You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவுக்கு சீனா பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநர்
சீனாவின் உளவு பார்த்தல் மற்றும் திருட்டு ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு இதுவரை இல்லாத ஒரு "மிகப்பெரிய நீண்டகால" அச்சுறுத்தல் எழுந்துள்ளது என அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள ஹட்சன் இன்ஸ்டியூட்டில் பேசிய எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, ஒரு பலதரப்பட்ட இடையூறு பிரசாரம் குறித்து விவரித்தார்.
வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் நாடு திரும்ப வேண்டும் எனச் சீனா கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்த வ்ரே, அமெரிக்காவின் கொரோனா தொடர்பான ஆராய்ச்சியில் அவர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சிகளில் சீனா ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
உலகின் ஒரே வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என சீனா பல வகைகளில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என வ்ரே தெரிவித்தார்.
தனது ஒரு மணிநேர பேச்சில் வ்ரே, சீனாவின் குறுக்கீடுகள் குறித்து விளக்கினார். பொருளாதார உளவு குறித்த பிரசாரம், தரவு மற்றும் பண திருட்டு, சட்ட விரோதமான அரசியல் நடவடிக்கைகள், அமெரிக்க கொள்கையில் தலையிட லஞ்சம் மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றை சீனா மேற்கொள்வதாக தெரிவித்தார்.
"ஒவ்வொரு பத்து மணி நேரத்திற்கு இடையில் சீன உளவு நடவடிக்கைக்கு எதிரான பதில் நடவடிக்கை குறித்த விசாரணைகளை எஃப்பிஐ தொடங்குகிறது, மேலும் தற்போது விசாரணையில் உள்ள உளவு நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை விசாரணைகளில் பாதி சீனாவுடன் தொடர்புடையது," என்றார் வ்ரே.
"நரி வேட்டை" என்னும் திட்டம் குறித்து குறிப்பிட்ட வ்ரே, அதற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமை தாங்குவதாகவும், சீன அரசு வெளிநாட்டில் வசிக்கும் சீனர்களை அச்சுறுத்தலாக பார்க்கிறது என்றும் தெரிவித்தார்.
சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த அரசியல் எதிரிகள், விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோருடன் பேசி வருவதாக வ்ரே தெரிவித்தார். வெளிநாட்டில் உள்ள சீனர்களை நாடு திரும்ப வைக்க சீனா கையாளும் யுக்திகள் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"நரி வேட்டையில் தாங்கள் பிடிக்க நினைத்த ஒருவரை பிடிக்க முடியாத நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் அவரின் குடும்பத்திற்கு தூதரின் மூலம் சீனா செய்தி அனுப்பியது, அதில் உடனே சீனாவுக்குத் திரும்புங்கள் அல்லது தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று இருந்தது."
ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியவர்கள் என்று கூறப்பட்டவர்களுக்காக இந்த திட்டம் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இருப்பினும், சமீப காலங்களில் அரசியல் எதிர்ப்பாளர்கள் பலர் சீனாவால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் குய் மின்ஹாய், ஹாங் காங்கில் காணாமல் போன புத்தக வியாபாரிகளில் ஒருவர், இவர் காணாமல் போன சிறிது காலத்தில் சீனாவின் பிடியில் இருப்பது தெரியவந்தது. பிறரைப்போல் இவர் ஹாங் காங்கிலிருந்து காணாமல் போகவில்லை. மாறாகத் தாய்லாந்திலிருந்து காணாமல்போனார்.
சீனாவுக்கு உதவும் உலகமயமாக்கல்
பாதுகாப்புத் துறை செய்தியாளர் ஜோனத்தன் மார்கஸின் ஆய்வு
சீனா, மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருவது அதன் ராணுவத் திறனால் மட்டுமல்ல. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்கனவே அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா உருவெடுத்துள்ளது.
19ம் நூற்றாண்டின் வல்லரசு நாடுகள் ஓரளவு சமமான அடிப்படைகளில் போட்டியிட்டன ஆனால் குறைந்த ஒன்றுபட்ட சர்வதேச அமைப்பே காணப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்காவுக்கான ராணுவப் போட்டியாக சோவியத் யூனியன் இருந்தது. ஆனால் வலுவிழந்த பொருளாதாரத்தால், பரந்த சர்வதேச அமைப்புடன் அது இணையவில்லை.
சீனா பலத்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் அது மேற்கத்திய நாடுகளுக்கு சமமாகவே உள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கான பிபிஇ போன்ற கருவிகளை உலகிற்கு வழங்குவதன் மூலம் அதன் அதிகாரம் மேலும் வலுவடைகிறது.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழல், தரவுகள் மற்றும் தகவல்களின் முக்கியத்துவம் ஆகியவை சீனாவின் வெளிப்படையான மற்றும் ரகசியமான உலக அணுகலுக்கான பல்வேறு காரணிகளாக அமைந்துள்ளன.
மேலும் வித்தியாசமான ஒரு கூற்றாக, அமெரிக்காவில் வசிக்கும் சீனர்களை சீன அதிகாரிகள் திரும்ப வர வற்புறுத்தினால் எஃப்பிஐ அதிகாரிகளை தொடர்பு கொள்ளக் கோரினார் வ்ரே.
கடந்த காலங்களில் சீனா இந்தத் திட்டம் குறித்துப் பேசுகையில், இது ஊழலுக்கு எதிரான ஒரு சட்டரீதியான நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தது.
மேலும் சீனாவால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க அட்டார்னி ஜெனரல் மற்றும் வெளியுறவு செயலர் ஆகியோர் வரும் வாரங்களில் பேசுவார்கள் எனத் தெரிவித்தார் வ்ரே.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே பதற்றமான ஒரு சூழல் நிலவும் நிலையில் எஃப்பிஐ இயக்குநர் இவ்வாறு பேசியுள்ளார்.
ஏற்கனவே கொரோனா தொற்று பரவலுக்கு சீனாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை குற்றம் சுமத்தியுள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில் புகழ்பெற்ற சீன செயலியான டிக் டாக்கை தடை செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்திருந்தார்.
"சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உளவு பார்க்கும் நடவடிக்கையின் துடுப்பாக டிக் டாக் செயல்படுகிறது." என தெரிவித்திருந்தார் பாம்பேயோ.
பிற செய்திகள்:
- மரியாதை இல்லை, உரிமையும் இல்லை: முள் மகுடத்துடன் இருளர் ஊராட்சித் தலைவர்கள்
- "இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்" - எச்சரிக்கும் ஆய்வு
- லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் விலகியதற்கு காரணம் என்ன?
- கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: