சிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி - பின்வாங்குமா குர்து படைகள்? மற்றும் பிற செய்திகள்

குர்து ஆயுதப்படை பின்வாங்குவதற்கு உதவும் வகையில், சிரியாவின் வடக்கு பகுதியில் போர்நிறுத்தம் மேற்கெள்ள துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.

அங்காராவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸூம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய சந்திப்புக்கு பின்னர் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் சண்டை நிறுத்தப்படும். இந்நேரத்தில் துருக்கி எல்லையில் அமைப்பதாக கூறும் "பாதுகாப்பு மண்டலம்" என்கிற பகுதியில் இருந்து குர்துக்கள் தலைமையிலான துருப்புகளை பின்வாங்குவதற்கு அமெரிக்கா உதவும்.

இந்த ஒப்பந்தத்திற்கு குர்து ஒய்பிஜி கட்டுப்பட்டு நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.

சண்டை மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் எல்லை நகரங்களான ராஸ் அல்-அயின் மற்றும் டால் அப்யாட்டுக்கு இடையிலான பகுதியில் குர்துக்களின் தலைமையிலான துருப்புகள் இந்த ஒப்பந்தத்தை கடைபிடிக்கும் என்று தளபதி மஷ்லௌம் கோபானி கூறியுள்ளார்.

"பிற இடங்களின் நிலைமைகள் பற்றி நாங்கள் கலந்துரையாடவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் ராஸ் அல்-அயினில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிரியா மணித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

கடந்த எட்டு நாட்களில், சிரியாவில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று லட்சத்திற்கு மேலானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இது கூறியுள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தால் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பதில் தெரிவித்திருக்கிறார்,

ப. சிதம்பரம் கைதின் நோக்கம் என்ன?- மூத்த வழக்கறிஞர்கள் அலசல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்.

சிபிஐ-யை தொடர்ந்து, அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை அக்டோபர் 16ஆம் தேதி கைது செய்தது. அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதற்காக அவர் திகார் சிறையில் இருந்து அதிகாரிகளால் இன்று (வியாழக்கிழமை) அழைத்துச் செல்லப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ கைது செய்தது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்தது. தற்போது இதே வழக்கில் பண மோசடி குற்றச்சாட்டில் அவரை விசாரிக்க காவலில் எடுத்துள்ளது அமலாக்கத்துறை.

இது தொடர்பாக சில சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்டது பிபிசி தமிழ்.

மதுரையில் தலித் சிறுவனின் முதுகில் பிளேடால் கீறிய சம்பவம்: நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் பாலமேட்டிற்கு அருகில் உள்ள கிராமத்தில் பள்ளிக்கூட மாணவன் ஒருவனின் முதுகை சக மாணவன் பிளேடால் கிழித்த சம்பவம் ஜாதி தொடர்பான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உண்மையில் அங்கு நடந்தது என்ன?

மதுரை நகரிலிருந்து சுமார் 23 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் பாலமேட்டிற்கு அருகில் இருக்கிறது மறவப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த சரவணக்குமார் (14) பாலமேட்டில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.

அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க ஜாதி பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்துவருகிறார்கள். அக்டோபர் 11ஆம் தேதியன்று - வெள்ளிக்கிழமை - மாலையில், பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் ஆதிக்க ஜாதி பிரிவைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சரவணக்குமாரின் முதுகில் கழுத்திலிருந்து நீளமாக பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை டூ யாழ்ப்பாணம் விமானசேவை தொடக்கம் : விரிவான தகவல்கள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக திறந்து வைத்தனர்.

விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பிகில், கைதி: தீபாவளிக்கு மோதும் திரைப்படங்கள் - ரீலிஸ் தேதி தெரியுமா?

விஜய் நடித்த பிகில் திரைப்படமும் கார்த்தி நடித்த கைதி திரைப்படமும் தீபாவளியை ஒட்டி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் தீபாவளி அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பிகில், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களுமே தீபாவளியை ஒட்டி வெளியாகுமெனக் கூறப்பட்டிருந்தது. நாளிதழ்களிலும் விளம்பரங்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், பிகில் திரைப்படம் வெளியாகும் தேதி இன்று மாலை ஆறு மணியளவில் அறிவிக்கப்படுமென அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இதற்கு சில மணி நேரத்திற்குப் பிறகு, கார்த்தி நடித்த கைதி படத்தைத் தயாரிக்கும் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரபு, கைதி படத்தின் தமிழ், தெலுங்கு போஸ்டர்களை வெளியிட்டு, படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகுமெனக் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :