You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸால் கட்டுப்பாடு: 'மலேசியாவில் ரமலான் கொண்டாட்டம் மக்கள் கையில்தான் உள்ளது'
பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.
அடுத்து வரும் இரு வாரங்கள்தான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டமானது, மலேசிய மக்களுக்கு சவாலான, இக்கட்டான காலகட்டமாக இருக்கும் என மலேசிய அரசு மேலும் கூறியுள்ளது.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 108 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார்.
இன்று ஒரே நாளில் புதிதாக 142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,908 என்றார். நோய்த் தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 45ஆக உள்ளது.
இதுவரை 645 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 22.2 விழுக்காடு ஆகும்.
பத்து கிலோமீட்டர் வட்டத்துக்குள் மட்டுமே பயணிக்க முடியும்
"கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட 2,359 பேர் சுகாதார அமைச்சால் புதிதாக பணியமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களில் 159 மருத்துவர்கள், 909 தாதியர்கள், 220 ஆய்வுக்கூட நிபுணர்கள் ஆகியோர் அடங்குவர்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
இதற்கிடையே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டத்தில் மலேசியர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உணவு, மருந்துகள் உட்பட அன்றாட, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துக்குள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
பத்து கிலோமீட்டருக்கும் அப்பால் செல்ல வேண்டிய அவசியம் இருப்பின், உரிய காரணத்தைக் குறிப்பிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டியிருக்கும்.
பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை 90 விழுக்காட்டுக்கும் அதிகமான மலேசியர்கள் பின்பற்றினாலும், இன்றளவும் ஆணையை மீறும் சிலர் கைதாவது நீடித்து வருகிறது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
இவ்வாறு கைதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததற்கு முட்டாள்தனமான காரணங்களை முன்வைப்பதாகவும், இத்தகைய போக்கு ஏற்கத்தக்கதல்ல என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டத்தில் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
"அடுத்த இரு வாரங்கள் இக்கட்டான காலகட்டம்"
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் சங்கிலித் தொடரை உடைப்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் வெற்றி பெறுமா என்பதை தீர்மானிக்கப் போவது மலேசியர்கள்தான் என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
"மலேசிய மக்களுக்கு அடுத்த இரு வாரங்கள் இக்கட்டான காலகட்டமாக இருக்கும். பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முதற்கட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக நோய்த் தொற்று பரவல் மிகப் பெரிய அளவில் ஏற்படவில்லை. இது நல்ல செய்தி என்றாலும், சில கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டியுள்ளது," என்று நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் உட்பட தினசரி அத்தியாவசிய பொருட்களை விற்கும் அனைத்து வணிக வளாகங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என மலேசிய அரசு அறிவித்திருப்பதாக செய்தி ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
உணவகங்கள், ஸ்டால்கள் மற்றும் உணவு விநியோக சேவைகளும் இரண்டாம் கட்டத்தின் போது மேற்குறிப்பிட்ட இயக்க நேரங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசங்களின் புதிய உச்சவரம்பு விலை 1.50 மலேசிய ரிங்கிட் என மலேசிய அரசு நிர்ணயித்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ரமலான் கொண்டாட்டம்
அடுத்த இரு வாரங்கள் மலேசிய மக்கள் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை எந்தளவுக்கு முழுமையாக கடைபிடிக்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் தீர்மானிக்கப்படும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூன்று மற்றும் நான்காம் கட்டங்களாக நீட்டிக்கப்படுமா என்பதை மக்களின் செயல்பாடுதான் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதியே அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின்போது எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என விரும்புகிறோம் எனில் தற்போது நடைமுறையில் உள்ள பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்," என்று இஸ்மாயில் சப்ரி அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று எதிரான போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடனும், தியாக உணர்வுடனும் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு பாராட்டு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தும் தொற்று நோயை எதிர்கொண்டு போராடும் சுகாதாரப் பணியாளர்கள் வியக்கத்தக்கவர்கள் என அந்த அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
"சுகாதாரப் பணியாளர்கள் பலரும் தங்கள் அன்புக்குரியவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டு, நோயுற்றவர்களுக்கு உதவுவதற்காக முன்னணியில் இருக்க தங்கள் நேரத்தையும் வசதியையும் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்யும் தியாகத்துக்காக சுகாதார அமைச்சு பாராட்டுகிறது," என நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: