You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரெக்ஸிட் தாமதம்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பிய கையொப்பம் இல்லாத கடிதம்
ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிராக 322க்கு 306 பெரும்பான்மை அடிப்படையில் பிரிட்டன் நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது.
ஒப்பந்தம் இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு குறிப்பிட்ட தேதியான அக்டோபர் 31-ம் தேதி பிரிட்டன் வெளியேறிவிட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இது பின்னடைவைத் தந்துள்ளது.
ஆனால், நடாளுமன்றம் சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், அதை ஒட்டி சட்டப்படியான கடமையை நிறைவேற்றும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும் என்று கோரி, தனது தனிப்பட்ட கருத்துக்கு மாறாக, கடிதம் எழுதியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
ஆனால், அந்தக் கடிதத்தில் அவர் கையொப்பம் இடவில்லை. அதே சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அவர் இரண்டாவதாக கையெழுத்துடன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்துவது தவறு என்று தாம் தனிப்பட்ட முறையில் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"அக்டோபர் 31-க்குள் நிறைவேற்றுவோம்"
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவையில் சனிக்கிழமை நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் தாம் தோற்றபிறகு, பிரெக்ஸிட்டை தாமதப்படுத்துவதற்கான கோரிக்கை நகலை கையொப்பம் இல்லாமல் அனுப்பி வைக்கும்படி மூத்த ராஜீயத் துறை அதிகாரியை போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.
இரண்டாவதாக கையெழுத்துடன் அவர் அனுப்பிய கடிதத்தில், பிரெக்ஸிட்டை தாமதப்படுத்துவது தவறு என்று தாம் தனிப்பட்ட முறையில் நினைப்பதாகவும், கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களோடு எட்டப்பட்ட திருத்தப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்றும், அக்டோபர் 31-ம் தேதிக்குள் அதை செய்து முடிக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி கோரிக்கை விடுப்பதைவிட பள்ளத்தில் விழுந்து தாம் செத்துவிடத் தயாராக இருப்பதாக முன்பு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அமைய சட்டப்படியாக எழுதப்பட்டதே முதல் கடிதம் என்று பிரதமரின் கடிதத்துக்கு அனுப்பிய அறிமுகக் கடிதத்தில் (கவரிங் லெட்டர்) தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் பிரதிநிதி சர் டிம் பேரோ.
பிறசெய்திகள்:
- மீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிட் ஒப்பந்தம் - போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு
- சிங்களத்திற்கு பதிலாக தமிழ்: இலங்கையில் தமிழ் பள்ளிப் பெயர்கள் மாற்றம்
- தலையில் அட்டைப்பெட்டி அணிந்து கொண்டு தேர்வு எழுத நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள்
- "மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?" - மூத்த அரசியல் தலைவர் கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்