You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிட் ஒப்பந்தம் - போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை எம்பிக்கள் ஆதரித்தாலும், தான் தனது பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்போவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தனது "சிறந்த" ஒப்பந்தத்தை அடுத்த வாரம் செயல்படுத்த தேவையான சட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிமொழி எடுத்துள்ளார்.
இது குறித்த வாக்கெடுப்பின்போது, 322 பேர் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு வடிவமைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தனர். தீர்மானத்துக்கு எதிராக 306 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து, போரிஸ் ஜான்சன் அக்டோபர் 31 க்கு மேல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கால அவகாசம் கேட்க வேண்டி இருக்கும்.
"அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டியது இங்கிலாந்துதான்" என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
நாடாளுமன்றம் சனிக்கிழமை அன்று கூடியது ஏன்?
கடந்த 37 ஆண்டுகளில் சனிக்கிழமை அன்று நாடாளுமன்றம் கூடியது, இதுவே முதல் முறை.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது ஒப்பந்தத்துக்கு ஆதரவாக எம்பிக்கள் வாக்களிப்பார்கள் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்பார்த்தார். ஆனால், விவாதங்களுக்கு பிறகு, தனிப்பட்ட உறுப்பினர் ஒலிவர் லெட்வின் அறிமுகப்படுத்திய தீர்மானத்துக்கு ஆதரவாக எம்பிக்கள் வாக்களித்தனர்.
என்ன நடந்தாலும், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரட்டன் வெளியேறும் என்று அழுத்தமாக கூறி வந்த பிரதமருக்கு இந்தத் தோல்வி ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் என்ன கூறுகிறார்?
இன்றைய வாக்கெடுப்பு தனக்கு மனவருத்தத்தை அளித்ததாக போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். சிறப்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் அடிப்படையில் அக்டோபர் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது நல்லது என்று தாம் இன்னும் நம்புவதாக அவர் கூறினார்.
"மேலும் இதனை தாமதமாக்க, நான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தாமதப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் விருப்பம் இருக்காது என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமரின் பிரெக்ஸிட் உக்திக்கான எதிர்ப்பு இது என்றும், பிரெக்ஸிட்டை தாமதப்படுத்த அவர் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்