தொலைந்து 5 ஆண்டுகள் கழித்து, 2,000 கி.மீ. தூரத்தில் கிடைத்த பூனை மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த நபரொருவருக்கு சொந்தமான பூனை சுமார் 2,000 கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டு, உரிமையாளருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஓரிகான் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் பகுதியிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சாஷா எனும் அந்த பூனை சமீபத்தில் நியூ மெக்ஸிகோவின் சாண்டா பி நகரில் இருப்பது கண்டறியப்பட்டது.

சாஷாவின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோசிப்பை ஸ்கேன் செய்ததன் மூலம் அதன் உரிமையாளரின் வசிப்பிடம் குறித்து தெரியவந்ததாக உள்ளூரிலுள்ள வன விலங்குகள் காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த பூனை விமானம் மூலம் தனது உரிமையாளரின் வீட்டை அடைந்தது.

சாஷா தொலைந்துபோன உடனேயே அதுகுறித்து புகார் செய்ததாக கூறும் அதன் உரிமையாளர் விக்டர் உசோவ், ஐந்தாண்டுகள் ஆன நிலையில், தனது பூனை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையே இழந்து இருந்ததாகவும், இந்நிலையில் மீண்டும் சாஷாவுடன் இணைந்தது வியப்பளிப்பதாகவும் கூறுகிறார்.

இந்து கோயில் சிற்பங்களை 'அசிங்கம்' என்று கூறியது ஏன்?

இந்துக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக தனக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் இடுகைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப அணியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

அவருக்கு எதிராக சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுக்கும் வகையில் பதிவிட்ட கருத்துகளுக்குப் பிறகு, அந்த விவகாரம் சர்ச்சையாகி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் திருமாவளவனுக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இது குறித்து விளக்கம் பெற தொல். திருமாவளவனை பிபிசி தமிழ் சந்தித்தது.

தமிழக அரசு அவசர சட்டம்: இனி உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடக்கும்?

மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதனால் கவுன்சிலர்கள் எனப்படும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை கவுன்சிலர்களே மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர் அல்லது பேரூராட்சியின் தலைவர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்வர்.

சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமா?

தேசிய சமஸ்கிருத அமைப்பில் படித்த ஃபரோஸ் கான், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவரது நியமனம் ஒரு பெரிய சலசலப்பை உருவாக்கும் என்றும், மாணவர்கள் அவருக்கு எதிராக தர்ணாவில் அமர்வார்கள் என்றும் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த மொழியாக கருதப்படும் சமஸ்கிருதம் ஏகபோகம், சிறுபான்மை மற்றும் வகுப்புவாதத்திற்கு பலியாகியுள்ளது.

காஷ்மீர் பிரிக்கப்பட்டபின் அங்கு பாஜகவின் வளர்ச்சி எப்படி உள்ளது?

காஷ்மீர் முடக்கப்பட்டு 100 நாட்களைக் கடந்துவிட்ட பிறகும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி.) அலுவலகம் இன்னும் மூடியே உள்ளது.

ஸ்ரீநகரில் லால் செளக் பகுதியில் அடர்ந்த மரங்களின் நிழலில் இருக்கும் இந்த அலுவலகத்தின் வாயிலில் கம்பி சுருள்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

அங்கே நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவத்தினர் பிபிசி குழுவினர் அங்கு சென்றதை விரும்பவில்லை.

"நீங்கள் பத்திரிகையாளரா'' என்று துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கேட்டார். நாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, "நீங்கள் இங்கே வரக் கூடாது, இந்தக் கட்டடத்தை படம் எடுக்க வேண்டாம்'' என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :