You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது - மேற்கத்திய நாடுகள்
இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு வேளை தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள காணொளியில், டெஹ்ரான் வான் வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை பாய்ந்து, சிறிது நேரத்திலேயே விமானம் மீது மோதுகிறது. 10 விநாடிகள் கழித்து, தரையில் ஒரு பெரும்சத்தம் கேட்கிறது. தீப்பிடித்த விமானம் பறந்து கொண்டிருந்தது.
176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
எனினும், விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று இரானின் சிவில் விமான போக்குவரத்து தலைவர் கூறுகிறார்.
இரான் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க போர் விமானம் என்று நினைத்து, உக்ரைன் பயணிகள் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்திருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த விபத்தில் 82 இரானியர்கள், 63 கனடியர்கள், உக்ரைன் நாட்டை சேர்ந்த 11 பேரோடு, ஸ்வீடன், பிரிட்டன், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு நாடுகள் என்ன சொல்கின்றன?
தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகிக்கின்றன.
அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்பு கதிர் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான ஒரு சமிக்ஞை கிடைத்ததாகவும் அமெரிக்க புலனாய்வு துறைமூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'தோர் எம்-1' ஏவுகணை மூலம் பிஎஸ்752 எனும் அந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் மற்றும் மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் கருதுவதாக நியூஸ்வீக் செய்தி கூறுகிறது.
நிலத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை மூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக தமக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், அவ்வாறு தாக்கும் நோக்கம் இரானுக்கு இல்லாமலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்