டிரம்ப் மீது குற்றச்சாட்டை முன்வைத்தது அமெரிக்க புலனாய்வு முகமையை சேர்ந்தவரா?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பதவியில் நீக்குவது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணைக்கு வித்திட்டுள்ள புகாரை முன்வைத்தவர் அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரி என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரி வெள்ளை மாளிகையில் பணியாற்றியவர் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரம்புக்கும், உக்ரைன் அதிபருக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பு குறித்த விவரங்களை கட்டுப்படுத்துவதற்கு வெள்ளை மாளிகையின் உயரதிகாரிகள் முயன்றதாக அந்த புலனாய்வு அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடனின் செயல்பாடுகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் வொளாடிமீர் செலன்ஸ்கியிடம் ஜூலை 25ம் தேதி அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக அந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை களங்கப்படுத்தும் நோக்கில் உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை நிறுத்தி வைத்தாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்து வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை வெளியான இந்த குற்றச்சாட்டில், அமெரிக்க - உக்ரைன் அதிபர்களுக்கிடையேயான உரையாடல் பொதுவாக சேமிக்கப்படும் கணினி அமைப்பில் பதியப்படாமல், ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்படும் தனிப்பட்ட கணினி அமைப்பில் சேமிக்கப்பட்டதாக டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலென்ஸ்கியுடன் பேசுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே, உக்ரேனுக்கு கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் இராணுவ உதவியை தான் தனிப்பட்ட முறையில் நிறுத்தியதாக கூறும் டிரம்ப், அது பைடன் மீது விசாரணை நடத்துவதற்கு உக்ரேனிய தலைவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார்.
குற்றச்சாட்டை முன்வைத்தவர் யார்?

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரத்தை முன்வைத்தவர் குறித்த சில அடையாளங்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. இந்நிலையில், அவரது அடையாளங்களை கண்டறியும் முயற்சிகள் "மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும்" என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட உளவாளியை போன்று செயல்பட்டு, இதுகுறித்த தகவல்களை தற்போது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளவரிடம் கொடுத்தவர் குறித்து தான் அறிந்துகொள்ள விரும்புவதாக டிரம்ப் பேசும் ஒலிப்பதிவு வெளிவந்துள்ளது.
"என் மீதான புகாரை முன்வைத்துள்ளவருக்கு அந்த தகவல்களை கொடுத்தவர் யார் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனெனில், அது கிட்டத்தட்ட உளவாளிக்கு நிகரான செயல்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களிடம் தனிப்பட்ட முறையில் டிரம்ப் பேசியதாக கூறப்படும் ஒலிப்பதிவு லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸுக்கு கிடைத்துள்ளது.
கடந்த காலத்தில் அமெரிக்காவால் உளவாளிகள் தூக்கிலிடப்பட்டதை மேற்கோள்காட்டி, டிரம்ப் இவ்வாறாக மேலும் கூறுகிறார், "நாம் புத்திசாலிகளாக இருந்த அந்த நாட்களில், என்ன செய்தோம் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? உளவாளிகளையும், தேசத்துரோகத்தையும், நாம் தற்போது கையாள்வதைவிட அப்போது சற்றே வித்தியாசமாக எதிர்கொண்டோம்..."
டிரம்பின் இந்த கருத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலுள்ள மூன்று குழுக்களின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கூட்டு அறிக்கையில், டிரம்பின் கருத்துகள் "கண்டிக்கத்தக்க சாட்சி மிரட்டல்" மற்றும் குற்றச்சாட்டு விசாரணையைத் தடுக்கும் முயற்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












