You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாலியல் ஆபாசப்பட வலைத்தளங்களுக்கு பணம் செலுத்தும் கிரெடிட் கார்டுகளை முடக்க வேண்டும்' மற்றும் பிற செய்திகள்
தங்கள் வாடிக்கையாளர்கள் ஆபாசப்பட வலைத்தளங்களுக்கு பணம் செலுத்தும் வசதிக்கு கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் தடை விதிக்க வேண்டும் என சர்வதேச பிரசாரக்குழு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
பாலியல் சுரண்டல்களை தடுக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக அந்தப் பிரசாரக்குழு கூறிக்கொள்கிறது. இதுதொடர்பான கடிதத்தில் இதே போன்ற 10 பிரசார குழுக்கள் கையெழுத்திட்டுள்ளன.
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுவது உள்ளிட்ட பாலியல் வன்முறை மற்றும் இனவாத காட்சிகளை ஆபாச வலைத்தளங்கள் காட்சிப்படுத்துவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பிரபல ஆபாசப்பட வலைதளமான பார்ன் ஹப், இந்தக்கடிதம் தவறாக இருப்பது மட்டுமல்லாமல், இதில் தவறாக வழிநடத்தும்படியான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிபிசியிடம் கருத்து தெரிவித்த மாஸ்டர்கார்டு நிறுவனம், அந்தக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், தங்கள் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் யாரேனும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவது தெரியவந்தால், அவருக்கான கிரெடிட் கார்டு சேவை நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
விஸா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 10 கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு இந்தக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த பிரசாரக்குழுக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளன. ஆபாச வலைத்தளங்களுக்கு பணம் செலுத்தும் வசதிகளை கிரெடிட் கார்டு நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு ஓராண்டு உயர்த்தியது ஏன்?
தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து ஓராண்டு உயர்த்தி 59 ஆக அறிவித்துள்ளது தமிழக அரசு.
முன்னரே நிலவிய பொருளாதார மந்த நிலையாலும், கொரோனா முடக்க நிலையாலும் சுமார் 50 சதவீத வேலையின்மை நிலவும் தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கான வாய்ப்பை இந்த உத்தரவு பறித்துவிடும் என்று பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விசாகப்பட்டினம் வாயுக் கசிவு: நடந்தது என்ன?
ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இந்த விபத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒருவர் தனது அனுபவத்தை பிபிசியிடம் கொண்டார்.
கோவிட்-19 தொற்றின் ஊற்றாக கோயம்பேடு உருவெடுத்தது எப்படி?
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தையே அதற்கான முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த விபரீதம் எப்படி நடந்தது?
விரிவாக படிக்க: கோயம்பேடு கொரோனா தொற்றின் ஊற்றாக உருவெடுத்தது எப்படி?
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து
கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 6 மற்றும் 7வது யூனிட்டிற்கு இடையே உள்ள, இழுவை இயந்திரம் மூலம் கொண்டு வரப்பட்ட நிலக்கரியானது மின் உற்பத்திக்காக தீயூட்டும் இடத்திற்குக் கொண்டு செல்லும் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 என்எல்சி நிரந்தர பணியாளர்கள் மற்றும் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
விரிவாக படிக்க:நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் படுகாயம்