வடகொரியா பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் ஏன் சொகுசு விடுதிகள், பூங்காக்களை உருவாக்குகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ப்ரதீக் ஜாஹர்
- பதவி, பிபிசி
நிதி ஆதாரத்தில் வறிய நிலையில் இருக்கும் வடகொரியா, ஓய்விட வசதிகளை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் தருவது நிச்சயமாகத் தெரிகிறது.
கிம் ஜோங்-உன் ஆட்சியின் கீழ், நாட்டில் சொகுசு விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது - மிக சமீபத்தில் ஜனவரியில் யாங்டோக் வெப்ப நீரூற்று சொகுசு விடுதி திறக்கப்பட்டுள்ளது.
இதை உருவாக்குவதில் வடகொரிய அதிபர் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. 2019ல் யாங்டோக்கிற்கு அவர் குறைந்தது ஐந்து முறை சென்றிருக்கிறார். அங்கு வெப்ப நீரூற்றில் வரும் தண்ணீர், முட்டைகளை வேக வைக்கும் அளவுக்கு சூடாக இருக்க வேண்டும் என்று ஒரு பயணத்தின் போது அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம், புகழ்பெற்ற பாயெக்ட்டு சிகரம் அருகே சம்ஜியோன் என்ற இடத்தில் உடற்பயிற்சி மற்றும் ஸ்கீ சொகுசு விடுதி, மிகுந்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்டது. ``நவீன நாகரிகத்தின் மையம்'' என்று அரசு செய்திப் பிரிவு அதுபற்றி கூறியுள்ளது.
கிம் -ன் பிரியமான திட்டங்களில் மற்றொன்றாக வொன்சன்-கல்மா சுற்றுலா மண்டலம் அமைந்துள்ளது. இதற்கான பணிகள் முடியும் நிலையை எட்டியுள்ளன. ஏப்ரல் மாதம் இதைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடகொரியா ஏன் இந்த வசதிகளை கட்டமைத்து வருகிறது?
அதிகம் தேவைப்படும் கரன்சிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலமாக பெறுவது பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கும்.
ஐ.நா. தடை காரணமாக நிலக்கரி, ஆயுதங்கள் மற்றும் தாதுப் பொருள்கள் மூலம் வடகொரியாவால் வருவாய் ஈட்ட முடியவில்லை. சுற்றுலாத் துறைக்கு ஐ.நா. தடை பொருந்தாது.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளில் வாழும் வடகொரியத் தொழிலாளர்கள் - பியாங்யாங்கின் வருவாய்க்கு பிரதான ஆதாரமாக இருக்கிறார்கள். தடை விதிப்புகளுக்கு இடையே டிசம்பர் மாதம் தாயகம் வருமாறு அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
வடகொரியாவின் வருவாய் ஆதாரங்கள் குறைவாக இருப்பதால், சில திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு செய்வது என்பது கவனமாக திட்டமிடப்பட்ட செயலாக இருக்கிறது என்று என்.கே. நியூஸ் தளத்தின் செய்தியாளர் ஜியோங்மின் கிம் கூறுகிறார்.
``வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க வடகொரியாவுக்கு உள்ள மிகச் சில வாய்ப்புகளில் ஒன்றாக சுற்றுலாத் துறை உள்ளது'' என்று அந்தப் பெண் செய்தியாளர் பிபிசி மானிட்டரிங் பிரிவிடம் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில் 350,000 சீன சுற்றுலாப் பயணிகள் வடகொரியாவுக்கு சென்றதாகவும், அதனால் அந்த நாட்டுக்கு 175 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது என்றும் என்.கே. நியூஸ் தெரிவித்துள்ளது.
வடகொரியாவுடன் நல்லுறவை உருவாக்க விருப்பம் கொண்டுள்ள தென் கொரியாவும், தங்கள் நாட்டவர்கள் வட கொரியா செல்ல அனுமதிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
வட கொரியாவும் தயக்கத்தில் உள்ளது - அந்த நாட்டுக்குப் பணம் தேவை. ஆனால், தங்கள் சமுதாயத்தில் வெளிநாடுகளின் தாக்கம் ஏற்படும் சூழ்நிலைக்கு மக்களை ஆட்படுத்திவிடக் கூடாது என்றும் அஞ்சுகிறது.

பட மூலாதாரம், Getty Images
``எனவே அவர்கள் (வடகொரியா) உள்நாட்டு மக்களுடன் வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்வதை குறைக்கும் வகையில் சில சுற்றுலா மாவட்டங்களில் மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் வெளிநாட்டு வருவாய் கிடைக்கும்'' என்று ஜியோங்மின் கிம் தெரிவிக்கிறார்.
ஆனால் வட கொரியாவை சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடமாக ஆக்குவதற்கு, சொகுசு விடுதிகள் கட்டுவதைவிட அதிகமான முயற்சிகள் தேவைப்படும்.
``வட கொரியாவுக்கு வருபவர்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பணக்கார சுற்றுலாப் பயணிகளாக இருப்பார்கள் என்று கிம் ஜோங்-உன் கருதினால், அவருடைய திட்டங்கள் வெற்றி பெறாது'' என்று தென் கொரியாவின் கூக்மின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரெய் லன்கோவ் கூறுகிறார்.
``ஒட்டுமொத்தமாக வட கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிட்ட பங்களிப்பை சுற்றுலாத் துறை அளிக்க வாய்ப்புள்ளது என்றாலும், அதற்கான எல்லைகள் தெளிவாகத் தெரிந்துள்ளன. வட கொரியா சுவிட்சர்லாந்து போல அல்ல'' என்று டெய்லி என்.கே. இணையதளத்தில் நவம்பர் 8 ஆம் தேதி அவர் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவது பற்றிய அச்சத்தால், வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால், அதுவும் கிம் வகுக்கும் திட்டங்களை பாதிப்பதாக இருக்கும்.
`மக்கள் மீதான அன்பு'
சுற்றுலாத் துறை தவிர, உள்நாட்டு மக்களின் ஓய்விட வசதிகள் உருவாக்கமும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் வடகொரியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு அது உதவும் என கருதப்படுகிறது.
``தடைகள் இருந்தாலும் மக்களின் `நாகரிகமான' வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற கலாசார மையங்களை அரசு உருவாக்குகிறது என்று உள்நாட்டு மக்களை நினைக்க வைப்பதற்கான முயற்சியாகவும் இது இருக்கிறது'' என்று ஜியோங்மின் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், KCNA
அரசு ஊடகம் தங்கள் சமீபத்திய செய்திகளில் இவை குறித்து விரிவாக தகவல்கள் அளித்துள்ளது. உள் நாட்டில் விளம்பரம் செய்வதன் அடையாளமாக அது கருதப்படுகிறது.
2019ம் ஆண்டில் கிம் செய்த பணிகள் பற்றி வடகொரிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதிய ஆவணப் படத்தில், யாங்டோக் சொகுசு விடுதி மற்றும் சம்ஜியோன் நகர உருவாக்கத்தில் அவர் காட்டிய அக்கறை பற்றி நிறைய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
யாங்டோக் சொகுசு விடுதி அருகே உள்ள சாலை மற்றும் வானிலை சூழ்நிலைகள் பற்றி தனியாக ஒரு தொகுப்பே ஒளிபரப்பானது.
``மக்கள் மீது அதிபர் கிம் ஜோங்-உன் கொண்டிருக்கும் அன்பின் விளைவால் தான் யாங்டோக் சொகுசு விடுதி உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்ல கலாசார வாழ்க்கை சூழலை அளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் விளைவாகத்தான் இது உருவாக்கப்பட்டுள்ளது'' என்று அதிகாரப்பூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் ஜனவரி 21 ஆம் தேதி கூறியுள்ளது.
``கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அறிவார்ந்த தலைமையால் மக்களின் நலன்களுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சொகுசு விடுதியில் பெருமளவிலான குடிமக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உயிர்வாழ வேண்டும் என்பதைக் காட்டிலும், மக்களுக்கு கூடுதல் தேவைகள் இருக்கின்றன என்று வடகொரிய பொருளாதார கண்காணிப்பு வலைப்பூ ஒன்றின் இணை ஆசிரியர் பெஞ்சமின் கட்ஜெப் சில்பெர்ஸ்டெயின் கூறியுள்ளார். 1990களில் இதே நிலைமை இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், KCNA
``வளர்ச்சிப் பணிகள் நன்றாக நடந்து வருகின்றன என்று தன் மக்களுக்குக் காட்டுவதற்கு கிம் விரும்புகிறார். பல நகரங்கள் மிகவும் மோசமாக இருந்தாலும், அவர்களுடைய நகரங்கள் நன்றாக இல்லாவிட்டாலும், வேறு பகுதிகள் நன்றாக உள்ளன என காட்ட விரும்புகிறார். ஆனால், ஒட்டுமொத்தமாக, பணம் சம்பாதிக்கும் நடுத்தர மக்கள் உல்லாசமாக இருக்க, பணம் செலவழிக்க விரும்பும் தேவையைப் பூர்த்தி செய்வதாக இது உள்ளது'' என்று அவர் பிபிசி மானிட்டரிங் பிரிவிடம் கூறினார்.
``உயர் லட்சியங்கள் கொண்ட மாறுபட்ட தலைவராக இருக்க கிம் ஜோங்-உன் விரும்புகிறார். அதை வெளிக்காட்டுவதாக ஓய்விட வசதிகள் உருவாக்கம் அமைந்துள்ளது'' என்கிறார் அவர்.
கட்டுமானத் துறையில் பெருவளர்ச்சி
வடகொரியாவை நவீனத்துவம் மிகுந்த நாடாகக் காட்டி, தேசத்தின் பெருமையை உயர்த்தும் நோக்கில் கிம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளில், அடையாளபூர்வமாக இருக்கும் வகையில் கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டின் கிழக்கு கடலோரம் உள்ள வொன்சன்-கல்மா சுற்றுலா மண்டலத்தின் பணிகள் முடியும்போது, கடற்கரையை நோக்கிய ஹோட்டல்கள், விளையாட்டு வளாகம், நீர்ச்சறுக்கு விளையாட்டு வசதி மற்றும் இன்னும் பல வசதிகள் கொண்டதாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
2019 அக்டோபரில் அதைத் திறக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சர்வதேசத் தடைகள் காரணமாக கட்டுமானப் பொருள்கள் கிடைக்காததால் அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கும்காங் சிகரத்தில் தன் கட்டடங்களை இடித்துவிடுமாறு தென் கொரியாவை கேட்டுக் கொண்டதை அடுத்து, அந்தப் பகுதியை ``உலக கலாச்சார மற்றும் சுற்றுலா பகுதியாக, அதற்கே உரிய சிறப்புடன் '' உருவாக்கப் போவதாகவும் கிம் அறிவித்துள்ளார்.
அவருடைய தலைமையின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளில் மசிக்ரியாங் ஸ்கீ சொகுசு விடுதி, கங்யே சொகுசு விடுதி, மிரே விஞ்ஞானிகள் சாலை, பியாங்யாங்கில் ரியோமியோங் சாலை ஆகியவை அடங்கும்.
ஆனால் நடைமுறையில் குறைந்த பயனுள்ள பகட்டுக்கான திட்டங்கள் இவை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், KCNA
இந்தத் திட்டங்களில் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
வடகொரியாவில் இருந்து வெளியேறி வந்துள்ள ஒருவர், சமிஜ்யோன் கட்டுமான திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் மோசமான நிலை குறித்து பேசியுள்ளார்.
``குளிரில் பசியுடன் அல்லாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளைப் பற்றி நினைத்தால் இரவில் என்னால் தூங்க முடிவதில்லை'' என்று என்.கே. நியூசுக்கு ஜனவரி 20 ஆம் தேதி அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை, இறங்கு முகத்தில் பங்கு சந்தை - 24 மணி நேரத்தில் நடந்தவை
- கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கியது - சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து
- "தமிழகத்தில் நடைபெறுவது மோதி அரசின் அடிமை ஆட்சி": புதுவை முதல்வர் நாராயணசாமி
- பொதுவெளியில் 7 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய கிம் ஜாங் உன் உறவினர் - நடப்பது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













