தண்ணீர் சூழ்ந்த வெனிஸ் நகரில் வெள்ளம் புகுந்தால் பாதிப்பு எப்படி இருக்கும்? மற்றும் பிற செய்திகள்

இத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில், வெனிஸ் நகரமே நீருக்கிடையில் வாழும் நகரம்தான். இந்நகரில் தெருக்களே கால்வாய்கள்தான்.

காரணம் இந்த நகரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளால் ஆனது. ஒவ்வொரு சிறு தீவும் வாய்க்கால்களால் பிரிக்கப்படுகிறவை. நூற்றுக் கணக்கான பாலங்கள் இந்நகரின் ஒவ்வொரு பாகத்தையும் இணைக்கின்றன. இந்த சிறப்பியல்பாலும், அழகிய கட்டடக் கலையாலும் உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது இந்த நகரம்.

ஆனால், வரலாறு காணாத வெள்ளத்தால் வெனிஸ் நகரின் புகழ் பெற்ற செயின்ட் மார்க் பேசிலிகா உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது வெளியில் மட்டுமல்ல தற்போதைய வெள்ளத்தால் கட்டங்கள் உள்ளேயும் நீர் புகுந்தது.

இந்த வெள்ளம், பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவு என்று வெனிஸ் நகர மேயர் லூய்கி புருக்னேரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "தற்போது அரசு கவனிக்கவேண்டும். இவையெல்லாம் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள். இதற்காகத் தரும் விலை அதிகமாக இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகபட்சமாக வெனிஸ் நகரில் நீர் மட்டம் 1.87 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது என்று ஓத கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. அதிகாரபூர்வமாக புள்ளிவிவரங்கள் தொகுக்கப்படுவது 1923ல் தொடங்கியதில் இருந்து ஒரே முறைதான் இந்த அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 1966ல் நடந்த அந்த நிகழ்வில் 1.94 மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது.

ஐஐடி மாணவி தற்கொலை

ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடி பேராசிரியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மானுடவியல் முதுகலை படிப்பில் முதலாமாண்டு மாணவியான பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் விசாரணை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்?

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண தமிழர்கள் இந்த முறை யார் பக்கம் இருக்கிறார்கள்? அவர்கள் விரும்பிய தீர்வுகளை இந்தத் தேர்தல் தருமா?

சபரிமலை தீர்ப்பு மறு ஆய்வு

மாதவிடாய் ஏற்படும் வயதினர் என்பதால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வயது வேறுபாடு இல்லாமல் எல்லா வயதுப் பெண்களும் இந்தக் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஒருபக்கம் உச்சகட்டத்தில் நடந்துகொண்டிருக்க அந்நாட்டில் கடந்த பல ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :