You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை காணொளி எடுத்த நபரை கைது செய்த இரான் மற்றும் பிற செய்திகள்
உக்ரைன் பயணிகள் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படுவதை காணொளி எடுத்த நபரை கைது செய்துள்ளதாக இரான் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது தேச பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.
காணொளி எடுத்த நபரை இரானின் புரட்சிகர ராணுவபடையினர் காவலில் எடுத்துள்ளனர்.
ஆனால், காணொளியை முதலில் பதிவிட்ட லண்டனில் இருக்கும் இரான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர், தமக்கு அந்த காணொளியை அனுப்பிய நபர் பாதுகாப்பாக இருப்பதாகவும், இரான் அதிகாரிகள் தவறான நபரை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட PS752 என்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் இருந்த 176 உயிரிழந்தனர்.
தவறுதலாக பயணிகள் விமானம் சுடப்பட்டதாக கூறிய இரான் இந்த சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சிறப்பு நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்கும். இது ஒரு சாதாரண வழக்காக இருக்காது. ஒட்டு மொத்த உலகமும் இந்த விசாரணையை கவனிக்கும் என்று இரான் நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி கூறியிருக்கிறார்.
'முரசொலி வைத்திருந்தால் திமுககாரன்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி'
முரசொலியை வைத்திருந்தால் தி.மு.க.காரன் எனவும் துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளி எனவும் சொல்லிவிடலாம் என துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
துக்ளக் இதழின் 50வது ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் உரையாற்றிய ரஜினிகாந்த், துக்ளக் இதழின் மறைந்த ஆசிரியர் சோவை, பெரிய ஆளாக்கியது கருணாநிதிதான் என்று குறிப்பிட்டார்.
ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா
ஜப்பானில் இளமையை எட்டிய இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 20 வயதானவர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாம் திங்கள் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவிற்காக டோக்கியோவின் டிஸ்னி லேண்டில் பலர் கூடுகின்றனர்.
இந்த விழாவில் கலந்துகொள்ளும் பெண்கள் கிமோனோஸ் என்ற பாரம்பரிய ஆடையை அணிகின்றனர். ஆண்களும் அந்நாட்டின் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொள்கின்றனர்.
விரிவாக படிக்க: இளமை வயதை எட்டியதை விழாவாக கொண்டாடும் ஜப்பானியர்கள்
சிஏஏ: 3 நாட்களில் 32,000 பேரை அடையாளம் கண்ட உ.பி அரசு
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த 32 ஆயிரம் அகதிகளை உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவர்களது விவரங்கள் கொண்ட பட்டியலை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் நோக்கில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த, அந்த நாடுகளின் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அகதிகள் பற்றிய தகவல்களை இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்குகிறது.
இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இன்று முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.1 ஓவர்களில் 255 ரன்களை எடுத்திருந்தது.
அதனை தொடர்ந்து பேட் செய்து ஆஸ்திரேலிய அணியின் வார்னர், அவுட் ஆகாமல் 112 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸருடன் 128 ரன்களை எடுத்தார். ஃபிஞ்ச் 114 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 110 ரன்களை எடுத்தார்.
விரிவாக படிக்க: இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: