You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவங்கள்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை தமிழகத்தில் பெரும்பாலானவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
திருச்சியின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் ஓட்டை போட்டு திருடர்கள் உள்ளே சென்று திருடியுள்ளனர்.
அக்டோபர் 1ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரவு சுமார் 2 மணியில் இருந்து 4.40 மணி வரை கொள்ளையர்கள் நகைக் கடைக்குள் இருந்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.
சுமார் 13 கோடியே 9 லட்சம் ருபாய் மதிப்புள்ள 28 கிலோ தங்கம் மற்றும் 180 கேரட் வைர நகைககள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவங்கள் என்னென்ன, அவற்றை காவல்துறை எப்படி கையாண்டது என்பதை பார்க்கலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கொள்ளை
2012ஆம் ஆண்டு சென்னையில் அடுத்தடுத்து இரண்டு வங்கிகளில் பட்டப்பகலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2012 ஜனவரி 23ஆம் தேதி பெருங்குடியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடாவுக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய நான்கு நபர்கள், 19 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று தப்பினர். அடுத்த மாதமே, அதாவது பிப்ரவரி 20ஆம் தேதி, கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதே போன்று ஆயுதம் ஏந்திய நான்கு நபர்கள் 14 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இரண்டு வங்கிகளிலுமே பாதுகாப்பு கேமராக்கள் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக சந்தேகிக்கும் நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 23ஆம் தேதியே, சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கும் ஐந்து நபர்களை போலீஸார் என்கவுண்டர் செய்தனர். அவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
காவல் துறையினர் இவர்களை என்கவுண்டர் செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சந்தேக நபர்கள் ஏன் கைது செய்யப்படாமல் கொள்ளப்பட்டனர் என்று சிறைக் கைதிகள் உரிமைக்காக போராடுபவரும் வழக்கறிஞருமான புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
ஆனால், நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
சேலம் ரயில் கொள்ளை
2016ஆம் ஆண்டு. சேலம் கோட்டத்தில் உள்ள வங்கிகளில் சேரும் சேதமடைந்த, செல்லாத ரூபாய் தாள்கள் ஒன்றாகத் திரட்டப்பட்டு 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டன. இதில் சுமார் 342 கோடி ரூபாய் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தப் பணத்தை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு அனுப்புவதற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றப்பட்டது. இந்த ரயில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை சென்னை வந்து சேர்ந்தது.
காலை 11 மணியளவில் பணப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியை திறந்தபோது பணப்பெட்டிகள் சில உடைக்கப்பட்டிருந்ததோடு, ரயில் பெட்டியின் மேலேயேயும் ஓர் ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போடப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக 5.75 கோடி ரூபாய் பணம், கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
ஒரு கட்டத்தில் இது தொடர்பான விசாரணை, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மத்திய பிரதேச மாநிலம் ரட்லத்தை சேர்ந்த தினேஷ் , ரோகன் பார்தி ஆகியோரை சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது குற்றவாளிகள் தினேஷ் மற்றும் ரோஹன் இருவரும் மோஹர்சிங் தலைமையின் கீழ் இந்த கொள்ளை சம்பவத்தில் தாங்கள் ஈடுபட்டதை ஒப்பு கொண்டதாக காவல்துறை கூறியது.
இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் இக்கொள்ளை சம்பவத்தோடு தொடர்புடைய கொள்ளை கூட்ட தலைவர் மோஹர்சிங் மற்றும் மற்ற கூட்டாளிகளில் சிலர் குணா மாவட்ட மத்திய சிறையில் மற்ற வழக்கு சம்மந்தமாக அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோஹர்சிங் தலைமையிலான குழு மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்று புலன்விசாரணையில் தெரியவருவதாகவும் , இக்கொள்ளை குழுவினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் குழுவாக சென்று அப்பகுதிகளில் சாலையோரம் அல்லது ரயில் நிலையம் , தண்டவாளங்கள் அருகே தற்காலிக கூடாரங்களை அமைத்து கொள்வார்கள் என்றும் இவர்கள் கட்டட தொழிலாளிகளாகவும், பலூன் மற்றும் பொம்மை விற்பனையாளராகவும், வேலை செய்வது போல் அப்பகுதியில் சுற்றித்திரிந்து குற்ற செயலுக்கு ஏதுவான இலக்கினை தேர்ந்தெடுப்பர்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
சிலை கடத்தல்கள்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் சிலைகள் திருடப்படுவது, உள் நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டுவது போன்ற செய்திகள் இங்கு தொடர்கதையாகியது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்குச் சொந்தமான இரண்டு பண்ணை வீடுகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் இரண்டு பண்ணை வீடுகளில் இருந்தும் 132 பழமையான கற்சிலைகளை போலீஸார் மீட்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டிலும் சில சிலைகள் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 27-ம் தேதி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து அங்கிருந்து 12 ஐம்பொன் சிலைகள் உட்பட 89 சிலைகளை பறிமுதல் செய்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்