தமிழக அரசு அவசர சட்டம்: இனி உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடக்கும்?

மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதனால் கவுன்சிலர்கள் எனப்படும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை கவுன்சிலர்களே மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர் அல்லது பேரூராட்சியின் தலைவர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்வர்.

இதற்கு முன்பு 2006-ஆம் ஆண்டில், திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தது.

பின்னர் 2011-ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்களின் நேரடி வாக்கு மூலமாகவே மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) தமிழக அரசு வெளியிட்ட அவசர சட்டத்தில் மீண்டும் மறைமுக தேர்தல் மூலம் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தல் நேரடித் தேர்தலாக நடக்கும். அதாவது வாக்காளர்களே நேரடியாகத் தங்கள் கிராம ஊராட்சித் தலைவரைத் தேர்வு செய்யலாம்.

ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலும் மறைமுகத் தேர்தலாகவே நடக்கும்.

முன்னதாக, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் இல்லை என்பதை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதி மன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561பேரூராட்சிகள் மற்றும் 12, 524 கிராம ஊராட்சிகள் ஆகியன உள்ளன.

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சிறப்புநிலை, தேர்வு நிலை, முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என வகைப்படுத்தப்படுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :