You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி அரேபியாவில் பெண்கள் பங்கேற்கும் முதல் மல்யுத்தப் போட்டி
கேளிக்கைகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சௌதி அரேபியாவில், வியாழக்கிழமையான நேற்று பெண்களுக்கான முதல் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.
ரியாத்தில் நடைபெற்ற முதல் மல்யுத்தப் போட்டியில், டபுல்யூ டபுல்யூ இ நட்சத்திரங்களான நடால்யா மற்றும் லேசி இவான்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
அடக்குமுறைக்கு பெயர் போன நாடு என்ற பிம்பத்தை உடைக்க, பல்வேறு சீர்திருத்தங்களை சௌதி அரேபியா மேற்கொண்டு வருகிறது.
நீண்ட காலமாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி இல்லாமல் இருக்க, இதற்கு 2018ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. அதே போல ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறவும், ஆண் துணை இல்லாமல் தனியாகப் பயணம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.
எனினும், அங்கு பெண்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலர் அங்கு சித்ரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டும் இருக்கிறது.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று பெண்கள் குத்துச்சண்டை போட்டி ரியாத்தில் கிங் ஃபஹத் சர்வதேச அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 68,000 பேர் அமரும் வசதி கொண்டது.
இது தொடர்பாக தங்கள் மகிழ்ச்சியை WWE நட்சத்திரங்களான நடால்யாவும், இவான்சும் வெளிப்படுத்தி உள்ளனர்.
சௌதி அரேபிய மல்யுத்த வீரரான மன்சூர் இது குறித்து www.com என்ற தளத்திடம் பேசுகையில், "என் வீட்டில் உள்ள பெண்கள் இந்தப் போட்டியைக் காண மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். நேரடியாக போட்டியை பார்ப்பதில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் சகோதரிகளுக்கு மல்யுத்தம் என்றால் மிகவும் பிடிக்கும். என் சகோதரியின் மகளுக்கு தாம் ஒரு மல்யுத்த வீராங்கனையாக வரவேண்டும் என்பதே ஆசை," என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நான் முதலில் மல்யுத்தப் போட்டியில் விளையாடத் தொடங்கியபோது, இங்கு பெண்கள் போட்டியிடுவார்களா என்று என்னைக் கேட்டார்கள். நான் நிச்சயமாக என்றேன். ஒரு காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை காண்பது என்பதே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போது பெண்கள் வாகனம் ஓட்டுகிறார்கள். நான் ஒவ்வொரு முறை இங்கு வரும்போது பல மாற்றங்களை என்னால் உணர முடிகிறது," என்றார்.
நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்