வங்கதேசத்தில் முதல்முறையாக இஸ்லாமிய முறைப்படி நடந்த பாலியல் தொழிலாளியின் இறுதிச்சடங்கு மற்றும் பிற செய்திகள்

வங்கதேசத்தில் முதல்முறையாக இஸ்லாமிய முறைப்படி நடந்த பாலியல் தொழிலாளியின் இறுதிச் சடங்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

அங்கு நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு வழக்கத்தை உடைத்து இந்த சடங்கு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பாலியல் தொழில் நடக்கும் கிராமமான டெளலாட்டியாவில் பணிபுரிந்துவந்த ஹமிடா பேகம் தனது 65 வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

வங்கதேசத்தில் பாலியல் தொழில் சட்டவிரோதமான தொழில் அல்ல. ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இறுதி பிரார்த்தனை செய்வதில்லை என இஸ்லாமிய தலைவர்கள் மறுத்துவந்தனர்.

பாலியல் தொழிலாளிகள், எந்தவித பிரார்த்தனையும் இல்லாமல் பொதுவாக புதைக்கப்பட்டுவிடுவார்கள்; அல்லது அவர்கள் நதியில் வீசப்படுவார்கள்.

பாலியல் தொழிலாளிகள் சிலர் உள்ளூர் போலீஸாரின் துணையுடன் இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை பேகமிற்கும் இதுதான் நடந்திருக்கும்.

"முதலில் அந்த மதகுரு பிரார்த்தனை செய்ய தயங்கினார்," என பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த போலீஸ் அதிகாரி ஆஷிகுர் ரஹ்மான் குறிப்பிட்டதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

"ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இறுதி பிரார்த்தனை செய்வதை இஸ்லாம் தடுக்கிறதா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை." என்கிறார் ஆஷிகுர்.

இதன் விளைவாக செவ்வாய்க்கிழமையன்று இஸ்லாமிய மதமுறைப்படி பேகமின் இறுதி பிரார்த்தனை நடைபெற்றது.

தமிழகத்துக்கு 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் சாதகமா, இழப்பா?

15வது நிதிக் குழுவின் இடைக்கால பரிந்துரை அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கிடைக்கும் வரிப் பகிர்வு குறையும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இடைக்கால அறிக்கை தமிழகத்திற்கு சாதகமானதா?

இந்தியாவின் வரி வசூலிக்கும் கட்டமைப்பில், பெருமளவிலான வரியை மத்திய அரசு பெறுகிறது; ஆனால், பெருமளவிலான செலவுப் பொறுப்புகளை மாநில அரசுகள்தான் செய்ய வேண்டும். ஆகவே, மொத்த வரி வருவாயை எந்த அளவுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வது என்பதை முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது.

மேலும் மாநிலங்களுக்கென ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்பதையும் கணக்கிட வேண்டும். இதைச் செய்வதற்காகத்தான் நிதிக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து இருக்கிறது.

ஒரு ஊழியருக்கு கொரோனா - 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வங்கி

ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வேலை செய்யும் 300 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்தது சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். என்னும் ஒரு மிகப்பெரிய வங்கி.

இந்த வங்கிக் கிளை அமைந்திருக்கும் கட்டடத்தின் 43வது மாடியில் வேலை செய்யும் 300 ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிடும்படி புதன்கிழமை கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனா தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

சீன பெருநிலப் பரப்பில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை, 44 ஆயிரம். 20 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவயிருக்கிறது.

குறிப்பிட்ட டி.பி.எஸ். வங்கியின் ஊழியர் செவ்வாய்க்கிழமை பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்

முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் நாளைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். அது நிறைவடைந்த பின்னரே அங்குள்ள மனித எச்சங்களின் முழுமையான எண்ணிக்கை தெரியவரும்.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டடமொன்று கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கட்டடம் கட்டும் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதியில் கண்ணிவெடிகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா பள்ளியில் நடந்த நாடகத்தால் சிறைக்கு சென்ற தாய்

"எனக்கு இந்த நிலைமை ஏன் வந்தது என்று எனக்கு தெரியவில்லை," என்கிறார் நஸ்புனிசா.

இவர் வீட்டு வேலை செய்து தனியாக தன் குழந்தையை வளர்த்து வரும் 26 வயது தாய்.

இவரும் 52 வயதுள்ள ஃபரிதா பேகம் என்னும் ஆசிரியரும் கடந்த ஜனவரி மாதம் தேச துரோக வழக்கில் செய்து செய்யப்பட்டனர்.

ஃபரிதா பேகம் நஸ்புனிசா மகளின் ஆசிரியர். இவர்கள் இருவரும் முஸ்லிம்கள்.

அவர்கள் இருவரும், கர்நாடகாவில் உள்ள பிடார் மாவட்டத்தில் சிறை அதிகாரி அலுவலகத்தில் பிபிசியிடம் பேசினர்.

கண்ணீருடன் பேச தொடங்கிய அவர்கள், தாங்கள் திடமாக இருக்க முயல்வதாகவும் ஆனால் தங்களின் வாழ்க்கை திடீரென தலைகீழாய் மாறிவிட்டது என்றும் தெரிவித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் ஒரு பள்ளி நாடகம்.

இவர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: