைப்பதைக் காவல் துறை உறுதி செய்திருக்கும். ஆனால் எனது முகத்தை புகைப்படம் எடுத்துவிட்ட நிலையில், நீதி கிடைத்ததா இல்லையா என்பது பிரச்சினையாகத் தோன்றவில்லை. அது குமார் கனானியின் மகன். என் செல்போனை அவர் பறித்துக் கொண்டார். அதைத் திரும்பப் பெறுவதற்கு நான் அவருடன் சண்டை போட வேண்டியிருந்தது. அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மிகுந்த சிரமத்துக்குப் பிறகு என் செல்போனை மீட்டுக் கொண்டேன்."
கிடைக்காத உதவி
"என் மேலதிகாரிகளிடம் நான் உதவி கேட்டேன். ஆனால் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஒருவழியாக நான் வீட்டுக்கு சென்று சேர்ந்தேன். நல்லவேளையாக எனக்கு எதுவும் நடக்கவில்லை. காவலர்களின் நண்பர் அமைப்பைச் சேர்ந்த ஜவான் அங்கே இல்லாமல் போயிருந்தால், அவர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் 6-7 பேர் இருந்தனர்." என்று தெரிவித்தார்.
மோதி சொல்வதைக் கேட்கவில்லை
அவர், "நள்ளிரவு 12 மணி வரை எங்களுக்குப் பணி இருந்தது. நான் வீட்டுக்கு வரும் வரை என் சகோதரர்களும், சகோதரிகளும் காத்திருந்தனர். நான் வந்ததும், அவர்களுக்கு நான் சமைத்தேன். பிறகு நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நள்ளிரவு 12 மணி வரை வேலை பார்க்கிறோம், ஆனால் யாருக்காக?," என்கிறார்.
"நான் வீட்டுக்கு வந்தபோது மிகுந்த மன அழுத்தம் இருந்தது. என் பெற்றோர் ராஜஸ்தான் சென்றுவிட்டனர். அன்றைக்கு நான் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, இரவு முழுக்க நான் அழுது கொண்டிருந்தேன், நான் சாப்பிடவில்லை. முடக்கநிலை அமல் செய்திருப்பதால் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மோதிஜி கூறி வருகிறார். ஆனால் யாருமே அதைக் கேட்பதில்லை. இந்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு எவ்வளவு நாட்களுக்கு மக்களிடம் நாங்கள் அன்பாகக் கேட்டுக் கொண்டிருப்பது. அவர்கள் முகக்கவச உறை அணியாததால் தான் இந்தப் பிரச்சினை தொடங்கியது. அவர்கள் முகக் கவச உறை அணிந்திருந்தால், அவர்களை நான் தடுத்திருக்க மாட்டேன், இவையெல்லாம் நடந்திருக்காது. மக்கள் முகக் கவச உறைகள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் எந்தப் பிரச்சினைகளும் வராது. மிகுந்த மேன்மையான வாழ்க்கை வாழும் அமிதாப்பச்சன் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் போன்றவர்களுக்கும் கூட கொரோனா வந்துவிட்டது. இந்த நிலையில், உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்கள் எப்படி இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் போராட முடியும்?," என்று கேள்வி எழுப்புகிறார்.
இப்படி செய்யலாமா?
மக்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. உதாரணமாக, ஒரு வழக்கறிஞர் தம்பதியினர் தினமும் நடைப்பயிற்சிக்காக வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் வெளியே வருகிறார்கள். ஏன் வீட்டை விட்டு வெளியே வருகிறீர்கள் என்று நான் கேட்டேன். இரவு 10 மணிக்குப் பிறகு தான் ஊரடங்கு ஆரம்பிக்கிறது என்று என்னிடம் அவர்கள் வாதம் செய்தனர். ஊரடங்கு தொடங்கும் வரையில், அவர்கள் வெளியில் சுற்றித் திரியலாம் என்பது அர்த்தமா? அவசரத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரலாம் என்று அரசு நமக்கு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அப்படி இருக்கும் போது நடைப்பயிற்சிக்காக வெளியில் வர வேண்டிய அவசியம் என்ன? வழக்கறிஞர்களே இப்படி வெளியே வந்தால், மற்றவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்?," என்கிறார்.
நானா களங்கம் கற்பிக்கிறேன்?
மீண்டும் அந்த நிகழ்வு குறித்து பேசும் சுனிதா, "எனது மாமனார் மாமியார் குடும்பத்தினர் காந்தி நகரில் வசிக்கின்றனர். நான் காந்தி நகர் செல்ல விரும்பினால், ஹர்திக் பட்டேலுடன் தொடர்பு படுத்தி இந்த இணைய விமர்சகர்கள் கருத்து கூறுவார்களா? எதிர்க்கட்சிகள் எனக்கு மறைமுகமாக ஆதரவு தருவதாகத் திரு. கனனி கூறத் தொடங்கியுள்ளார். தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்வதாகக் கூறியுள்ளார். அதுமாதிரி எந்த விஷயங்களும் நடக்கவில்லை என்பதை அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். திரு. கனனி அல்லது வேறு எந்தத் தலைவர் அல்லது எந்த அரசியல் கட்சியுடனும் எனக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது." என்கிறார்.
"நான் இங்குதான் இருக்கிறேன்"
"தமக்கு வரும் மிரட்டல்கள் குறித்துப் பேசும் அவர், "நாட்டுக்குச் சேவை செய்வது குறித்து நான் அளவுக்கு அதிகமாக ஆர்வம் கொண்டிருப்பதாகவும், நான் எவ்வளவு தைரியசாலி என்பதைப் பார்ப்போம் என்றும் மிரட்டும் தொனியில் கூறினார்கள். என்னுடைய துணிச்சலை மதிப்பிடும் சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது என்று நான் கூறினேன். நான் இங்கே தான் இருக்கிறேன். நான் எங்கேயும் போய்விடவில்லை. சரியான நடவடிக்கையை எடுக்கும் என்று காவல் துறையை நான் 100 சதவீதம் நம்புகிறேன். அவர்கள் எனக்கு நீதியைப் பெற்றுத் தராவிட்டாலும், மேலே ஆண்டவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்போதா அல்லது தாமதமாகவோ தங்களுடைய செயல்பாடுகளுக்கான விளைவை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்," என்றார்.
தேர்வில் காப்பி அடித்ததாக ஒரு வழக்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் குறித்து, "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஊடகத்தில் அனைவரும் கேட்கிறார்கள். அதற்குப் பதிலாக, அன்று இரவு நடந்த சம்பவத்தைப் பற்றி நீங்கள் தோண்ட வேண்டும். அதை நீங்கள் துப்பறிந்தால் நல்லதாக இருக்கும். எனது தனிப்பட்ட வாழ்வு பற்றி பொதுவெளியில் நான் ஏன் கூற வேண்டும் நான் தேசிய அளவிலான செஸ் வீராங்கனை. நான் பல விஷயங்கள் செய்திருக்கிறேன். அவையெல்லாம் என் வீட்டில் இருக்கின்றன. நான் வெறுமனே எல்.ஆர். காவல் அதிகாரி. நீங்கள் அந்த சம்பவத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். இவை தவிர உங்களுக்கு என்ன கேள்விகள் இருந்தாலும், எனது ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்ட பிறகு உங்களிடம் நான் விவரமாகக் கூறுகிறேன். நான் சரியானவராக இருந்தால், யாருக்கும் நான் பயப்படத் தேவையில்லை. என் கல்லூரி வாழ்க்கையாக இருந்தாலும் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும், அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். இப்போதைய நிலையில் நான் விலகி இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. என் வார்த்தைகள் வரம்புகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில் நான் இன்னும் காவல் துறையுடன் தொடர்பில் இருக்கிறேன். அது துண்டிக்கப்படும் வரையில், உங்களுக்கு வேறு எந்தத் தகவல்களையும் நான் அளிக்க முடியாது." என்றார்.
"முடக்கநிலை அமல் காரணமாக மக்களுக்கு நிறைய கால அவகாசம் இருக்கிறது. அதனால் இந்த சம்பவம் பற்றிய செய்தி குறித்து ஆழமாக விவாதிக்கின்றனர். அவர்கள் விவாதிக்கட்டும்! அது என்னை என்ன செய்யும்? அதுகுறித்து நான் எந்த அளவுக்கு மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டும். இணையத்தில் எல்லா விதமான விஷயங்களும் இருக்கின்றன. நாம் எதைப் பார்க்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களுடைய விருப்பம். எனக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. தாங்கள் விரும்புகிறபடி மக்கள் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், நான் பாதிக்கப்படவில்லை என்பது நல்ல விஷயம். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு அக்கறை கிடையாது," என்று தெரிவித்தார்.
பெருமை கொள்வேன்
"சீருடை அணியும் போது நான் பெருமையாக உணர்வேன். இனி அந்தப் பெருமை எனக்குக் கிடைக்காது. என் காக்கி சீருடையின் கண்ணியம் திருடப்பட்டு விட்டது. ஒரு பெண் காவல் அதிகாரியை அவர்கள் அவமதித்து விட்டார்கள். அந்த சீருடைக்கு நிறைய அதிகாரம் இருப்பதாக நம்பினேன், பெருமையுடன் அந்த சீருடையை அணிந்தேன். ஆனால் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நாம் வகிக்கும் ரேங்க்கும் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். ஏற்கெனவே காக்கி அணிந்தாகிவிட்டது. ஒரு ரேங்க் நிலையைப் பெற்று, அதன் பிறகு தான் சீருடை அணிவது என்று நான் முடிவு செய்தேன்.
ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற நான் விரும்புகிறேன். நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்திருந்தால், அன்றிரவு நடந்த அந்தச் சம்பவம் இந்த அளவுக்கு இழுத்துக் கொண்டிருக்காது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வேகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு ரேங்க்கை எட்ட நான் விரும்புகிறேன்," என்றார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :