You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விகாஸ் துபே விவகாரம்: 'தற்காப்புக்காக போலீசார் சுட்டனர்' - உத்தரப்பிரதேச அரசு
விகாஸ் துபேவை தற்காப்புக்காகவே போலீஸார் சுட்டுக் கொன்றதாக உத்தரப்பிரதேச மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கான்பூரில் எட்டு காவல்துறையினர் என்கவுண்டர் ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் ஜூலை 10ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள உத்தரப்பிரதேச மாநில அரசு, "விகாஸ் துபேவை உஜ்ஜைனில் இருந்து கான்பூருக்கு வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனம் கவிழ்ந்துவிட்டது. அப்போது விகாஸ் துபே போலீஸாரை சரமாரியாக சுடத் தொடங்கினார். தங்களின் தற்காப்புக்காகவே போலீஸார் விகாஸ் துபேவை சுட நேர்ந்த்து" என்று தெரிவித்துள்ளது.
"ஜூலை 10-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த சமயத்தில் தப்பி செல்வதற்கு காரணங்கள், நோக்கம், திறன் என அனைத்தும் விகாஸ் துபேயிடம் இருந்தன'' என உத்தரப்பிரதேச மாநில அரசு இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பு செய்தது போலவே இம்முறையும் போலீசாரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடும் எண்ணம் விகாஸ் துபேக்கு இருந்ததால் அவரை சுடுவதே போலீசாருக்கு அந்த சமயத்தில் ஒரே வாய்ப்பாக இருந்தது என்று மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்த விகாஸ் துபே சரணடைய விருப்பமில்லாது, போலீசாரை தாக்க எண்ணியதால், தங்களின் தற்காப்புக்காகக் போலீசார் அவரை நோக்கி சுட்டதாக உத்தரபிரதேச மாநில உள்துறை செயலர் பிரமாண பாத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் உண்மையாக நடந்தது, ஜோடிக்கப்பட்ட ஒன்று அல்ல எனவும், இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விகாஸ் துபே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகள், விகாஸ் துபே விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் பின்னணி குறித்து விசாரிக்க கோரியிருந்த நிலையில், உத்தரபிரதேச மாநில அரசு இந்த பதிலை தெரிவித்துள்ளது.
விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை ஜூலை 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 10-ஆம் தேதி என்ன நடந்தது?
மத்தியப்பிரதேசத்தில் பிடிபட்ட விகாஸ் துபேவை உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு காவல் படையினர் கான்பூருக்கு சாலை மார்க்கமாக ஜூலை 10-ஆம் தேதியன்று அழைத்துச்சென்று கொண்டிருந்தபோது அந்த வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்ததாகவும் அப்போது அங்கிருந்து தப்பிடயோட முயற்சித்த விகாஸ் துபே மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த மேற்கு கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர், "கார் கவிழ்ந்ததும் விகாஸ் துபே அங்கிருந்து தப்பித்தோட முயன்றார். அவரை பிடிப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சியின்போது அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பறித்த விகாஸ் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த மற்ற காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த விகாஸ் துபே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று அவர் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ் துபே உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்துள்ள உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. பிரசாந்த் குமார் இதுதொடர்பாக விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் கூறியது என்ன?
விகாஸ் துபே கொல்லப்பட்டது சமூகவலைத்தளங்கள் மற்றும் அரசியல் காலத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''குற்றவாளி இறந்துவிட்டார். அவர் செய்த குற்றங்கள் மற்றும் அவரை பாதுகாத்தவர்கள் குறித்து என்ன செய்வது?'' என்று கேள்வி எழுப்பினார்.
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''வாகனம் தலைகுப்புற விழவில்லை, அரசு தலைகுப்புற விழாமல் ரகசியங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :