You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்:“ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 2 டிரில்லியன் நிதி” - அமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம் Corona Global Update
கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டார் அந்நாட்டு அதிபர் டொனாலட் டிரம்ப்.
அமெரிக்க வரலாற்றிலேயே கையெழுத்தான மிகப் பெரிய நிவாரண நிதி இதுதான்.
ஜனநாயக கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும், தங்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இருந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக அதிபர் டிரம்ப் இரு கட்சியினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
ஆண்டுக்கு 75 ஆயிரம் டாலர்களுக்கு குறைவாக ஊதியம் பெறும் அமெரிக்கர்களுக்கு இந்த நிவாரணத் தொகையிலிருந்து 1,200 டாலர்கள் வழங்கப்படும். அதேபோல ஒவ்வொரு குழந்தையின் பராமரிப்பு செலவிற்காக 500 டாலர்கள் வழங்கப்படும்.
- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
- கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்
அமெரிக்காவின் மாநில அரசுகளுக்கும் இதிலிருந்து தேவையான நிதி ஒதுக்கப்படும்.
உலகில் எந்த நாட்டை விடவும் கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 3.3 மில்லியன் என புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்த நிவாரணத் தொகையானது உடனடியாக நிதி தேவைப்படும் குடும்பங்கள், பணியாளர்கள் மற்றும் தொழில்களுக்கு வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அதோடு பாதுகாப்பு உற்பத்தி சட்டம் என்ற சட்டத்தையும் டிரம்ப் செயல்படுத்தினார்.
தேசிய பாதுகாப்புக்கு தேவையான பொருட்களை, தனியார் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்ய உத்தரவிட இந்த சட்டம் அதிபருக்கு அதிகாரம் வழங்கும்.
இதனையடுத்து அரசாங்கத்திற்காக தனியார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், தேவையான வென்டிலேட்டர்களை தயாரிக்க உத்தரவிடப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இத்தாலி - ஒரே நாளில் 919 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாக இருந்தாலும், அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது இத்தாலிதான்.
நேற்று ஒரே நாளில் இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றால் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அங்கு பலியானோரின் எண்ணிக்கை 9,134ஆக உயர்ந்திருக்கிறது.
கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து 44 மருத்துவர்கள் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலி ஏற்கனவே இரண்டு வார காலமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இத்தாலியின் வடக்கு பகுதியே இந்த வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது தெற்கு இத்தாலியும் அவ்வாறு பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தெற்கு இத்தாலியில் இருக்கும் கம்பானிய பகுதியின் தலைவர், மத்திய அரசு தேவையான வென்டிலேட்டர்கள் மற்றும் பிற உயிர் காக்கும் உபகரணங்களை வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
உலகளவில் உயிர் காக்கும் உபகரணங்கள் குறைவாக இருப்பது, பலரையும் காப்பாற்ற முடியாமல், அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்தார்.
இது விடுமுறை அல்ல - மக்களுக்கு ரஷ்ய அரசு எச்சரிக்கை
ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஒரு வாரம் சம்பளத்துடன் விடுமுறையை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின். ரஷ்யர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா வைரஸால் ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாஸ்கோவை சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆனால், இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, ரஷ்யர்கள் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட, அந்நாட்டின் பல பகுதிகளில் ஹோட்டல் முன்பதிவு அதிகமாகியது.
இந்நிலையில், இது விடுமுறை காலம் இல்லை என்றும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் மக்களுக்கு வலியுறுத்தினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: