You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரமலான் நாட்கள் முஸ்லிம்களுக்கு ஏன் மிக முக்கியமான ஒன்று?
- எழுதியவர், ராபியா லிம்பாடா
- பதவி, பிபிசி உலக சேவை
(பிபிசியில் பணிபுரியும் ராபியா லிம்பாடா, முஸ்லிம்களுக்கு ரமலான் நாட்கள்ஏன் சிறப்பான ஒன்று? ஏன் அந்த நாட்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று விளக்குகிறார்)
"ஹூம்… நீங்கள் மாதத்தின் 30 நாட்களும் நோன்பு இருப்பீர்கள்தானே?"
"நீங்கள் இந்த நோன்பின்போது எப்போதாவது ஏமாற்றி இருக்கிறீர்களா?"
"தண்ணீர் கூடவா?"
இந்த மூன்று கேள்விகளும் ரமலானின்போது ஒவ்வொரு ஆண்டும் நானும் என் நண்பர்களும் எதிர்கொள்ளும் கேள்வி.
இதற்கு பொறுமையாக நாங்களும் பதில் அளிப்போம். முப்பது நாட்களும் என்றால் தொடர்ந்து முப்பது நாட்களும் உண்ணாமல், நீராகாரம் அருந்தாமல் இருக்க மாட்டோம். ஒரு நாளின் சூரிய உதயத்துக்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் அவ்வாறாக இருப்போம். ஆம், தண்ணீர்கூட அருந்த மாட்டோம் என்று அவர்களது சந்தேகங்களை போக்குவோம்.
நான் கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்தவள். என்னுடைய பெற்றோர் ஏமன் மற்றும் பர்மாவிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள்.
உலகெங்கும் உள்ள மற்ற முஸ்லிம் குடும்பங்களைப்போல, எனது குடும்பத்திற்கும் ரமலான் நாட்கள் மிகவும் முக்கியமானவை.
அதை ஏன் என்று இங்கு விளக்குகிறேன்.
ரமலான் நோன்பு இருக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
சுத்திகரித்தல்
உணவு, நீர் அற்ற அந்த நீண்ட நாட்கள், பிரார்தனையுடன் கழியும் அந்த இரவு பொழுது குறித்து நாங்கள் மிக உற்சாகமாக இருப்போம். இது விநோதமாக தோன்றலாம். ஆனால், இஸ்லாமிய நாட்காட்டியின் இந்த புனித நாட்களில் நாங்கள் நோன்பு இருப்பதற்கான கூலி கிடைக்கும்.
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இடையே உணவு உண்ணாமல், தண்ணீர் அருந்தாமல் இருப்பது மட்டும் ரமலான் இல்லை. இந்த ரமலான் மாதம் சுத்திகரிப்பிற்கானது.
இறையை நெருங்க
ரமலான் காலமானது இறைவனை நெருங்குவதற்கான காலம் என்கிறது குரான்.
நீண்ட வேண்டுதல்கள் மற்றும் பிரார்தனைகள் மூலம் நாங்கள் அதனை செய்வோம்.
இன்பம் தரக் கூடிய சில விஷயங்களை நாங்கள் இம்மாதத்தில் கைவிடுவோம்.
உலகெங்கும் உணவிற்கு வழி இல்லாதவர்களை மிகவும் கருணையுடனும் கனிவுடனும் நடத்த இந்த நாட்கள் ஊக்கம் தருகிறது.
தயார் செய்தல்
எந்த சவாலுக்கும் முன் தயாரிப்பு மிக அவசியமான ஒன்று. அது போலதான் ரமலான் நோன்பிற்கும். நோன்பிற்கு முன்பாக அதற்கு ஏற்றார்போல நமது உடலை தகவமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆன்மிக ரீதியாக நாம் தயாராக வேண்டும்.
நாங்கள் தினமும் அதிக நேரம் பிரார்தனை செய்வோம். அதிக நேரம் குரான் வாசிப்போம்.
ரமலான் மாதத்தில் செய்யப்படும் இரவு பிரார்தனைக்கு ஏற்றவாரு நான் அதிக நேரம் விழித்து இருப்பேன்.
பலர் நோன்புக்கு ஏற்றவாரு தங்கள் உடலை தகவமைத்துக் கொள்ள உணவு பழக்கத்தை முன்பே மாற்றி கொள்வார்கள்.
என்னுடைய தோழிகளில் ஒருத்தி நோன்பிற்கு சில மாதங்களுக்கு முன்பே காபி அருந்துவதை நிறுத்திவிடுவார்.
அதிகாலை அமைதி
லண்டனில் நாங்கள் சஹருக்காக (நோன்பின் போது அதிகாலையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு) நாங்கள் அதிகாலை 2.30 மணிக்கே எழுவோம். இது சுலபமான ஒன்று என்று நான் பொய் சொல்ல போவதில்லை. இது கடினமானதுதான்.
இந்த சஹரை புறகணித்து நோன்பு இருக்க முடியாது. ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தொடர்ந்து உண்ணாமல், நீராகாரம் அருந்தாமல் இருக்கும் போது இந்த அமைதியான அதிகாலையில் உண்ணப்படும் இந்த உணவு மிக முக்கியமானதாகிறது.
இந்த சஹர் வேளையில் அண்மையில் இருக்கும் முஸ்லிம் வீடுகளில் விளக்கு எரியவில்லை என்றால், அருகில் இருக்கும் பிற நண்பர்கள் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து எழுப்பி விடுவார்கள்.
நாட்கள் செல்ல செல்ல நோன்பு இருத்தல் சுலபமான ஒன்றாக மாறும். உடல் அதற்கு ஏற்றார் போல தகவமைத்துக் கொள்ளும். நீங்கள் நினைத்ததைவிட குறைந்த நேரம் மட்டுமே உறங்குவதை உணர தொடங்குவீர்கள்.
பிரார்த்தனை... பிரார்த்தனை மட்டும்தான்
உணவு, நீர் ஆகாரம் இல்லாமல் 18 மணி நேரம் இருப்பது என்பது சற்றே நெடிய நேரம்தான். இந்த நேரத்தை எப்படி கடப்பீர்கள் என்பது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இதற்கு என் பதில் பிரார்த்தனை மூலம் கடக்கிறோம் என்பதுதான்.
குரான் முதல்முறையாக இந்த மாதத்தில்தான் அருளப்பட்டது.
முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும்; குரானை ஓத வேண்டும்.
பிற நாட்களில் ஏகப்பட்ட கவன சிதறலகள் ஏற்படும். நோன்பு நாட்களில் அப்படியான எந்த கவன சிதறல்களும் இல்லாமல் பிரார்த்தனையில் கவனம் செலுத்த முடியும்.
சிலர் இந்த நோன்பு நாட்களில் எந்த கவன சிதறல்களும் ஏற்படக் கூடாது என்பதற்காக தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்துவார்கள், சமூக ஊடக கணக்குகளை தற்காலிகமாக முடக்கிவிடுவார்கள்.
கவன சிதறல் ஏற்படுத்தும் இப்படியான விஷயங்களை கைவிடுவதன் மூலம், அதிக நேரம் வேண்டுதல்களிலும், பிரார்த்தனைகளிலும் கவனம் செலுத்த முடியும்.
ஏறத்தாழ 900 பக்கங்களுக்கு மேல் இருக்கும் குரானை, இந்த ரமலான் மாதத்தில் மட்டும் 12 முறைக்கும் மேல் முழுவதுமாக முஸ்லிம்கள் ஓதுவார்கள்.
நோன்பு என்பது இறவனைக்கானது நேர்க்கப்படுவது என்பது இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை. இஸ்லாத்தை தீவிரமாக பின் தொடராத முஸ்லிம்கள் கூட இந்த மாதத்தில் நோன்பு வைப்பது என்னை ஆச்சர்யப்படுத்தும்.
ஈகை
நோன்பை கடந்து, திருப்பி செலுத்துவதற்கான காலம் இந்த ரமலான் காலம். ஈகை என்பது ரமலானின் ஒரு பகுதி.
ரமலானின் போது ஜகாத் செலுத்த வேண்டும். ஜகாத் என்பது இஸ்லாமியர்கள் செலுத்த வேண்டிய வரி. தங்களது சொத்தின் 2.5 சதவீதத்தை ஜகாத்தாக செலுத்த வேண்டும்.
லண்டனில் உள்ள தொண்டு ஆணையத்தின் தகவலின்படி, லண்டனில் உள்ள முஸ்லிம்கள் 2016 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் 135 மில்லியன் டாலர்களை கொடுத்து இருக்கிறார்கள்.
ரமலானின் இந்த நாட்கள் பிரார்த்தனைக்காக, ஈகைக்கான நாட்கள். இவற்றை சுற்றிதான் இந்த நாட்கள் சுழலும். இந்த நாட்களில் அழகான எளிமையும் இருக்கும் .
200 டன் தங்கத்தை ரகசியமாக மோதி அரசு வெளிநாட்டுக்கு அனுப்பியதா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்