You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடல் நலக்குறைவால் இறந்த '344 வயது' ஆமை மற்றும் பிற செய்திகள்
தங்களுக்கு சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நல குறைவின் காரணமாக இறந்துவிட்டதாக நைஜீரியாவில் உள்ள அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது.
வயதானது என்னும் அர்த்தம் கொண்ட 'அலக்பா' என்றழைக்கப்பட்ட அந்த ஆமை நைஜீரியாவின் ஓயோ மாநிலத்தில் ஓக்போமோசோ அரண்மனையில் வாழ்ந்து வந்தது.
மாதத்திற்கு இரண்டுமுறை மட்டுமே உண்ணும் இந்த பெண் ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே இரண்டு தனிப்பட்ட வேலையாட்கள் இருந்தனர்.
இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால் அந்நாட்டின் தொலைத்தூர பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிடுவது வழக்கம்.
1770 முதல் 1797 வரை ஆட்சி செய்த ராஜ்ஜியத்தின் மூன்றாவது தலைவரான இசான் ஒகுமாய்டே என்பவரால் இந்த ஊர்வன அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.
ஒகுமாய்டேவின் காலத்தில் அரண்மனைக்கு கொண்டுவரப்படும் போதே அலக்பாவுக்கு 100 வயதிற்கு மேல் இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
அதே சூழ்நிலையில், இந்த ஆமையின் வயது விவகாரத்தில் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
பிரிஸ்டல் மிருகக்காட்சிசாலையின் ஊர்வனவற்றின் கண்காணிப்பாளரான டிம் ஸ்கெல்டன், அலக்பா இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்திருப்பது "சாத்தியமற்றது" என்றார்.
தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவங்கள்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை தமிழகத்தில் பெரும்பாலானவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
திருச்சியின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் ஓட்டை போட்டு திருடர்கள் உள்ளே சென்று திருடியுள்ளனர்.
அக்டோபர் 1ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரவு சுமார் 2 மணியில் இருந்து 4.40 மணி வரை கொள்ளையர்கள் நகைக் கடைக்குள் இருந்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.
விரிவாக படிக்க:தமிழகத்தில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவங்கள்
காஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா பேச்சுக்கு இந்தியா கடும் எதிர்வினை
காஷ்மீர் இந்தியாவால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பேசியதற்கு இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது.
இருநாடுகள் இடையே இருக்கும் நட்புறவைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மகாதீர் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பேசியிருந்தார்.
அசுரன்: சினிமா விமர்சனம்
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன்.
1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்).
வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது.
விரிவாக படிக்க:அசுரன்: சினிமா விமர்சனம்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட சிக்கலை உண்டாக்கிய மனு நிராகரிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இதனை பிபிசி தமிழுக்கு உறுதி செய்தார்.
இதனால், கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் காணப்படுகிறது.
காமினி வியங்கொட மற்றும் கலாநிதி சந்திரகுப்த தேநுவர ஆகியோரினால் இந்த மனு கடந்த 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்