கூகுள் மேப்ஸ்: 2 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கி இறந்த ஒருவரின் உடல் எச்சங்களை கண்டறிந்த கூகுள் மேப்ஸ் மற்றும் பிற செய்திகள்

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்து இறந்தவரின் உடல் எச்சங்களை கூகுள் மேப்ஸ் ஆப் கண்டறிய உதவியுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று ஃபுளோரிடாவின் லான்டனாவில் வில்லியம் மோல்ட் என்ற இந்நபர் காணாமல் போனார்.

அந்த காலகட்டத்தில் 40 வயதான இவர், ஓர் இரவு விடுதிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

வில்லியம் காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. ஆனால், அதற்கு பிறகு இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு (2019) ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று வெலிங்டன் பகுதியில் ஓர் ஏரி அருகே நீரில் மூழ்கிய கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

நீரில் இருந்து அந்த காரை மீட்டெடுத்த பின்னர், அதன் உள்ளே மனித எலும்புகூடு இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த பகுதியில் முன்னர் வசித்த ஒருவர், கூகுள் மேப்ஸ் மூலம் வில்லியமின் நீரில் மூழ்கிய காரை கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிறகு இந்நபர் அப்பகுதியில் தற்போது வசிக்கும் தன் நண்பரை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் தனது ட்ரோன் கேமரா மூலம் ஏரி நீரில் ஒரு கார் மூழ்கிய நிலையில் இருப்பதை கண்டறிந்துள்ளார். பிறகு இது தொடர்பாக போலீசாரை தொடர்பு கொண்டார்.

அதன்பின்னர், துரித நடவடிக்கையில் இறங்கிய போலீசார் காரை மீட்டு உடல் எச்சங்களையும் மீட்டுள்ளனர். வில்லியமின் குடும்பத்துக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இரவு 9.30 மணிக்கு, தனது பெண் தோழியை போனில் அழைத்து விரைவாக வீடு திரும்புகிறேன் என்று கூறிய வில்லியம் 22 ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் மேப்ஸ் மூலம் உடல் எச்சங்களாக கண்டறியப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுபஸ்ரீ: அதிமுக. பேனர் விழுந்து விபத்து: சென்னை இளம்பெண் பலி - கலைந்த கனடா கனவு

சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் பலியாகியுள்ளார். பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. பி.டெக் படிப்பை முடித்துள்ள இவர் இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

அந்தப் பகுதியில் சாலையில் உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மீடியனில் மட்டுமல்லாமல் சாலையின் இருபுறங்களிலும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

சுபஸ்ரீ அந்த வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, அவரது வாகனத்தில் மோதியது.

அமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: இறங்கி வந்த டொனால்ட் டிரம்ப் - கூடுதல் வரி விதிப்பு தள்ளிவைப்பு

சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை 2 வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த வரியை நல்லெண்ண அடிப்படையில் தள்ளி வைப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்த இந்த 5 சதவீத கூடுதல் வரியை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

'தோனி ஓய்வு குறித்து வந்த தகவல் பொய்யானது' - இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.பிரசாத்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறார் என்று வரும் செய்திகள் பொய்யானவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளதாக செய்தி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

எம்எஸ் தோனி, டி20 மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார், அந்த அறிவிப்பை வெளியிட செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தப்போகிறார் என்றும் இன்று பிற்பகல் வதந்திகள் பரவத் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து #Dhoni என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக தொடங்கியது.

இந்நிலையில் அவரது ரசிகர்கள், தோனி ஓய்வுப் பெறக்கூடாது என்று உருக்கமாக ட்வீட் செய்து வந்தனர்.

அரசு தொலைக்காட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன

இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளார் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 1982ஆம் ஆண்டு 6ஆம் இலக்க சட்டத்தின் கீழேயே, இலங்கையிலுள்ள அனைத்து தொலைக்காட்சி சேவைகளுக்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :