You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவின் கொரோனா வைரஸ் அமெரிக்கா வரை பரவியது: மருந்து இல்லாததால் சிக்கல்
மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பிய 30 வயதுகளில் இருக்கும் நபர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் சமீபத்தில் சீனாவின் வுகான் மாகாணம் சென்று திரும்பியவர்கள்.
வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வட கொரியா தற்காலிகமாக வெளிநாட்டவர்களுக்கு தங்களது எல்லையை மூடியுள்ளது.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகள் வுகான் மாகாணத்தில் இருந்து வரும் விமானப் பயணிகளை சோதனை செய்தே அனுமதிக்கின்றன.
வைரஸ் பரவுவது எங்கு தொடங்கியது?
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.
11 மில்லியன் (1.1 கோடி) மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது.
வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இபோலா, பன்றிக் காய்ச்சல் ஆகியவை பரவியபோது அறிவிக்கப்பட்டதுபோல, இந்த வைரஸ் பரவலையும் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று முடிவு செய்யவுள்ளது.
சர்வதேச சுகாதார நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்?
2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.
சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
இதற்கு என்ன சிகிச்சை?
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும்.
மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: