காஷ்மீர் பிரச்சனை: தீபாவளியன்று லண்டனில் போராட்டம் நடக்குமா?

பட மூலாதாரம், Tolga akmen via Getty images
லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம் முன்பு அக்டோபர் 27 அன்று போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அன்று உயர் ஆணைய வளாகம் முன்பு ஆட்கள் கூட ஸ்காட்லாந்து யார்டு போலீசால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.
ஏற்கனவே நடந்த போராட்டங்களின்போது அதில் பங்கேற்றவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அதில் உயர் ஆணைய கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதப்படுத்தபட்டதாகவும் பிரிட்டன் அரசிடம் அங்குள்ள இந்திய வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், அந்த நாட்டில் தங்கள் அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு இடமின்றி பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தங்கள் வளாகத்துக்கு வெளியே போராட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும் இந்திய உயர் ஆணையம் பிரிட்டன் அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்களின் புனித நாளான தீபாவளி நாளன்று சுமார் 10,000 பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய உயர் ஆணையம் முன்பு போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் பாப் ப்ளேக்மேன் என்பவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் போராட்டக்காரர்கள் வன்முறை மற்றும் அச்சுறுத்தலில் ஈடுபடுவது அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளார்.
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று, இந்திய உயர் ஆணையம் அமைந்துள்ள வீதியில் காஷ்மீரை சேர்ந்தவர்கள், காஷ்மீர் மற்றும் மற்ற பகுதிகளை பூர்விகமாக கொண்டவர்கள், பாகிஸ்தானியர்கள் என பல்வேறு தரப்பினர் இந்தியாவுக்கு எதிரான பதாகைகளுடன், முழக்கங்களையும் வெளிப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்தியாவின் நிர்வாகத்துக்குட்பட்ட ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கப்பட்டு, அதை குறைந்த அதிகாரங்களை கொண்ட இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்திய அரசு அறிவித்ததை எதிர்த்தே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
இந்திய உயர் ஆணையம் முன்பு போராட்டங்கள் நடக்க அனுமதிக்க கூடாது என்றும், அங்குள்ள ஊழியர்கள் அமைதியாக தங்கள் பணிகளை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பெயர் வெளியிட விரும்பாத உயர் ஆணைய அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளர் ககன் சபர்வாலிடம் தெரிவித்தார்.
இது பொருளாதார இழப்பைவிட வியன்னா உடன்படிக்கையின்கீழ் வழங்கப்பட்டுள்ள கண்ணியத்தின் இழப்பு என்று அவர் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலிஸ்தான் மற்றும் காஷ்மீரின் கொடிகளை ஏந்தியிருந்ததாகவும், இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடியவர்கள் குழுமியிருந்த பக்கத்தை நோக்கி அவர்கள் முட்டை, உருளைக்கிழங்கு, கண்ணாடி பாட்டில்கள், ஆப்பிள்கள் போன்றவற்றை வீசியதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே போன்றதொரு போராட்டம் செப்டம்பர் 3ஆம் தேதியும் நடந்தது. தீபாவளியன்று திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் அது மூன்றாவது போராட்டம் ஆகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












