You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெறும் 20,000 மக்களைக் கொண்ட குட்டி நாடு கடலைக் காக்க எடுத்திருக்கும் வியக்க வைக்கும் முயற்சி
பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பலாவு.
புற ஊதா கதிர்கள், சூரிய வெப்பம் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாத்துக்கொள்ள, கடற்கரைகளுக்கு செல்பவர்கள் சன் க்ரீம் பூசிக்கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது.
ஆக்சிபென்சீன் (oxybenzone), ஆக்டிநாக்சேட் (octinoxate) உள்ளிட்ட 10 வேதிப்பொருட்களை உள்ளடக்கிய சன் க்ரீம்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது புத்தாண்டு தினமான இன்று முதல் இந்தச் சின்னஞ்சிறு தீவு தேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு 2018ஆம் ஆண்டே வெளியானது.
"இந்தச் சுற்றுச்சூழல்தான் நாம் வாழும் கூடு. நாம் இதை மதிக்க வேண்டும்," என்று பலாவு தீவு தேசத்தின் அதிபர் டாமி ரெமெங்கசோ தெரிவித்துள்ளார்.
இந்த தீவு தேசம் நூற்றுக்கணக்கான தீவுகளை உள்ளடக்கியது. இதன் மொத்த மக்கள்தொகையே சுமார் 20 ஆயிரம்தான்.
கடலில் முக்குளிப்பவர்களுக்கு 'சிதைக்கப்படாத சொர்க்கம்' என்று இந்த தேசத்தை அதன் அரசு விளம்பரப்படுத்துகிறது.
பலாவுவின் ராக் தீவுகளில் இருக்கும் ஒரு கடற்காயல் (lagoon) யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"இவற்றைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக நாங்கள் இருப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. பிற நாடுகளும் இதைச் செய்ய நாங்கள் முயற்சி செய்வோம்," என்று அந்நாட்டு அதிபர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
"பவளப் பாறைகள், மீன்கள் மற்றும் கடலுக்கு இவை பாதகமானது என்று அறிவியல் கூறினால் அதை எங்கள் மக்களும், இங்கு வருகை புரிபவர்களுக்கு கவனத்தில் கொள்வார்கள்," என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் இதேபோன்றதொரு தடை 2021 முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள வர்ஜின் தீவுகள், நெதர்லாந்தின் கீழ் உள்ள போனேர் எனும் கரிபீயக் கடலில் உள்ள தீவு ஆகியவற்றிலும் இத்தகைய தடைகள், வரும் காலங்களில் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: