You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை: காற்றாலை முறைகேடு வழக்கில் தீர்ப்பு
காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது முன்னாள் கணவர், மேலாளர் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் வடவள்ளியில் 2008ஆம் ஆண்டில் இன்டர்நேஷனல் கன்சல்டன்சி அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ், பவர் அண்ட் கனக்ஷன்ஸ் என்ற பெயரில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்திவந்தனர். இந்த நிறுவனம் காற்றாலைகளில் முதலீடு செய்ய ஆலோசனை தரும் நிறுவனமாக சொல்லிக்கொண்டது.
இந்த நிறுவனத்தில் தியாகராஜன் என்ற தொழிலதிபர் 2008ஆம் ஆண்டில் ரூ. 26.5 கோடி ரூபாயை முதலீடு செய்தார். சேலத்தைச் சேர்ந்த இருவர் 11 லட்ச ரூபாயை முதலீடு செய்தனர்.
2009ஆம் ஆண்டில் மற்றொருவர் 6.87 லட்ச ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தார். ஆனால், இதில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து கோவை கிரைம் பிராஞ்ச் காவல்துறையினர் இவர்கள் மீது 420, 120 (பி) ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர். 2010வது ஆண்டிலும் 2011வது ஆண்டிலும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த வழக்கு 2016ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் துவங்கி நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலாளர் ரவிக்கும் மூன்றாண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பிஜு ராதாகிருஷ்ணனுக்கான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மத்திய கேரளாவின் செங்கனூர் பகுதியைச் சேர்ந்த சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கேரளாவில் டீம் சோலார் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் துவங்கி, பலரிடம் பணம் பறித்து ஏமாற்றியதாக 2013ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின.
கோடிக் கணக்கான ரூபாயும் பல முக்கியப் புள்ளிகளும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால், இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தைத் ஈர்த்தது. அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு, அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரின.
இதற்கிடையில், பிஜு ராதாகிருஷ்ணன் தன் முதல் மனைவியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.
தற்போதைய வழக்கின் தீர்ப்புக்கும், கேரளாவின் சூரியத்தகடு முறைகேடு வழக்கிற்கும் தொடர்பு இல்லையென நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்