You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய மாமியார்கள் நல்லவர்களா கெட்டவர்களா? ஆய்வுகள் கூறுவதென்ன?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
கோபக்கார மனைவிகள் உண்டு, கணவனை குறைசொல்லும் மனைவிகளும் உண்டு, ஆனால் இதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தும் மாமியார்களை யாராலும் வெல்ல முடிவதில்லை.
ஜி.கே. செஸ்டெர்டோன் என்ற பிரிட்டன் எழுத்தாளர், ''மிகச்சிறந்த மாமியார் ஒரு பிரச்சனையாக இருப்பார். மோசமான மாமியார் ஒரு கொடூரமானவராக இருப்பார் என்று நகைச்சுவையாளர்கள சித்தரிக்கின்றனர்,'' என்று எழுதியுள்ளார்.
எப்போதும் அனைவரையும் கட்டுப்படுத்துவார் என இந்திய மாமியார்கள் குறித்து பொதுவான கருத்துகளும், வரம்பை மிஞ்சும் எள்ளல்களும் உள்ளன. இந்தியாவில் அனைத்து பெண்களும் திருமணம் ஆன பிறகு தங்கள் கணவனின் வீட்டிற்கே சென்று வாழ வேண்டியுள்ளது.
எனவே பெண்களுக்கு தங்கள் மாமியாருடனான உறவு மிகவும் முக்கியமானது. இவ்வாறு வாழும் பெண்களின் மோசமான அனுபவம், மாமியார்கள் பற்றிய மோசமான பிம்பத்தையே உருவாக்குகிறது.
எனவே, இந்திய மாமியார்கள் பெரும்பாலும் இந்தியத் திரைப்படங்களில் துன்பப்படும் தாய்க்கு முரணாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.
மாமியார் என்பவர் வீட்டில் கட்டளை இடுபவராகவும், சண்டையிட்டுக்கொண்டே இருப்பவராகவும், தன் மகனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்பவராகவும், கூட்டு குடும்பத்தை வழிநடத்துபவராகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். மேலும் மாமியார்கள் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய மாமியார்கள் குறித்து தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
2018ம் ஆண்டு, டெல்லி மற்றும் போஸ்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திருமணமான 671 பெண்களிடம் மாமியார்கள் குறித்து பேசினார்கள். மிகவும் பழமைவாதம் நிலவும் கிராமமாக கருதப்படும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 28 கிராமங்களை சேர்ந்த 18 முதல் 30 வயதுடைய பெண்களிடம் மாமியார் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் சுமார் 26 வயதான பெண்களின் கணவர்களின் சராசரி வயது 33ஆக இருந்தது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சாதியினரிடமும், இந்துக்களிடமும் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 60% விவசாயநிலத்தை சொந்தமாக வைத்திருந்தனர். கிட்டத்தட்ட 70% பெண்கள் அவர்களின் மாமியார் வீட்டில் வசித்துவந்தனர்.
அவர்களிடம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தினர் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. ஏனெனில் பெண்கள் தங்களின் சுற்றுவட்டாரத்தினரிடமும், குடும்பம் அல்லாத வெளி நபர்களிடமும் பழகுவதற்கு அவர்களின் மாமியார்கள் அனுமதிக்கின்றனரா என்பதைத் தெரிந்துகொள்ள இவ்வாறான கேள்விகள் கேட்கப்பட்டன.
இதன் மூலம் தங்களை சுயவிருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களா என்றும் தங்கள் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுகிறார்களா என்பதும் தெரியவந்தது.
இதன்மூலம் கதைகளில் வரும் மாமியார்களுக்கும் நிஜ வாழ்க்கை மாமியார்களுக்கும் ஒரு மெல்லிய வேறுபாடே இருப்பது தெரியவந்தது. மாமியார்களுடன் வாழும் பெண்கள் தங்கள் சுற்றத்தாரிடம் இருந்தும் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும் விலகி இருக்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்தது.
குடும்பத்தினர் அல்லாமல் வெளிநபர்களிடம் நட்பு கொள்ளும் சுதந்திரம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. வெளி உலகத்துடனான தொடர்பு பெண்களுக்கு கிடைத்தால் அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், நல்ல நண்பர் கிடைக்கவும், சுய வளர்சிக்கும் வழிவகுத்திருக்கும்.
மேலும் உடல் நலம் குறித்தும், குழந்தை பெறுவது குறித்தும் சுயமாக முடிவுசெய்யும் நிலைக்கும் மற்றவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கும் , சுற்றத்தாருடன் பழக்கம் வைத்துக்கொள்வது நன்மை அளிக்கும். ஆனால் இந்த பெண்களுக்கு அவ்வாறான நன்மைகள் கிடைக்கவில்லை.
ஆராய்ச்சியாளர்கள் பேசிய பெண்களில் 36 சதவீதத்தினர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் அவர்கள் வசிக்கும் கிராமத்தில் அவர்களுக்கு இல்லை.
மேலும் 22% பெண்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லவே இல்லை. 14% பெண்கள் மட்டுமே தனியாக ஒரு சுகாதார நிலையத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 12% பெண்கள் மட்டுமே தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடிற்கு தனியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தங்களின் கணவர் மற்றும் மாமியாரை தவிர்த்து, தங்களுக்கு முக்கியமான விவகாரங்கள் குறித்து வெளிநபர்கள் இரண்டுக்கும் குறைவானவர்களிடமே பெண்கள் பேசியுள்ளனர்.
இரண்டு பிரிவு பெண்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மாமியார்களுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்கள் மற்றும் தனியாக வேறு விட்டில் வாழும் பெண்கள்.
குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது, அல்லது குடும்ப கட்டுப்பாடு செய்வது போன்ற ஆலோசனைகளை தங்கள் மருமகளுக்கு யாரும் அறிவுறுத்தக்கூடாது என்ற காரணத்திற்காகவே மாமியார்கள் தங்கள் மருமகள்களை யாரிடமும் பழக அனுமதிப்பதில்லை என்பது தெரியவருகிறது.
சில மாமியார்கள் , தங்கள் மருமகள் நிறைய குழந்தை பெற வேண்டும் என்று கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண் குழந்தைகள். நெருக்கமான நண்பர்கள் உள்ள பெண்கள் குழந்தை பேரின்போதும், உடல் நல குறைவின்போதும் மிக குறைந்த அளவிலேயே மருத்துவ உதவிகளை நாடுகின்றனர்.
மேலும் நவீன கருத்தடை முறைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என போஸ்டன் யூனிவர்சிட்டி, டெல்லி ஸ்கூல் ஆப் எக்கோநோமிக்ஸ், நார்த் ஈஸ்டர்ன் யூனிவர்சிட்டி மற்றும் போஸ்டன் கல்லூரி நடத்திய ஆராய்ச்சி கூறுகிறது.
மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ்வதால் எந்த பலனும் இல்லை என்று கூறிவிட முடியாது. கர்உலகத்துடனானப காலத்தில் மருமகளுடன் மாமியார் இருப்பதும் மிகவும் உதவியாக இருக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆனாலும் மாமியாருடன் இருப்பது பெண்களின் சுயத்தை கணிசமாக அழிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் பலர் நம்புகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: